Thursday, February 11, 2010

பூனை வாத்தியார் - சிறுகதை

 
ர் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் அப்பாவுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். நாளை காலை ரயில் நிலையத்திற்கு வருவதாக சொன்னார். வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு தொடர்பை துண்டிக்கும் தருவாயில் அந்த செய்தியை சொன்னார். பத்து நாட்களுக்கு முன் பூனை வாத்தியார் மரணித்துவிட்டாரென்று. அதைக் கேட்டவுடன்  துக்கத்தைவிட ஆச்சரியமே அதிகரித்தது என்னுள்.இதெப்படி சாத்தியம்? அவருக்கு இப்போது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து வயதுதானே இருக்கும்? பாறை போன்று இறுகிய தசைகளை கொண்ட கட்டுக்கோப்பான உடல் அவருடையதாயிற்றே? எப்படி இவ்வளவு விரைவானதொரு மரணம்? முயலை சூழ்ந்துகொண்ட வேட்டைநாய்களாய் கேள்விகள் என்னை சூழ்ந்துகொண்டு தின்ன ஆரம்பித்தபோது ரயில் வேகமெடுக்க ஆரம்பித்தது. பத்து வருடங்களுக்கு முன் அவரை சந்தித்த நிமிடங்களை அசைபோட்டபடியே பயணித்தேன் நான்.

------o0o-------
வேதக்கோவிலுக்கு பின்புறம் செல்கின்ற ஒத்தையடிப்பாதையில் மூன்று நிமிடம் நடந்தால் அவரது வீட்டை அடைந்துவிடலாம்.
வீட்டைச் சுற்றிலும் அடர்ந்திருக்கும் விதவிதமான குரோட்டன்ஸ் செடிகள்.மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடுதான் பூனை வாத்தியாரின்
வசிப்பிடம்.அவரது வீட்டிற்கு பின்னால் சலனமற்று கிடக்கிறது பாசிகள் படர்ந்த குளம். அவ்வப்போது நாரைகளின் சிறகடிப்புச் சத்தம் தவிர்த்து வேறெதுவும் கேட்பதில்லை. வாத்தியாரின் வீட்டில் எப்போது அவரை சுற்றிக்கொண்டிருப்பது அவர் வளர்க்கும் பூனைகள். பதினேழு பூனைகள் சிறியதும் பெரியதுமாய் வளர்த்து வந்தார்.வெள்ளை,பழுப்பு,கருமை என விதவிதமான நிறங்களில் அவை அவரைச் சுற்றி வந்தன.
அவரது வீட்டுக் கதவை திறந்து உள்நுழைந்தோம் நானும் அப்பாவும். பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் கணக்கில் முப்பது மார்க் நான் வாங்கியதையும் அதனால் டியூசனுக்கு சேர்த்துக்கொள்ளுமாறும் வாத்தியாரிடம் கேட்டுக்கொண்டார் அப்பா.
வீட்டைச் சுற்றி அலைந்துகொண்டிருக்கும் பூனைகளை பார்த்துக்கொண்டிருந்தேன் நான். குளத்தில் எறிந்த கல்லாய் ஒரு பூனை மட்டும் என்னுள் அலையடிக்க வைத்தது.உடலெங்கும் கருமையும் நெற்றியில் மட்டும்  வெண்மையும் கொண்டிருந்த அந்தப் பூனை தீர்க்கப்பார்வையுடன் என்னருகில் வந்துகொண்டிருந்தது. பற்றியிருந்த அப்பாவின் கைகளை இறுக்கிக்கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பியபோது அங்கும் அதே பூனை நிற்க கண்டு நடுங்கத் தொடங்கியது என்னுடல்.
அப்பா என்னை விட்டுச்சென்றவுடன்  திண்ணையில் உட்கார சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனார் வாத்தியார். கணக்குப்புத்தகத்தை திறந்துவிட்டு மெல்ல தலையுயர்த்தி அந்த கறுப்பு பூனையை தேடினேன். அதைக்காணவில்லை.
------o0o-------
ஊரில் எங்காவது பூனைக்குட்டிகள் தெருவோரம் கிடந்தால் வாத்தியாருக்கு செய்தி பறந்துவிடும். உடனே ஓடிவந்து குட்டிகளை கையிலெடுத்து வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார். பின், மார்போடு அணைத்தபடி குட்டிகளை தன் வீட்டிற்கு எடுத்து வந்து உணவூட்டுவார். குட்டிகளுக்கென்றே எப்போதும் ஒரு வேஷ்டித் தொட்டில் உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்.
நான்கைந்து வருடங்களுக்கு முன்புதான் எங்கள் ஊர் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தார் அவர். யாரிடமும் பேசுவதேயில்லை. அதிகாலையில் சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கும்போதுகூட யாராவது எதிர்பட்டால் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். கேட்கின்ற கேள்விக்கு கூட ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பதிலாக வரும். பேசிப் பேசியே வாழ பழகியிருந்த ஊர்மக்களுக்கு பூனைவாத்தியார் வித்தியாசமானவராக தெரிந்தார். பூனைகள் மீது அவர் கொண்டிருந்த ப்ரியத்தால் அவரை ‘பூனை வாத்தியார்’ என்றே அழைத்தனர்.அவரது சொந்தப்பெயரைக்கூட மறந்துவிட்டிருந்தனர்.
ஊருக்கு சற்று தள்ளியிருந்த குளக்கரையில் இருந்த வீட்டில் இவர் குடிபோனபோது ஊருக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.பல வருடங்களாய் யாரும் வசிக்காமல் எப்போதும் பூட்டியே கிடந்த வீட்டை இவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது பெரும் கேள்விக்குறியாகி கிராமத்து மனிதர்களின் மாலைவேளைகளை ஆக்கிரமித்துக்கொண்டது.
------o0o-------
பூனை வாத்தியார் அதிகாலையில் எழுந்து பள்ளி மைதானத்தை பத்து முறை சுற்றி வருவார். யோகாசனம் செய்வார். பிறகு வீட்டிற்கு முன்னாலிருக்கும் வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து வெகுநேரம் தியானத்திலிருப்பார். சில நேரங்களில் அவரை பார்ப்பதற்கு துறவி போலவே தோன்றும். பள்ளியில் மற்ற வாத்தியார்கள் பிரம்பால் மாணவர்களின் பின்புறத்தில் ருத்ர தாண்டவமாடும் போது இவர் மட்டும் எந்தவொரு மாணவனையும் அடிக்கவே மாட்டார். குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ அல்லது கீழ்படியாமல் திரிந்தாலோ அருகில் அழைத்து சன்னமான குரலில் அறிவுரை சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். பூனை வாத்தியார் ஒரு புதிராகவே தோன்றினார்.
------o0o-------
அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பூனைகளை பார்ப்பதற்கு அழகாய் தோன்றியபோதும் ஒருவித பயம் மனதை அரித்துக்கொண்டிருந்தது. தாய்ப்பூனையொன்று தன்குட்டியை கவ்விக்கொண்டு மெதுவாய் நடந்து சென்றது. வெகுநேரமாகியும் வீட்டிற்குள் சென்ற வாத்தியார் திரும்பவில்லை. எழுந்து கதவை தட்டினேன். பதிலில்லை. ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. செய்வதறியாது நின்றவன் கதவின் சாவிதுவாரம் வழியே உள்ளே பார்த்தேன். உடலெங்கும் மின்சாரம் பரவ அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். ஓடிச்சென்று வேதக்கோவிலுக்குள் நுழைந்து வெளியேறி எங்கள் தெருவுக்குள் நுழைந்தபோது அப்பா சைக்கிளில் எதிரே வந்துகொண்டிருந்தார். என்னைக்கண்டவுடன் பதற்றத்துடன் “என்னடா ஆச்சு? ஏன் இப்படி ஓடி…” அதற்கு மேல் அவர் பேசியது காதில் விழுவதற்குள் மயங்கி விழுந்தேன்.

------o0o-------
கண்கள் திறந்தபோது அம்மாவும் பாட்டியும் அருகில் அமர்ந்திருந்தார்கள். நார்க்கட்டிலில் என்னை கிடத்தி இருந்தார்கள். அம்மா என் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு கேட்டாள் “என்னய்யா நடந்துச்சு எதையும் பார்த்து பயந்துட்டியா?” சிறிதுநேரம் கண்கள் மருள ஏதேதோ உளறினேன். வாத்தியாரின் வீட்டிலிருந்து ஓடிவந்தது மட்டும் நினைவில் இருந்தது. எதற்காக ஓடிவந்தேன் என்பதும் அங்கு என்ன பார்த்தேன் என்பதும் கொஞ்சமும் நினைவில் இல்லை. இனி அவர் வீட்டிற்கு டியூசனுக்கு போகவேண்டாம் என்றார் அப்பா. அம்மாவின் மடியில் முகம் புதைத்து மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துபோனேன்.
------o0o-------
நினைவுகளிலிருந்து மீண்டபோது ரயில் எங்கள் ஊரை வந்தடைந்திருந்தது. வீட்டிற்கு போனவுடன் குளித்து உணவருந்தி வேதக்கோவிலுக்கு சென்றேன். பால்ய நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்போது கருநிற பூனையொன்று கடந்து சென்றதை பார்த்தேன். சட்டென்று பூனை வாத்தியாரின் ஞாபகம் வந்தது. அவர் இல்லாத வீட்டில் யார் அந்த பூனைக்குட்டிகளுக்கு உணவிடுவார்கள்? அவரற்ற தனிமையை அவை எப்படி எதிர்கொள்ளும்? அவர் வீட்டிற்கு போகவேண்டும் போலிருந்தது. நண்பர்களிடம் விடைபெற்று அந்த ஒற்றையடி பாதைவழியே நடக்க ஆரம்பித்தேன். முன்பைவிட நிறைய முட்புதர்களும்,காட்டுச்செடிகளும் பாதையின் இருபக்கமும் தென்பட்டன. சற்று தொலைவில் அவரது வீடு மயான அமைதியுடன் காட்சியளித்தது.

வீட்டை நெருங்க நெருங்க உள்நெஞ்சில் ஒருவித வெறுமை தோன்றுவதாக பட்டது. கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன். வேப்பஞ்சருகுகளால் நிறைந்திருந்தது முற்றம். ஒன்றிரண்டு பூவரச மரக்கிளைகள் காற்றில் ஒடிந்து விழுந்திருந்தன. ஒரு பூனையைக்கூட காணவில்லை. வீட்டின் கதவில் பெரியதொரு பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. பூனைகள் வேறு எங்காவது இடம்பெயர்ந்திருக்கும் என்றெண்ணியபடி திரும்பி நடக்க எத்தனித்தபோது வீட்டிற்குள்ளிருந்து பேச்சரவம் கேட்டது. வேறெந்த சப்தமும் இல்லாத அத்தருணத்தில் வீட்டிற்குள்ளிருந்து கேட்கும் ஒலி வினோதமானதாக தோன்றியது. மனதை பயம் சூழ தொடங்கினாலும் இருபத்தி ஏழு வயதுக்காரன் என்கிற இளமைத் திமிர் அந்த பயத்தை வளரவிடாமல் தடுத்தது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்துவிட கதவை நோக்கி வேகமாக நடந்தேன். சாவி துவாரம் வழியே உள்ளே எட்டிப்பார்த்தேன்.
மனித உடலும் கறுப்பு நிற பூனையின் தலையும் கொண்ட ஓர் உருவம் சிறியதொரு மேடை மேல் நின்று பேசிக்கொண்டிருந்தது. அதன் பேச்சை சுற்றிலும் அமைதியாக அமர்ந்த பெரும் பூனைக்கூட்டம் கேட்டுக்கொண்டிருந்தது. பூனைத் தலைகொண்ட அவ்வுருவத்தின் கைகளில் மினுமினுத்தபடி இருந்தது கூர்வாள். “வாத்தியாரின் மரணத்திற்கு பிறகு யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லை. பசியால் நம்மில் இருவர் மரணித்துவிட்டார்கள். அதற்கு ஊர்மக்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.வாருங்கள் நம் போரை ஆரம்பிப்போம்.வெற்றி நமதே” கூர்வாளை வான் நோக்கி உயர்த்தியபடி கர்ஜித்தான் அந்த பூனை மனிதன். இப்போது அவனது பூனை தலை மறைந்து புலியொன்றின் தலையாக உருமாறியது. உடல் நடுநடுங்க அங்கிருந்து ஓட திரும்பியபோது ஒரு முரட்டுக் கரம் என் தோள் பற்றி பின்னால் இழுக்க அதிர்ச்சியுடன் திரும்பினேன் அங்கே...
-நிலாரசிகன்.

Read More...

Sunday, December 20, 2009

சங்க மித்திரை - சிறுகதை


சங்க மித்திரை - சிறுகதை



ழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த சத்தமும் மணியின் குரைப்பும்.
வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்
தென்னந்தட்டி வேலியிலொன்றை பிரித்துவிட்டு பின்னாலிருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்தார் அப்பா.பதறியபடி பின்னால் ஒடினாள் அம்மா. என்னவென்றே தெரியாமல் தெரிந்துகொள்ளும் அவசரத்தில் அம்மாவை தொடர்ந்தேன் நான். தோட்டத்து கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் மித்திரை. கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றில் குதித்து அவளது முடியை பற்றிக்கொண்டார் அப்பா. சத்தம் கேட்டு தேங்காய் உரித்துக்கொண்டிருந்த பாண்டி அண்ணனும் இன்னும் சிலரும் ஓடி வந்தார்கள். பாண்டி அண்ணன் மோட்டார் ரூமிலிருந்து வடக்கயிற்றை கொண்டுவந்து கிணற்றுக்குள் ஒரு நுனியை வீசிவிட்டு மற்றொரு நுனியை அருகிலிருந்த வேப்பமரத்தில் கட்டினார். அதற்குள் மேலும் இருவர் கிணற்றுக்குள் குதித்து மித்திரையின் கைகளை பிடித்துக்கொண்டனர். ஏதோ முனகிக்கொண்டிருந்தாள் அவள். அவளது நீண்ட கூந்தல் கருமேகம் போல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. கட்டியிருந்த பச்சை தாவணி இறக்கைபோல் விரிந்து இருபுறமும் மிதந்தது. நார்கட்டிலை உள்ளிறக்கி அவளை மேலே கொண்டுவருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலானது.

விஷயம் கேள்விபட்டு மித்திரையின் அம்மா மூச்சிரைக்க ஓடிவந்தாள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவளை கையமர்த்தினார் அப்பா. அப்போதும் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள். உடலெங்கும் நனைந்திருக்க கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள் மித்திரை. கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறியிருந்தன.பார்வை மட்டும் விறைத்திருந்தது. கிணற்றில் ஏன் குதித்தாய் என்று ஒவ்வொருவராய் கேட்டு பதிலேதும் கிடைக்காமல் கலைந்து சென்றனர்.கடைசி ஆளாக நான் கிளம்பும்போது அவளது தோளை உலுக்கி "அந்த சண்டாளன இன்னுமாடி நெனச்சுகிட்டு கிடக்க?" மித்திரையின் அம்மா கேட்டது என் காதில் விழுந்தது. அந்தசண்டாளன் யாரென்று எனக்கும் தெரியும்.

o0o
சங்க மித்திரை எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில்தான் வசிக்கிறாள்.
அப்பா கிடையாது. ஒரே ஒரு தம்பி என்னுடன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தினக்கூலிக்கு வாழைத்தோட்டத்திற்கு செல்பவள். கறுப்பு, ஆனால் லட்சணம்.பார்த்தவுடன் எல்லோரிடமும் சிரித்து பேசுவாள்.கிண்டலும் கேலியும் கலந்த அவளது பேச்சில் லயித்து நிற்பாள் என் அம்மா. மித்திரை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அம்மாவின் காதுகளுக்கு வந்துவிடும். கருக்கலில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.அப்பா கடையை சாத்திவிட்டு வரும் வரை சலிக்காமல் தொடரும் பேச்சு. மேலத்தெரு வெள்ளைப்பாண்டியும் இவளுடன் வேலைபார்க்கும் செவ்வந்திக்கனியும் காதலிப்பதும்,செவ்வந்திக்கனியின் மார்பில் வெள்ளை என்று பச்சை குத்திகொண்டதும் மித்திரை மூலமாகவே தெரிந்துகொண்டாள் அம்மா.செவ்வந்திக்கனி அவள் அப்பாவுக்கு பயந்ததை விட நூறு மடங்கு அதிகம் மித்திரையின் குத்தலான பேச்சுக்கு பயந்தாள். "என்ன புள்ள வலமாருல வெள்ளன்னு குத்திகிட்ட இடமாரு சும்மாதான இருக்கு பாண்டின்னு குத்திகிட வேண்டியதானே?"சொல்லிவிட்டு சத்தம்போட்டு சிரிப்பாள்.

அம்மன் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் அவனை பார்த்தேன். பெல் பாட்டம் பேண்ட்டும்,நீளமான காலர் சட்டையுமாய் "ஒருதலை ராகம்" சங்கர் போலிருந்தான். அடர்த்தியான மீசையும் பளிச்சென்ற சிரிப்பும் அவனை பார்த்தவுடனே இந்த பொட்டல்காட்டில் இவன் அந்நியனாகத்தானிருக்க வேண்டும் என்று உணர்த்தியது. தர்மகர்த்தாவின் தூரத்து சொந்தம்,சென்னைக்காரன் என்கிற விஷயம் கேள்விப்பட்டவுடன் சிறுவர் பட்டாளம் அவனை சுற்ற ஆரம்பித்தது.நானும் குழாய் பேண்ட் அண்ணே குழாய் பேண்ட் அண்ணே என்று உள்ளுக்குள் பரிகசித்துக்கொண்டே பின் தொடர்ந்தேன். வாயாடித்திரிந்த மித்திரை வாய் பிளந்து ரசித்த முதல் ஆண்மகன் அவன் தான்.
வாழைத்தோட்டத்தை பார்க்க வந்தவனின் கண்களில் பூஞ்சிட்டாய் மித்திரை விழுந்ததும் அதன் பிறகு ஊர் அறியா பொழுதுகளில் இரு உயிர்கள் சந்தித்துக்கொண்டதும் தொடர்ந்தபடியே இருந்தன. என்னை கடக்கும்போதெல்லாம் பின்னந்தலையில் தட்டிவிட்டு "ஒழுங்கா படிடா இல்ல வாத்தியாருகிட்ட வத்தி வச்சுருவேன்" என்றவள் அவனது வருகைக்குப்பின் என்னை பொருட்டாகவே நினைத்ததில்லை. அவள் தம்பியை பார்க்க போகும்போதெல்லாம் ஏதாவது வம்பிழுத்தவள் இப்போது ஏதோவொன்றை இழந்தவளாய் கயிற்றுக்கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றபோது சுவற்றில் சாய்ந்துகொண்டு கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். கள்குடித்தவள் போல் கண்கள் பாதி திறந்தும் திறக்காமலும் இருந்தன. ஓடிச்சென்று அவள் மடியில் படுத்துக்கொண்டு பின் ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்று தோன்றியது எனக்கு. பின்னந்தலையில் அடிப்பவள் மூக்கை உடைத்துவிட்டால் என்னசெய்வது? பேசாமல் திரும்பி விட்டேன்.

o0o
அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு மித்திரை அமர்ந்திருந்த நேசப்பொழுதை அழுக்கு கண்களுடன் பார்த்துச்சென்ற எவனோ ஒருவன் தர்மகர்த்தாவுக்கு வாய்த்தந்தியில் செய்தியை தடதடத்தபோது திருக்கை வால் சாட்டையால் விளாசி தள்ளிவிட்டார் குழாய் அண்ணனை.
பெண்பிள்ளை என்பதால் மித்திரையை எச்சரித்து அனுப்பிவிட்டார்.மறு நாள் நொண்டிக்குதிரையாய் பஸ் ஏறிவிட்டான் அவன்.
அவன் சென்றபின் ஒருவாரம் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள் மித்திரை. கண்கள் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவளை பார்க்க பார்க்க எனக்கும் அழுகை வரும். அவள் கண்களை துடைத்துவிட்டு ,கைகளை பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நடக்க ஆசையாயிருக்கும். அவள் எனக்குள் நடக்கும் போராட்டங்களை உணர்வதில்லை என்று புரியும்போது ஏமாற்றத்துடன் விளையாட போய்விடுவேன். ஒரு மாதம் கழித்துதான் இந்த கிணற்றில் குதிக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியது. அந்த சண்டாளனை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாளே என்று கோபமும் மறுநிமிடம்
அனுதாபமும் என்னை சூழ்ந்துகொண்டது. யாரையும் திருமணம் செய்யாமல் என்னுடனே எப்போதுமிருப்பாள் என்கிற எண்ணத்தில் அவள் அம்மா
பாறாங்கல்லை தூக்கிப் போட்டாள்.

அடுத்த மாதமே தன் தம்பிக்கு கட்டி வைத்தாள். மித்திரை ஒரு வார்த்தையும் பேசாமல் எப்போதும் வாடிய முகத்துடனே இருந்தாள். திருமணம் முடிந்து இருவரும் பக்கத்து ஊருக்கு போனபோதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்னை சூழ்ந்துகொண்டது.
அவளும் புகுந்தவீடு போவதற்கு முதல்நாள் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அம்மா எதுவும் மனசுல வச்சுக்காம நல்லா குடும்பத்த நடத்தும்மா என்றவுடன் தலையை குனிந்துகொண்டாள். திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த எனக்கு அவளது தலைகுனிவை கண்டவுடன் கோபமாக வந்தது. எங்கும் எதற்கும் தலை குனியாதே மித்திரை. நீ நல்லவள். மனம் திரும்ப திரும்ப அதே வரிகளை சொன்னபோது என்னருகில் வந்து "உன்னை விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா இருக்குடா" என்றாள்.எதிர்பார்க்கா இவ்வார்த்தைகள் மனதின் உட்சுவர்களில் மோதி பலமுறை எனக்குள் ஒலித்தது. மித்திரைக்கு என்னை பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் என் பிரிவு வருத்தம் தருவதாக இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்வீட்டில் இருந்தபோது நினைத்த நேரமெல்லாம் மித்திரையை ஓடிச்சென்று பார்த்து, பேசி வளர்ந்தவன் அவளது பிரிவை தாங்கமுடியாமல் துடிதுடித்தேன்.

o0o

பள்ளிமுடிந்து கல்லூரியில் இளங்கலை பயில கோவைக்கு சென்றுவிட்டபின்பு வாழ்க்கை தடம் மாறியது. நல்லதொரு வேலை கிடைத்து திருமணம் முடிந்து என் மகள் பிறக்கும்வரை என் வாழ்விலிருந்து மித்திரை எனும் பெண் மறக்கப்பட்ட ஜீவனாகியிருந்தாள். பிரசவ வலியெடுத்து
மருத்துவமனைக்கு விரைந்து மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியிலிருந்த பெஞ்சில் அமர்ந்தபோது எதிர் பெஞ்சில்
பெண்ணொருத்தி அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்கிற வேண்டுதலில் மனம் ஓடிக்கொண்டிருந்தது.சிறிது நேர ஆசுவாசத்திற்கு பின் எதிர் பெஞ்சை பார்த்தபோது லட்சம் சில்லுகளாய் உடைந்துபோனது இதயம். என் பால்யகனவுகளில் தாவணிதேவதையாய் வலம்வந்த என் மித்திரை எனக்கு முன் அமர்ந்திருக்கிறாள்.
காலம் அவளது செளந்தர்யத்தை சலவை செய்திருந்தபோதும்
சுருக்கங்கள் இல்லாத விரல்கள் வனப்பின் கடைசி நிமிடங்களில் பூமி பார்த்துக்கொண்டிருந்தன. கருமை நிறத்தாலான மெழுகு சிலை போல் என்னெதிரில் அமர்ந்திருந்தவளின் வயது நாற்பதை கடந்திருக்கும் என்பதை நம்புவது கடினமானதாய் இருந்தது.

"மித்திரை" என் குரல்கேட்டு திடுக்கிட்டவள் யாரென்று பார்வையால் வினவியபோது,சிறுவயதில் அவள் பிரிந்த அன்று ஏற்பட்ட பிரிவின் வாசம் என் நாசிக்குள் நுழைந்து குரலை உடைத்தது. "நான்....நான்..எதிர்வீட்டு செல்வராசு". உடன் மலர்ந்த விழிகளுடன் அருகில்வந்து கண்களுக்குள் உற்றுப்பார்த்தபடி கேட்டாள் "இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கியா ராசு?". சொல்லமுடியாத உணர்வுகளால் அதுவரை கட்டிவைத்திருந்த கண்ணீர் பொத்துக்கொண்டது. "நீ இன்னும் மாறவே இல்ல" என் கண்ணீர் துடைக்க கைகள் உயர்த்தியவள் துடைக்காமல் பின்னகர்ந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தாள் கொண்டாள். அப்போதுதான் அவளது சேலையின் நிறம் வெண்மை என்பதை கவனித்தேன்.

o0o
"பறவை போல் சிறகிருந்தால் எவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கும் இந்த வாழ்க்கை" சங்கமித்திரை என்னிடம் சொன்னபோது
குளக்கரை படிக்கட்டில் உட்கார்ந்தபடி வறண்ட குளத்தை பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தேன். எவ்வித சலனமுமின்றி
படிக்கட்டில் ஊர்கின்ற கட்டெறும்புகளை கால்களால் நசுக்கிக்கொண்டிருந்தாள். என்னை விட பத்து வயது பெரியவள் எனினும் அவளை அக்கா என்று ஒருபோதும் நான் அழைத்ததில்லை. முதன் முதலில் அக்கா என்றபோதே "அக்கான்னு சொல்லாதடா பேர் சொல்லியே கூப்பிடேன்" செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு அவள் நடந்து சென்றது இருபது வருடங்கள் கழித்தும் என்னுள் அப்படியே இருக்கிறது. என்னை விட பெரியவளை அக்கா என்றழைக்காமல் பெயர் சொல்லி கூப்பிடுவது முதலில் கடினமாக தோன்றினாலும் உள்ளுக்குள் இனம் புரியாத சிலிர்ப்பு அப்போது இருந்தது.

"என்ன அப்படி புதுசா பார்க்குற?" மித்திரையின் இரண்டாவது கேள்வியில் தன்னிலை மறந்த உலகத்திலிருந்து இயல்புக்கு திரும்பினேன். "ஏன் சிறகிருந்தா உயர பறக்கலாம்னு நெனச்சியா?"என் கேள்விக்கு இரு நிமிட மெளனத்தை பதிலாக்கியவள் மெளனம் உடைத்து "இல்ல யாருமே பார்க்காத இடத்துக்கு தூரமா போயிடலாம்ல,அதான்"சொல்லி முடிக்கும்போது அந்த அழகிய கண்களில் நீர்கோர்த்திருந்தது.

"நான் இருக்கேன்ல? என்கூடவே இருப்பியா? என்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா?" துயரம் படர்ந்த வார்த்தைகளால் சன்னமாய் அவளிடம் கேட்டேன். சற்று நேர அமைதிக்குப்பின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு என் அருகில் வந்தவள் பின்னந்தலையில் தட்டி "உன்கூடதான் இருப்பேன் ராசு" என்றபடி என் விரல் பற்றிக்கொண்டு உடன் நடக்க ஆரம்பித்தாள்.என் மகளின் பிஞ்சு விரல்களை தொட்ட போது ஏற்பட்ட ஸ்பரிசத்தை நினைவூட்டியது அவளது தொடுகை.தாய்மை நிரம்பிய அந்த ஸ்பரிசத்தில் மீண்டும் சிறுவனாக உருமாற துவங்கியிருந்தேன் நான்.

-நிலாரசிகன்.


(டிசம்பர் மாத அகநாழிகை இலக்கிய இதழில் வெளியான படைப்பு)

Read More...

Tuesday, December 1, 2009

ஒரு கரு நான்கு கதைகள்!





 முன்கதைச்சுருக்கம்:

[அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,
அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும்
பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.
குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின்
பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.
மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.]


வேலியோர பொம்மை மனம்
             

  ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்.அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மிருதுவான அதன் தலையில் முத்திட்டு மகிழ்ந்தாள். அப்பாவும் அம்மாவும் கண்கள் தளும்ப யாரோ உருவாக்கிய பொம்மையை ரசிக்கும் தாங்கள் உருவாக்கிய பேசாபொம்மையை ரசித்துக்கொண்டிருந்தபோது, அவள் கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

                     ஆறு வருடங்களுக்கு முன் ஜெயா பிறந்தபோது அப்பாவை விட அம்மாதான் அதிகம் சந்தோஷப்பட்டாள். போரில் காலை இழந்ததால் மகன் பிறப்பான் தன்னை விட சிறந்த வீரனாக வலம் வருவான் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. பிறந்தது மகள் என்றபோது வெளிப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மகளை ஆண்பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்றே நினைத்திருந்த அப்பாவின் எண்ணத்தில் பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்தது. காதுகேளாத, வாய்பேச முடியாத குழந்தையாக ஜெயரஞ்சனி பிறந்திருந்தாள். தவமிருந்து பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு தவமுதல்வன் மீதே வெறுப்பை உமிழ்ந்தார் அப்பா. துடிதுடித்து போனாள் அம்மா. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்தன நாட்கள்.
                     ஜெயாவின் உலகம் பொம்மைகளால் நிறைந்தது. நாய்க்குட்டிகளும், சிங்கங்களும், யானை பொம்மைகளும் மட்டுமே ஜெயாவின் மௌனமொழியைப் புரிந்துகொண்டன. அவள் இருப்பே பொம்மைகள் சூழ என்றாகிப் போனது. மனதின் மொழியை கண்களால் வெளிப்படுத்தி  பொம்மைகளுடன் அவள் உரையாடுவதை வேதனையுடன் பார்த்துவிட்டு நகர்வாள் அம்மா. ஆனால் படிப்பில் எல்லோரும் ஆச்சர்யமூட்டும் வகையில் கூர்மை மிக்கவளாக திகழ்ந்தாள் அவள். அம்மா சைகையில் கற்று கொடுக்கும் பாடங்களை உடனே புரிந்துகொள்வாள். அப்பா வாங்கி தந்திருக்கும் கரடி பொம்மையை இடது தோளில் சாய்த்தணைத்தபடியே தனக்கு  மட்டுமேயானதொரு மௌன உலகில் நடமாடுவாள்.
                     ஒலியறியா ஜெயாவின் செவிகள் அந்த துயர்மிகுந்த இரவில் விழுந்து வெடித்த வெடிகுண்டின் பெருஓசையை கேட்டுணர்ந்து கொள்ளவில்லை. அவள் உறக்கத்திலிருந்தாள். இரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் பொம்மைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த ஜெயாவை தட்டியெழுப்பியபோது, திடுக்கிட்டு எழுந்தாள். அம்மாவைக் கண்டவுடன் பயத்தில் கண்கள் மருள கரடி பொம்மையை கட்டிக்கொண்டவளின் காலடியில் விழுந்து மரணித்தாள் அம்மா.

அநாதை என்னும் வக்கிர சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது. முள்வேலிக்குள் தனக்கு மிகவும் பிடித்தமான கரடி பொம்மையை அணைத்தபடி வெளிர் மஞ்சள் நிற பாவாடையில் உணவுக்காக தட்டை ஏந்தி நின்றுகொண்டிருந்தாள். கண்ணீர் அவளது பிஞ்சு மனதின் வலிகளை மொழிந்து கொண்டிருந்தது. நேற்றுவரை உணவூட்டிய அம்மாவின் நினைவுகள் அவளது கன்னத்தில் கோடுகளை தீட்டிச் சிந்தின. சக மனிதனின் மரணத்துயரின் ஓலமும், உறவுகளின் பிரிதலினால் ஏற்பட்ட துயரமும் அவளால் உணரமுடியவில்லை எனினும், அவளது இதயம் அந்த வலியை உணர்ந்துகொண்டது.
பகலெல்லாம் வெய்யிலின் உக்கிரமும், இரவின் கடுங்குளிரும் இப்போது ஜெயாவுக்கு பழகி இருந்தன. சுற்றிலும் முள்வேலியிட்ட உடைந்த கட்டிடமொன்றில் அவளும் இன்னும் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களது பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில் ஒருவன் மிகவும் மூர்க்கமானவனாக தோன்றினான். இரக்கமற்ற அவனது கண்களை பயத்துடன் பார்ப்பாளவள். அவனது தோற்றமும் கன்னத்திலிருக்கும் வெட்டுத்தழும்பும் அவனை கதைகளில் வரும் பூச்சாண்டியை நினைவூட்டின. அவளுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்கும் அவனது மௌன மிரட்டல் மேலும் அச்சத்தைத் தந்தது. ஜெயாவின் அருகில் வந்தவன் அவளது பொம்மையை பறித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்தபோது அருகிலிருந்த கல்தூணுக்கு பின் ஒண்டிக் கொண்டாள்.
                     மறு நாள் அதிகாலை வெளியே சென்றவள், இரு பாதியாய் முள்வேலியோரம் கிடந்த பொம்மையை கண்டு அழுதுகொண்டே அந்த பிய்ந்த பொம்மையை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அப்படியே உறங்கியவளின் கனவில் கரடிபொம்மைகள் உயிர்ப்பெற்று அவளோடு ஓடியாடி விளையாடின.

அவர்கள் தருகின்ற ரொட்டிகளை வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. வரிசையை கட்டுப்படுத்தியவர்களுள் அந்த முரடனும் இருந்தான். எல்லோரும் வாங்கி சென்றபின் ஜெயா ரொட்டியை வாங்கினாள். பசியில் ரொட்டித்துண்டு இனித்தது. ரொட்டியைக் கடித்தபடி நடந்தவளின் பார்வையில் களைத்து கல்லொன்றின் மீதமர்ந்த முரட்டுச் சிப்பாய் தெரிந்தான். சோர்வாக அவன் அமர்ந்திருப்பதை கண்ட ஜெயா அவனருகில் சென்று  ரொட்டித்துண்டில் ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொன்றை அந்த முரட்டு ராணுவவீரனுக்கு கொடுக்க கைநீட்டினாள்.
                   தன்னை நோக்கி நீள்கின்ற பிஞ்சுவிரல்களும், ரொட்டித்துண்டும், அதன் வெள்ளை மனதும் கண்டவன் முதல் முறையாக மெல்லியதாய் தன்னுடல் நடுங்குவதை உணர்ந்தான். தனிச்சையாக அவனது கைகள் நீண்டன.
                   அவனுக்கு ஒரு ரொட்டியை கொடுத்துவிட்டு தன் ரொட்டித்துண்டை கடித்தபடி, இடது கையில் பிய்ந்த கரடி பொம்மையை அணைத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தாள் ஜெயா.

*******************************

அடலேறுவின் கதை படிக்க இங்கே செல்லவும்.
ஜனாவின் கதை படிக்க இங்கே செல்லவும்.
அதிபிரதாபனின் கதை படிக்க இங்கே செல்லவும்.

Read More...

Thursday, November 26, 2009

தாய்மை

கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். தலைப்பாகைக்குள் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து குலுக்கிப்பார்த்து திறந்தபோது உள்ளே ஒரே ஒரு உடைந்த தீக்குச்சி மட்டுமே இருந்தது. தீப்பெட்டியை தூர எறிந்துவிட்டு எதிரே வந்துகொண்டிருந்த முதியவரை வழிமறித்தான்.

"நெருப்பு இருக்கா பெருசு?" கையில் அரிவாளுடன் நெருப்பு கேட்டால் யாருக்குத்தான் பயம் வராது? அதுவும் கண்கள் இரண்டும் சிவந்து உக்கிரத்துடன் அரை பனைமர உயரத்தில் ஒருவன் கேட்டால் குலைநடுங்காமல் என்ன செய்யும்? தீப்பெட்டியை கொடுக்கும் போது கை நடுங்கியது பெரியவருக்கு. பீடிக்கு நெருப்பு வைத்துவிட்டு தீப்பெட்டியை அவரிடம் கொடுக்கும்போது "இன்னைக்கு இந்த பீடி எரியுற மாதிரி நாளைக்கு எம் பொஞ்சாதி எரிவா" என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான் கந்தசாமி. ஒன்றும் புரியாமல் நகர்ந்து சென்றார் பெரியவர்.

மனதிற்குள் பல கேள்விகள் இருந்தாலும் தன்னுடன் வேலை செய்யும் இருளப்பன் சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் கந்தசாமியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

"என்ன கந்தா ஒம் பொஞ்சாதி அடிக்கடி நம்ம தோட்டத்து மோட்டார் ரூமுக்கு போயிட்டு வர்றா? காலம் கெட்டு கெடக்குது அவ்வளவுதான் சொல்லுவேன்"
இருளப்பன் வைத்த தீ கந்தசாமியின் கண்களில் தெரிந்தது.

நடையின் வேகத்தை கூட்டினான். அரிவாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்திருந்தது கந்தசாமியின் வலதுகை. இவனுடைய வேகத்தைக் கண்டு
ஊர்க்கோடியில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வெட்டியான் "ஊருக்குள்ள இன்னைக்கி ஒரு பொணம் விழுதுடோய்" என்று சந்தோஷமாக சங்கில் படிந்திருந்த தூசியை பழைய துணியால் துடைக்க ஆரம்பித்தான்.


கந்தசாமியின் அக்காள் மகள்தான் காமாட்சி. கட்டினால் மாமாவைத்தான் கட்டுவேனென்று ஒத்தைக்காலில் நின்று கந்தசாமியை திருமணம் செய்துகொண்டவள். அவளா இப்படி? இருளப்பன் முதலில் சொன்னபோது நம்பாமல் அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு போய்விட்டான் கந்தசாமி.

ஆனாலும் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. எதற்காக தினமும் இரு முறை தோட்டத்திற்கு காமாட்சி போகவேண்டும். அதுவும் இந்த கருக்கல் நேரத்தில் அவளுக்கு அங்கே என்ன வேலை? தனக்குள் இருந்த சந்தேக மிருகம் மெல்ல வளர்ந்து பெரு உருவமாய் காட்சியளிக்க ஆரம்பித்தவுடன் குடிசைக்கூரையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

போன மாதம் நிறைமாத கர்ப்பிணியாக காமாட்சி இருந்தபோது இருந்த சந்தோசமும், இறந்தே குழந்தை பிறந்ததை தயக்கத்தோடும் கண்ணீரோடும் காமாட்சியிடம் சொன்னபோது கொஞ்ச நேரம் ஓவென்று அழுதவள் பின்னர் இவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு "நீங்கதான் மாமா எனக்கு கொழந்த எல்லாமே" என்று அவள் உருகியபோது அடைந்த சந்தோஷமும் இப்போது அவளை வெட்டி எறிய போகின்ற நேரத்தில் கந்தசாமிக்கு நினைவுக்கு வந்தன.

தான் வேலைசெய்யும் தோட்டத்தின் முதலாளி நல்லவர்தான் ஆனால் அவரது மகன் தான் சரியில்லை என்பது கந்தசாமியின் நெடுநாளைய எண்ணம். வெளிநாட்டில் படித்தவன் என்பதால் எப்போதும் "டிப்-டாப்" ஆசாமியாக உலா வந்த முதலாளியின் மகனை ஊரிலுள்ள இளவட்ட பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்பிளந்தார்கள். போன வாரம்கூட முதலாளியின் வீட்டுவேலைக்கு காமாட்சி போய்வரும்போது கையில் பெரிய பெளடர் டப்பா ஒன்றை கொண்டுவந்தாள். "பாரு மாமா எவ்ளோ வாசமா இருக்கு, நம்ம சின்ன மொதலாளி தந்தாக" வெள்ளந்தியாக அவள் சொன்னதை அன்று இவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.


இத்தனைநாட்கள் தன்னை முட்டாளாக்கிவிட்டாளே அந்த பாதகி என்று கருவிக்கொண்டே தோட்டத்தை வந்தடைந்தான் கந்தசாமி. தூரத்தில் மோட்டார் ரூம் தெரிந்தது. அதற்குள்தானே இருக்கிறார்கள் இருவரும்? பெளடர் கொடுத்து மயக்கிய முதலாளியின் மகனின் தலையை இரண்டாக பிளக்காமல் இந்த அரிவாள் கீழே இறங்காது..வரப்பில் விறுவிறுவென்று நடந்து மோட்டார் ரூம் நோக்கி முன்னேறினான்.
மோட்டார் ரூமின் கதவு சாத்தப்பட்டிருந்தது. சேற்றுக் காலால் ஓங்கி ஒரு மிதி மிதித்ததில் அந்த தகரக் கதவு படாரென்று திறந்துகொண்டது. சுவர்பக்கம் திரும்பி தன் ஆடையை சரிசெய்து கொண்டிருந்த காமாட்சி கதவு திறந்த சத்தத்தில் வெடுக்கென்று திரும்பி பார்த்தாள். கையில் அரிவாளும் கண்களில் வெறியுடனும் நின்றிருந்த கந்தசாமியை பார்த்தவுடன் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டாள் காமாட்சி. பின் சுதாரித்து பேச ஆரம்பித்தாள்.

"என்னை மன்னிச்சுடு மாமா. உனக்கு தெரியாம இங்க வந்தது எந்தப்புதான். நம்ம குழந்த செத்தே பொறந்ததால மாரு கட்டி வலி எடுக்கும்போதெல்லாம்
வீட்டு புறவாசல் பக்கத்துல நின்னு தாய்ப்பாலை பீச்சி வெளியேத்துவேன். அப்போதான் ஒரு தெருநாய் நம்ம வீட்டு வேலிக்கு பக்கத்துல ஆறு குட்டி போட்டிருக்கறது தெரிஞ்சது.
போன வாரம் கார்பரேசன் கார படுபாவிங்க அந்த தெருநாயயும் நாலு குட்டிகளையும் பிடிச்சிட்டு போயிட்டாங்க. பஞ்சாரத்துக்குள்ள ரெண்டு குட்டிங்க கிடந்ததால இந்த ரெண்டும் தப்பிச்சிடுச்சி. உனக்குதான் நாய்,பூனையெல்லாம் பிடிக்காதே. அதனாலதான் குட்டிகளை கொண்டு வந்து இந்த மோட்டார் ரூமுல வச்சிருக்கேன். வீணா போற தாய்ப்பாலை இந்த குட்டிங்க ரெண்டும் குடிக்கிறத பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? அங்க பாரு மாமா" கடகடவென்று பேசிவிட்டு அந்த சிறிய அறையின் மூலையை நோக்கி கைகாட்டினாள் காமாட்சி.

சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில் இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.
புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.

Read More...

Tuesday, November 24, 2009

வேட்கையின் நிறங்கள்




1.
வளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது.கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா.பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட நொடி முதல் என்னுலகில் வலம் வந்த ஆண்கள் அனைவரும் கரைந்து மறைந்துபோனார்கள்.
என் அருகில் அமர்ந்தபோது அவள் உடலிலிருந்து பரவிய வாசனைக்கு என் பெண்மையை தட்டி எழுப்பும் கரங்கள் இருந்ததோ என்றே எண்ணி வியந்தேன். வேதா என்கிற என் பெயரை வெறுக்க ஆரம்பித்து எப்போதும் நதியா என்றே முணுமுணுக்க துவங்கியது இதழ்கள்.யாராவது நதியா என்றழைத்தால் சட்டென்றொரு நிமிட சில்லிப்பு உடலை ஆக்கிரமித்துக்கொள்ளும். பேனா அல்லது ஏதோவொன்று வாங்க அவளது கைவிரல்கள்
என்னிடம் நீள்கின்றபோதெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அகத்தூண்டலில் திண்டாடினேன் நான். நதியா உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட முயன்று முயன்று நான் தோற்பதை எப்போது அறிந்துகொள்வாள் அவள்?

"என்னடி திரும்பவும் கனவுக்கு போயிட்டீயா?" நதியா என் வகுப்பில் சேர்ந்த பொழுதுகளை அசைபோட்டபடி படுக்கையில் கிடந்தவளை உசுப்பியது அந்தக் கேள்வி.படுத்துக்கொண்டே தலை திருப்பி அவளை பார்த்தேன்.நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸுமாய் நின்றிருந்தாள்.
ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. "ஒண்ணுமில்ல நதி...சரி ஆபீஸ் கிளம்பிட்டியா?" அந்த நீலநிற சட்டையை ரசித்துக்கொண்டே கேட்டேன்.

"ஆமாடி இன்னைக்கு சீக்கிரம் போகணும் ஒரு ப்ராஜக்ட் டெட்லைன்,சாயங்காலம் வர லேட்டாகும் கோவிச்சுக்காத செல்லம்" என் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.

மீண்டும் நதியா என் வாழ்க்கைக்குள் வந்த அற்புத பொழுதுகளை நினைத்தபடி படுக்கையில் விழுந்தேன்.

2.
ப்பாவின் அடிகளை அம்மாவால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். குடித்து சீட்டாடி குடும்பத்தை சீரழித்திருந்தார் அப்பா.அம்மா ஆசிரியை என்பதால் வீட்டில் அடுப்பெரிந்தது. நான் அம்மா அப்பா இதுதான் எங்கள் குடும்பம்.அப்பா என்று அழைக்க விரும்பாததால் அவன் என்றுதான் அம்மாவிடம் பேசுவேன்.
வேலைவெட்டி ஏதுமின்றி எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் அவனை அம்மா எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாள் என்பது புரியாத ஒன்றாகவே இருந்தது எனக்கு.

ஆண்களை காணும்போதெல்லாம் அவனுடைய சிகப்பேறிய கண்கள்தான் என்னை ஆட்கொள்ளும்.எந்தவொரு ஆணும் அவனை போலவே துர்நாற்றமெடுக்கும் உடலையும் வெறிநிறைந்த சிகப்புக்கண்களையும் கொண்டிருப்பதாக தோன்ற ஆரம்பித்தபோது எனக்கு பதினான்கு வயது முடிந்துவிட்டிருந்தது. பூத்து நின்ற நேரம் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வீடு நிறைத்திருந்தனர் சொந்தங்கள். அப்போதுதான் முதன் முதலாக மாதவனை பார்த்தேன். என் அத்தை மகன். அரும்பு மீசையும் பூனைமுடி தாடியுமாக திரிந்துகொண்டிருந்தவன் அவ்வப்போது ஓரக்கண்ணில் என்னை பார்த்தது உள்நெஞ்சை வருடுவது போலிருந்தது. ஆண்களே பிடிக்காத எனக்குள் மாதவன் மட்டும் வெள்ளைநிறமும் கருமைநிறமும் கொண்ட ஒளிவீசும் கண்களை கொண்டவனாக தோன்றினான். அந்தக் கண்களும் என்னை தின்றுவிடும் ஓரப்பார்வையும் ஏதேதோ புரியாத உணர்ச்சிகளை தெளித்துச்சென்றன.

மாதவன் எங்கள் வீட்டிலிருந்த ஒரு வாரமும் பல்லாயிரக் கணக்கான யுகங்களுக்கு சமமான வசீகர வாழ்க்கையை எனக்கு தந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன்.கள்ளச்சிரிப்பிலும் திருட்டுத்தனமான பார்வையிலும் மாதவன் என்னை சுற்றி வந்தான். யாருமற்ற அதிகாலையில் கால்களில் ஏதோ நெருடியபோது சட்டென்று விழித்து அதிர்ந்தேன். என் முழங்கால் நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது மாதவனின் விரல்கள். வெடுக்கென்று கால்களை பாவாடைக்குள் மறைத்துக்கொண்டேன். மாதவனின் கண்கள் ரத்த சிவப்பாக மனதெங்கும் காட்சியளித்தது.என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.மாதவன் போய்விட்டான். எங்கள் வீட்டிலிருந்தும் என்னிலிருந்தும்.

3.



மாதவனின் பிரிவுக்கு பிறகு யாரிடமும் அதிகம் பேசாத மெளனியாக இருப்பதே என் இயல்பாகிப்போனது.
ஆண்களைக் காணும்போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் என்னை சூழ்ந்துகொள்ளும். என் அம்மா வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியிலேயே படித்ததால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.படிப்பில் மட்டுமே கவனம் திசைதிரும்பிய நேரத்தில்தான் நதியாவின் வருகை நிகழ்ந்தது.

கடைசி பெஞ்சில் என்னருகில் நதியா அமர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளது தொடுதலை ரசித்துக்கொண்டே இருந்தேன். எதனால் நதியா என்னுள் வந்தாள்? என்ன உறவு இது? ஏதும் புரியும் நிலையில் அப்போது நானில்லை.அது பிடித்திருந்தது. அவளறியா பொழுதுகளில் அவளது பேனாக்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவளது வாசம் நிறைந்திருக்கும் புத்தகங்களை நுகர்வதும் விவரிக்க முடியாத பெரும் கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கியிருந்தது.

நதியா என்னைப்போன்றே மெளனத்தை நேசிப்பவளாக இருந்தாள்.ஆனால் தவறு செய்பவர்கள் அது ஆசிரியையாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காண்பிப்பாள். ஒருமுறை எங்கள் பள்ளியின் வாசலருகே நடந்த விபத்தொன்றில் தவித்த பெண்ணுக்கு உடனே இரத்தம் தர முன் வந்தவள் நதியா. இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகம் கவர்ந்தது அவளது நீலநிற கண்கள். எப்போதும் பேசும் கண்கள்.
துயர்மிகுந்த இரவுகளில் அவளது கண்களே என்னுடன் உரையாடின. காந்தம் நிறைந்த அவளது பார்வையில் மெய்மறந்து சொல்ல வந்த வார்த்தைகள் தொலைந்து நின்ற நாட்கள் ஏராளம். நீலநிற வானத்தில் நதியாவும் நானும் மேகங்களினூடாக பயணிப்பது போல் கனவு கண்டிருக்கிறேன்.அவள் வாசம்தான் என் சுவாசப்பையை எப்போதும் நிரப்பியபடி இருந்தது.நதியாவிடம் எப்படி சொல்வது என் அக தவிப்பை?

4.

ன்றொரு நாள் பள்ளி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போனபின் நானும் நதியாவும் தனித்திருந்தோம். அவள் கண்கள் நீலநிறத்தை இழந்திருந்தது அன்றுதான். இரண்டு பாடங்களில் பெயிலான வருத்தம் தாளாமல் என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். எனக்குள் ஏதோ சடக்கென்று விழித்துக்கொண்டது.ஆறுதலாய் அணைத்துக்கொண்டு அவள் நெற்றில் முத்தமிட்டேன். மின் அதிர்வுகள் உடலெங்கும் பரவி தனித்தீவில் நானும் அவளும் மட்டுமே தனித்திருப்பதாக கற்பனை விரிந்தபோது என்னை ஏறிட்டு பார்த்தாள். மெல்ல அவளது கண்களின் நீல நிறம் அடர்த்தி பெற்று விஷ நாகத்தின் கண்களைபோல் உருண்டது. கன்னம் நனைத்த கண்ணீர்க்கோடுகளில் முத்தமிட்டேன். இறுக என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். திரியின்றி எரிந்து சாம்பலாகி நாங்கள் மீண்டபோது அவள் கைகளுக்குள் நானொரு சிறுமுயலாய் கிடந்தேன்.

அடுத்த இருவருடங்கள் அருகிலிருக்கும் நகரத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தோம். விடுதியில் ஒரே அறை. என் கரம் பற்றி கனவுகளை ரசிக்கும் காதலனாய் உடல்பற்றி உயிர் மீட்கும் கணவனாய் நதியா மாறியிருந்தாள்.
என் வானமெங்கும் அவளது கண்களின் நிறம் வழிந்துகொண்டிருக்கும். உடல் பொருள் அனைத்தும் நதியாவின் சொந்தமான தருணம் கல்லூரிக்குள் நுழைந்தோம்.மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் நதியாவின் அடிமைப்பெண்ணாக வசிப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. விடுதி அறைக்குள் அவள் கணவனாக நான் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை எவ்வித கஷ்டங்களுமின்றி நகர்ந்தது.

மூன்றாம் வருடத்தின் கடைசி நாளில் அம்மா கல்லூரிக்கு வந்திருந்தாள். கன்னத்தில் புதியதொரு வடு தென்பட்டது.ரத்தக்காட்டேரியாக அவள் கணவன் மாறியிருக்கலாம். வந்தவள் சொன்ன செய்தி கேட்டு உடைந்து அழுதேன். மாதவனுக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்போவதாக அம்மா சொன்னாள். அம்மா அப்பாவிடம் மட்டும்தான் கோழை.மற்றவர்களிடம் கல்நெஞ்சுக்காரி.நினைத்ததை முடிக்காமல் விட்டதேயில்லை. விடுதிக்கு திரும்பினேன்.நதியாவின் மடியில் முகம்புதைத்து அழுதேன். என்னை விட்டு அவள் மட்டும் எங்கே போய்விடுவாள்? அவளது நீலக்கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரும் அந்த நகரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிட தீர்மானித்தோம்.

5.

கோவைக்கு ரயிலேறியதிலிருந்து அவள் மடியில் படுத்தபடியே கண்கள் மூடியிருந்தேன் நான். ஜன்னல் வழியே வெளியுலகை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நதியா. இருவரும் கோவையில் ஒரு வீடுபிடித்து வாழ துவங்கினோம்.அவளுக்கு வெள்ளை வேஷ்டியும் கதர் சட்டையும் எடுப்பாக இருந்தது.கண்மையால் சிறிய மீசையை அவள் வரைந்தபோது அது மாதவனை நினைவூட்டியது.என் மனமறிந்து உடனே அதை அழித்துவிட்டாள்.
மஞ்சள் கயிற்றிலாடிய சிறு மஞ்சள் பார்க்க மிக அழகாய் இருந்தது. ஜன்னல் வழியே மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்க என் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினாள். எப்போதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்து அணைத்துக்கொண்டாள்.மஞ்சள் வெயிலின் இதத்தை அந்த அணைப்பில் உணர்ந்தேன்.

நதியாவுக்கு ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.நான்கு மாதமாக எங்கள் வாழ்க்கை இனிப்பை மட்டுமே எங்களுக்கு தந்து மகிழ்ந்தது. மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்துக்கொண்டு மஞ்சள் நிலவை ரசித்த பொழுதுகள் ஏராளம்.சிறுசிறு கதைகளால் என்னை வெட்க செய்வாள்.என் நெற்றியில் புரளும் முடிக்கற்றையை அவளது நீண்ட அழகிய விரல்கள் ஒதுங்கச் செய்யும். இரவுகளில் உணர்வுப்பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் நதியா என்னை மாற்றியிருந்தாள்.

கதவு தட்டபடும் ஓசை கேட்டு இயல்புக்கு திரும்பினேன். நதியாவாகத்தானிருக்கும்.இன்று மல்லிகைப்பூ வாங்கி வருவதாக சொல்லி இருந்தாள். ஓடிச் சென்று கதவை திறந்தேன். அவளுடன் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.
தன்னுடன் வேலை பார்க்கிறானென்று அறிமுகப்படுத்தினாள். நதியாவின் தோளில் கைபோட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.

அதிர்ச்சியுடன் நதியாவை பார்த்தேன்.அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.

-நிலாரசிகன்.

Read More...

Saturday, November 21, 2009

ஆலம்



பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
"நான் எதுக்கு போகணும்" ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
அப்பாவ இன்னுங் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க சரவணாபேச்சியக்காவின் குரல் தழுதழுத்தது.
அப்பா தூங்கிட்டு கெடக்காவ அம்மாகிட்ட சொன்னா கேட்காம அழுவுறாவசொல்லிவிட்டு மரத்திலிருந்து இறங்கி என் வீட்டிற்கு ஓடினேன். கலைந்த தலையுடன் அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இரண்டு அக்காவும் அப்பாவின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார்கள்.அண்ணன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அவன் அழுவதை பார்த்தபிறகு எனக்கும் அழவேண்டும் போலிருந்தது.

திருச்சியில் பெரும் மளிகை கடைக்கு சொந்தக்காரர் அப்பா. சேர்க்கை சரியில்லாமல் எப்போதும் வேட்டைக்கும் சாராயகடைக்கும் திரிந்ததால் வியாபாரம் முடங்கிப்போனது. அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அப்பா மிகவும் உடைந்துபோயிருந்தார். பணம் கொழித்தபோது உடனிருந்த நண்பர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.கிராமத்திற்கு திரும்பிய பின்னர் குடிப்பழக்கம் அதிகரித்து சாவில் முடிந்தபோது என் மூத்த அக்கா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இரண்டாவது அக்கா பதினோராம் வகுப்பிலும் அண்ணன் ஏழாவதும் படித்துக்கொண்டிருந்தனர்.ஆறு வயது சிறுவனாக வலம் வந்துகொண்டிருந்தேன் நான்.அம்மா அதிகம் படித்ததில்லை. இருந்த சொத்தையெல்லாம் கரைத்துவிட்டு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.

சொந்தங்கள் அப்பாவின் இறுதி சடங்கிற்கும் பதினாறாவது நாள் விஷேசத்திற்கும் மறக்காமல் வந்து சென்றனர். “எப்படியெல்லாம் வாழ்ந்த குடும்பம் இப்படியாகிருச்சேஇடியைக்கூட தாங்கும் மனதில் இவைபோன்ற சொற்களின் தாக்கம் தாங்கமுடியாத வலியை அம்மாவுக்கு தந்திருந்தது. மூத்த அக்கா எங்கள் ஊர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தது கொஞ்சம் ஆறுதலை தந்தாலும் பணம் புழங்கிய வீட்டில் சில்லறைக்காசுகளின் சத்தம் மட்டுமே ஒலித்தபடி இருந்தது.

ப்பாவின் மறைவுக்கு பின் தினமும் அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டே உறங்குவேன்.சில இரவுகள் அம்மா உறங்கியதேயில்லை. கண்கள் மூடி இருந்தாலும் கண்களோரம் வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். மின்சாரம் இல்லாத நாட்களில் எல்லோரும் வீட்டின் முன்னறையில் ஒன்றுகூடுவோம்.அம்மா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.மடியில் தலைவைத்து நால்வரும் படுத்திருப்போம்.தனது பால்ய காலம் பற்றியும் குடியாலும் தகாத நட்பாலும் தடம் மாறிய அப்பாவை பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பாள் அம்மா.
மூத்த அக்கா திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற நாளில் ரயில் நிலையத்தில் வழியனுப்ப நின்றிருந்தோம். ஜன்னல்கம்பிகளோடு அக்காவின் விரல்களை பற்றிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள் அம்மா. உயிர்த்தோழியை பிரியும் வேதனையை ஒத்திருந்தது அந்த பிரிவு.

நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சக்திவேல் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன்.சக்திவேல் பத்தாவது படிப்பவன். அவன் வீட்டிற்கு பின்புறமுள்ள சிறிய மைதானம்தானத்தில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் விளையாட்டு மாலை ஆறு வரை தொடரும்.அவனது நண்பர்கள் முரடர்கள்.சிகரெட்டும் பாக்குமாக திரிபவர்கள். அங்கே விளையாட போகாதே என்று அம்மா தடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிவிடுவேன். அம்மாவின் வார்த்தைகளை மறுதலிப்பதற்கு அவளது பாசம் ஒரு காரணமா?

ஒரு நாள் விளையாட்டிற்கு பின் சக்திவேலும் அவனது நண்பர்களும் குடித்தார்கள்.அந்த அடர்கருப்பு நிற திரவத்தை தம்ளரில் ஊற்றி என்னிடம் நீட்டினான் சக்தி. வீட்டிற்கு வரும் வழியில் அப்பாவின் போட்டோ நினைவுக்கு வந்தது.வீட்டிற்கு ஓடி வந்து அழுதேன்.அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். தலையை கோதிக்கொண்டே "இனி அங்க வெளயாட போகாத தம்பி" என்றாள். தவறிழைக்கும் போதெல்லாம் அம்மா அதட்டியதே இல்லை.அவளது தீர்க்கமான மெளனத்தில் தவறுகள் அனைத்தும் சரியாக்கப்பட்டுவிடும். என் முதல் தோழி அவள்தான்.


ரண்டாவது அக்காவுக்கும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டாள். அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது.கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன் நான். அம்மாவிடமிருந்து வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள தான் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டதையும் சிறிய கதை வடிவில் எழுதி இருப்பாள். எதிர்பார்ப்புகளின்றி வாழ்வதை அம்மாதான் கற்றுக்கொடுத்தாள். பல மாதம் கழித்து ஊருக்கு அம்மாவை பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் நடந்தபோது சிறு வயதில் கோலிக்காய் விளையாடிய ஞாபகமும் பிள்ளையார் பந்து விளையாடிய ஞாபகமும் என்னை ஆட்கொண்டது.

வீட்டை நெருங்கி கதவை திறந்தேன்.வீட்டிற்குள் அம்மாவை காணவில்லை.
வீட்டுக்கு பின்னாலிருக்கும் சிறிய தோட்டத்தில் அம்மா தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு செடிகள் என்றால் உயிர். செவ்வந்தி,நந்தியாவட்டை,இருவாச்சி,ஜினியா,வாடாமல்லி,ரோஜா என்று தோட்டமெங்கும் பூஞ்செடிகள் நிறைந்திருக்கும். தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் நேரங்களிலெல்லாம் அம்மாவின் முகம் பூரிப்புடன் இருக்கும்.

நான் வருவதை கவனிக்காமல் மொட்டு விட்டிருக்கும் செவ்வந்தி செடியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்தது செவ்வந்தி.

-நிலாரசிகன்.

Read More...

Monday, November 2, 2009

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம் - சிறுகதை

துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த
அவசர தொனியில் அம்மா தொலைபேசியபோதே உணர்ந்துகொண்டேன் அவனை பற்றியே சோகச்செய்தியை பகிரப்போகிறாளென்று.
வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது இதயத்துடிப்பு. முக்கியத்துவம் இழந்துவிட்ட அவனது மரணம் எவ்வித திடுக்கிடலையும் உண்டாக்கவில்லை என்றபோதும் கால்சட்டை பருவகால நண்பனின் இழப்பின் வலி மனதெங்கும் வியாபித்திருந்தது. கல்லூரிக்காலத்தில்
முறுக்கேறிய உடம்புடன் வலம் வந்த ஒருவனை மரணம் துரத்தும் கடைசி காலத்தில் இற்றுப்போன உடலாய் மங்கிய கண்களுடன் பார்க்க
எப்படி முடிந்தது அவனது அம்மாவால்? கடைசி நாட்களிலும் சம்யுக்தையின் நினைவுக்காட்டில் வழிதவறிய சிறுவனாகவே அவனை மாற்றியது எது? சாபம் தந்த தேவமகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளது வாழ்க்கையில் இவனைப்பற்றி கணநேரம் சிந்திக்க நேரமிருக்குமா? சம்யுக்தா! சாபங்களின் தேவதையின் முகம் எனக்குள் உருப்பெற ஆரம்பித்தது.

சம்யுக்தையின் வருகை:


வறண்டு விரிசல் விழுந்த விளைநிலத்தில் சருகான பயிர்களாய் நின்றிருந்த எங்களது கல்லூரிக்குள் முதல்மழையாய் நுழைந்தவள் சம்யுக்தா.
வெட்டாத முடியும் சவரம் செய்யப்படாத தலையுமாக நூலகத்தில் அடைந்துகிடக்கும் அவனை அவள் கண்டநாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் புதைந்துகிடப்பவன் அவன். தூசி படர்ந்த பழைய புத்தகமாய் நூலகமே கதியென்று கிடந்தவனை நிமிரச்செய்த முதல் பெண் சம்யுக்தா.

மொட்டுகள் மலர்வதை போன்று இதழ்பிரித்து அவள் சிரிக்கும் லயத்தில் கல்லூரியின் ஒவ்வொரு கதாநாயகர்களும் வீழ்ந்தபோது எதற்கும் செவிகொடுக்காமல் கவிதைகிறுக்கனை நோக்கி சென்றவள்.கல்லூரிகளுக்கு பின்னாலிருக்கும் மரத்தடிகளில் அவனும் அவளும் கவிதைபேசி சிரித்தபோது வெந்து தணிவார்கள் நண்பர்கள். உலகின் மிகச்சிறந்த கவிஞனாக நாளை மிளிரப்போகும் அவனை பின்னாளில் உடைத்தெறிவாள்
என்று யாருமே எண்ணியதில்லை.

அவன்,அவள்,அவர்கள்:


தந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலேயே ஏழ்மையின் கொடிய கரங்களில் சிக்கி கடைகளில் சிறுசிறு வேலைபார்த்து அம்மாவையும் தங்கையையும் கவனித்த மிகச்சிறந்த உழைப்பாளி அவன். வீட்டுச்சுழல் மனதை நெருக்கும்போதெல்லாம் சம்யுக்தையுடனான பொழுதுகளே அவனை மீட்டெடுத்தன.

மில்லுக்கு சொந்தகார அப்பா,வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்கள் வறுமை என்ற வார்த்தைகூட கேட்டிராத அவளுக்கு அவனது ஏழ்மை மீதான கரிசனமும் அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமும் எப்போதும் இருந்தன.

அவர்களது உரையாடல்களை கடந்துசெல்லும் எவரேனும் கேட்கநேரிட்டால் ஐம்பது வருடங்கள் கழித்து பேசவேண்டிய விஷயங்கள் ஏன் இப்போது விவாதிக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றும். அவர்கள் பேசாத விஷயங்களில்லை காதலை மட்டும் கழித்துவிட்டால்.

அவனது மெழுகுவர்த்திரி:

காலம் எப்போதும் ஒரு முகத்துடன் நம்மிடம் பழகுவதில்லை. நேற்றொரு முகம் இன்றொரு முகம். இலக்கியம் பேசிய இடைவெளிகளில் சிறுக சிறுக நுழைந்த நேசம் பெரும்விருட்சமென வளர்ந்து நின்றபோது அவனக்கு அவனே அந்நியமாகியிருந்தான். காவியங்கள் மொழிந்த உதடுகள் இப்போது சொல்லுக்கும் மெளனத்திற்கும் இடையே அலைபாய்ந்து அடங்கின. அவளும் வார்த்தை தொலைந்த மெளனியாக கண்களுக்குள் ஏதோ தேடும் பார்வையுடன் வலம்வந்தாள்.

அவர்களிடையே கம்பீரமாய் நின்றிருந்த நட்புச்சுவர் இடிந்து துகள்களாகி காற்றில் கரைந்தபோது காதலென்னும் புது உலகிற்குள் நுழைந்தார்கள்.
என் நண்பனை நான் இழந்தது அப்போதுதான். அது எனக்கு அப்போது புரியவில்லை. மயக்கத்தில் திரிபவனிடம் எனது நட்புவார்த்தைகள் தொலைந்து போயிற்று.கரைமீண்ட அலையாய் அவனை உள்ளிழுத்துக்கொண்டாள் சம்யுக்தை.


சம்யுக்தையின் நீங்குதல்:

பட்டாம்பூச்சிகளுடனும் பூஞ்சிட்டுகளிடமும் பேசித்திரிந்தவன் அவளது பிறந்தநாளுக்கான பரிசுத்தேடலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்த நாளில்தான் சம்யுக்தை பற்றிய செய்தியொன்றி காற்றில் கசிந்து கல்லூரியை உலுக்கியது.

அவள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை எனும் செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்.சம்யுக்தையின் திருமண அழைப்பிதழ்களை நண்பனொருவன் கொண்டுவந்தபோது முற்றும் துறந்த ஞானிகளின் தீட்சண்யம் அவனது பார்வையில் உணரமுடிந்தது.சொட்டுக்கண்ணீரோ அல்லது பிதற்றலோ இல்லாமல் மெளனியாக கல்லூரியைவிட்டு அவன் வெளியேறி சென்றது நண்பர்களுக்கு பெரும் துக்கத்தை பரிசளித்தது.

அவன்,நான்,மரணம்:

நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது சப்தங்களால் நிறைந்த அவனது வீட்டு முற்றம். வீட்டிற்குள் நுழைந்து நார்க்கட்டிலில் பூமாலைகளுக்கு நடுவே முகம் மட்டும் தெரிய கிடத்தப்பட்டிருக்கிறான் அவன்.இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது.

அவனும் நானும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பழைய கணங்களின் ஞாபகங்களோடு அந்த உடலை பார்க்கிறேன். சம்யுக்தையால் எனை பிரிந்த அவனை இறுக கட்டிக்கொண்டு அவனுள் நுழைகிறேன். யாருமே உணர்ந்து கொள்ளாத என் ஆத்மா அந்த உடலுக்குள் சங்கமித்து கண்ணயர்கிறது. என் இருத்தல் தொலைந்த வலியில் துடித்தழுது கொண்டிருக்கிறாள் அம்மா.

துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்..

-நிலாரசிகன்.

Read More...