Sunday, September 16, 2007

"போனோமா வந்தோமான்னு இருக்கணும்"(இருநிமிடக் கதை)

இரவு மணி இரண்டு.

வேகமாய் நடந்துகொண்டிருந்த‌ மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
"சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.

அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது...

"அப்பா என்னை ஏன் தொந்தரவு பண்றே...நீ போய் கொடுத்துட்டு வரலாம்ல?"

"இல்லடா முன்னமாதிரி என்னால அலைய முடியல...கைகால் எல்லாம்
நடுங்க ஆரம்பிச்சுடுது வயசாகுதுல்ல?"

"அதுக்காக மும்பைல இருந்து நான் வந்து இந்த பூனாக்காரன பார்க்கணுமா?"

"இந்த ஒரு தடவை பொறுத்துக்கோ,இனி உன்னை நான் கூப்பிடல"

"சரி சரி உடனே கோவம் வந்துருமே?,நானே போறேன்"

இப்போது பூனே ரயில் நிலையத்திலிருந்து இரண்டுகிலோமீட்டர்தூரத்தில் இருக்கிறான் மகேசு.

மடியில் கனத்தை வைத்துக்கொண்டு யாருக்குத்தான் பயமிருக்காது?

இன்னும் அரைகிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரணாவ் சேட்டின் வீடு.

அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது "போனமா வந்தமான்னு" இருக்கணும் டா..
உனக்காக காத்துகிட்டு கிடப்பேன் சீக்கிரம் கொடுத்துட்டு
வந்துடு...
நாய்களின் குரைப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே போனது..

மகேசுக்கு நாய்கள் என்றால் ரொம்ப பயம்.. சின்ன‌ வ‌ய‌தில் ஒருமுறை
தெரு நாயொன்று விர‌ட்டிய‌தில் கிழே விழுந்து முட்டில் ஏற்ப‌ட்ட‌ த‌ழும்பு இன்னும் இருக்கிற‌து.
சே இந்த பிரணாவ் சேட்டுக்கு அறிவே கிடையாது என் உசிர எடுக்கிறானே என்று சலித்துக்கொண்டே நடந்தான் மகேசு.

அதோ அந்த‌ முனையில்தான் வீடு.. வீட்டை நெருங்கி மெதுவாய் க‌த‌வை
தட்டினான் மகேசு.
இருநிமிட‌ம் க‌ழித்து "கோன்" என்று தூக்க‌க‌ல‌க்க‌த்தில் கேட்டவாறே கதவை திறந்த
சேட்டின் நெஞ்சில்தான் கொண்டுவ‌ந்த‌தை கொடுத்துவிட்டு
விசில‌டித்துக்கொண்டே திரும்பி ந‌ட‌ந்தான் ம‌கேசு.

சேட்டின் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டு மிர‌ட்சியுட‌ன் தலை உயர்த்தி பார்த்த‌து ஒரு தெருநாய்.

3 Comments:

சோ.மஹாலெட்சுமி said...

Comment for "போனோமா வந்தோமான்னு இருக்கனும்":

ரொம்ப பெரிய ஆளுங்க நீங்க..

எனக்கு உங்களோட இந்த 5 கதைகளிலும் ரொம்ப புடிச்ச கதை இது தான்.
என் ஓட்டு இந்த கதைக்குத் தான்.

நான் கூட மகேசு ஏதோ பணமோ இல்ல ஏதோ நகையை தான் கொண்டு போறான்னு கதையோட முடிவுக்கு முன்னாடி வரையிலும் நினைச்சுட்டு இருந்தேன்..
நினைத்தது மட்டுமல்ல..என்னோட பழைய பயந்த நியாபகங்கள் அதாவது ஊருக்கு பணம் எடுத்துக்கிட்டு போகும்போது ராத்திரி முழுக்க பஸ்ல தூங்காம பயந்து பயந்து கண்ணு லேசா சொருகுனாலும் திடுக்கிட்டு, திடுக்கிட்டு முழிச்சுகிட்டு, உள்ளுக்குள்ளார பயந்து நொந்துக்குறது, அம்மா சொந்தக்காரவங்க வீட்டு விசேஷத்திற்கோ இல்லை ஊர் திருவிழாவிற்கோ நகையை போட்டு கூட்டிட்டு போகும்போது, பிள்ளைங்களோட விளையாடப்போனாலோ இல்லை எதற்கோ அம்மாவின் கைப்பிடியை லேசாக தகற்கும்போது "எங்க போனாலும் உடனே வந்துரனும், போட்டுருக்க நகையிலயும் ஒரு கண்ணு இருக்கணும்னு" எச்சரிக்கை பண்ணுவாங்களே அது எல்லாம் நியாபகத்துக்கு வந்தது..
ஆனால் கடைசியில கதையோட முடிவ படிச்சவுடனே நான் கூறியது "அடப் பாவி மனுஷா..!!.ச்ச..சம்பந்தமே இல்லாம ரொம்ப சின்ன பிள்ள தனமா என்ன எதை எதையோ நினைக்க வைத்து ரொம்ப அசிங்கப் படுத்திட்டாரே"...

உண்மையிலேங்க..கதையோட முடிவு வரிக்கு முன்னாடி வரையிலும் எதோ தெனாலி படத்தோட அப்பாவி கமலை சந்தித்து போன்று இருந்தது.. கதையின் முடிவில் தான் தெரிந்தது அது அப்பாவி தெனாலி அல்ல, தலைநகர ரைட்டுன்னு..
இருந்தாலும் அந்த ரைட் போட்ட ஸ்கெட்ச்சவிட நீங்க போட்டுருக்க ஸ்கெட்ச் சூப்பருங்க..

எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த கதை, கதையை எழுதி இருக்குற விதம், கதையோட முடிவு, முக்கியமா ரொம்ப அப்பாவி தனமா கதையை எடுத்துக்காட்டி ஏமாத்துற கதையோட தலைப்பு...எல்லாமே..
ஆனால் எனக்கு அதை எப்படி சொல்றதுன்னு தாங்க தெரியலை..

எப்படிங்க உங்களால மட்டும் இப்படில்லாம் யோசிக்க முடியுது..

காஞ்சனை said...

இந்த கதையின் புரிதல் "சேட்டின் நெஞ்சில்தான் கொண்டுவ‌ந்ததை.." என்ற வரிகளில் அடங்கியுள்ளது. நன்றாக இருக்கிறது.

சகாரா.

cheena (சீனா) said...

அருமையான சிறு கதை. நச்சென்ற முடிவு. எதிர்பாராத சட்டென்று திரும்பும் திருப்பம். ஒரு ஈடு பாடு இல்லாமல் படித்துக் கொண்டு போகும் போது நெஞ்சிலே ஆழமாக இறங்கி மனதிலே பதிகிறது. கதையின் உத்தி மிக நன்று.