Sunday, December 20, 2009

சங்க மித்திரை - சிறுகதை


சங்க மித்திரை - சிறுகதை



ழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த சத்தமும் மணியின் குரைப்பும்.
வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்
தென்னந்தட்டி வேலியிலொன்றை பிரித்துவிட்டு பின்னாலிருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்தார் அப்பா.பதறியபடி பின்னால் ஒடினாள் அம்மா. என்னவென்றே தெரியாமல் தெரிந்துகொள்ளும் அவசரத்தில் அம்மாவை தொடர்ந்தேன் நான். தோட்டத்து கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் மித்திரை. கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றில் குதித்து அவளது முடியை பற்றிக்கொண்டார் அப்பா. சத்தம் கேட்டு தேங்காய் உரித்துக்கொண்டிருந்த பாண்டி அண்ணனும் இன்னும் சிலரும் ஓடி வந்தார்கள். பாண்டி அண்ணன் மோட்டார் ரூமிலிருந்து வடக்கயிற்றை கொண்டுவந்து கிணற்றுக்குள் ஒரு நுனியை வீசிவிட்டு மற்றொரு நுனியை அருகிலிருந்த வேப்பமரத்தில் கட்டினார். அதற்குள் மேலும் இருவர் கிணற்றுக்குள் குதித்து மித்திரையின் கைகளை பிடித்துக்கொண்டனர். ஏதோ முனகிக்கொண்டிருந்தாள் அவள். அவளது நீண்ட கூந்தல் கருமேகம் போல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. கட்டியிருந்த பச்சை தாவணி இறக்கைபோல் விரிந்து இருபுறமும் மிதந்தது. நார்கட்டிலை உள்ளிறக்கி அவளை மேலே கொண்டுவருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலானது.

விஷயம் கேள்விபட்டு மித்திரையின் அம்மா மூச்சிரைக்க ஓடிவந்தாள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவளை கையமர்த்தினார் அப்பா. அப்போதும் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள். உடலெங்கும் நனைந்திருக்க கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள் மித்திரை. கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறியிருந்தன.பார்வை மட்டும் விறைத்திருந்தது. கிணற்றில் ஏன் குதித்தாய் என்று ஒவ்வொருவராய் கேட்டு பதிலேதும் கிடைக்காமல் கலைந்து சென்றனர்.கடைசி ஆளாக நான் கிளம்பும்போது அவளது தோளை உலுக்கி "அந்த சண்டாளன இன்னுமாடி நெனச்சுகிட்டு கிடக்க?" மித்திரையின் அம்மா கேட்டது என் காதில் விழுந்தது. அந்தசண்டாளன் யாரென்று எனக்கும் தெரியும்.

o0o
சங்க மித்திரை எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில்தான் வசிக்கிறாள்.
அப்பா கிடையாது. ஒரே ஒரு தம்பி என்னுடன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தினக்கூலிக்கு வாழைத்தோட்டத்திற்கு செல்பவள். கறுப்பு, ஆனால் லட்சணம்.பார்த்தவுடன் எல்லோரிடமும் சிரித்து பேசுவாள்.கிண்டலும் கேலியும் கலந்த அவளது பேச்சில் லயித்து நிற்பாள் என் அம்மா. மித்திரை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அம்மாவின் காதுகளுக்கு வந்துவிடும். கருக்கலில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.அப்பா கடையை சாத்திவிட்டு வரும் வரை சலிக்காமல் தொடரும் பேச்சு. மேலத்தெரு வெள்ளைப்பாண்டியும் இவளுடன் வேலைபார்க்கும் செவ்வந்திக்கனியும் காதலிப்பதும்,செவ்வந்திக்கனியின் மார்பில் வெள்ளை என்று பச்சை குத்திகொண்டதும் மித்திரை மூலமாகவே தெரிந்துகொண்டாள் அம்மா.செவ்வந்திக்கனி அவள் அப்பாவுக்கு பயந்ததை விட நூறு மடங்கு அதிகம் மித்திரையின் குத்தலான பேச்சுக்கு பயந்தாள். "என்ன புள்ள வலமாருல வெள்ளன்னு குத்திகிட்ட இடமாரு சும்மாதான இருக்கு பாண்டின்னு குத்திகிட வேண்டியதானே?"சொல்லிவிட்டு சத்தம்போட்டு சிரிப்பாள்.

அம்மன் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் அவனை பார்த்தேன். பெல் பாட்டம் பேண்ட்டும்,நீளமான காலர் சட்டையுமாய் "ஒருதலை ராகம்" சங்கர் போலிருந்தான். அடர்த்தியான மீசையும் பளிச்சென்ற சிரிப்பும் அவனை பார்த்தவுடனே இந்த பொட்டல்காட்டில் இவன் அந்நியனாகத்தானிருக்க வேண்டும் என்று உணர்த்தியது. தர்மகர்த்தாவின் தூரத்து சொந்தம்,சென்னைக்காரன் என்கிற விஷயம் கேள்விப்பட்டவுடன் சிறுவர் பட்டாளம் அவனை சுற்ற ஆரம்பித்தது.நானும் குழாய் பேண்ட் அண்ணே குழாய் பேண்ட் அண்ணே என்று உள்ளுக்குள் பரிகசித்துக்கொண்டே பின் தொடர்ந்தேன். வாயாடித்திரிந்த மித்திரை வாய் பிளந்து ரசித்த முதல் ஆண்மகன் அவன் தான்.
வாழைத்தோட்டத்தை பார்க்க வந்தவனின் கண்களில் பூஞ்சிட்டாய் மித்திரை விழுந்ததும் அதன் பிறகு ஊர் அறியா பொழுதுகளில் இரு உயிர்கள் சந்தித்துக்கொண்டதும் தொடர்ந்தபடியே இருந்தன. என்னை கடக்கும்போதெல்லாம் பின்னந்தலையில் தட்டிவிட்டு "ஒழுங்கா படிடா இல்ல வாத்தியாருகிட்ட வத்தி வச்சுருவேன்" என்றவள் அவனது வருகைக்குப்பின் என்னை பொருட்டாகவே நினைத்ததில்லை. அவள் தம்பியை பார்க்க போகும்போதெல்லாம் ஏதாவது வம்பிழுத்தவள் இப்போது ஏதோவொன்றை இழந்தவளாய் கயிற்றுக்கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றபோது சுவற்றில் சாய்ந்துகொண்டு கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். கள்குடித்தவள் போல் கண்கள் பாதி திறந்தும் திறக்காமலும் இருந்தன. ஓடிச்சென்று அவள் மடியில் படுத்துக்கொண்டு பின் ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்று தோன்றியது எனக்கு. பின்னந்தலையில் அடிப்பவள் மூக்கை உடைத்துவிட்டால் என்னசெய்வது? பேசாமல் திரும்பி விட்டேன்.

o0o
அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு மித்திரை அமர்ந்திருந்த நேசப்பொழுதை அழுக்கு கண்களுடன் பார்த்துச்சென்ற எவனோ ஒருவன் தர்மகர்த்தாவுக்கு வாய்த்தந்தியில் செய்தியை தடதடத்தபோது திருக்கை வால் சாட்டையால் விளாசி தள்ளிவிட்டார் குழாய் அண்ணனை.
பெண்பிள்ளை என்பதால் மித்திரையை எச்சரித்து அனுப்பிவிட்டார்.மறு நாள் நொண்டிக்குதிரையாய் பஸ் ஏறிவிட்டான் அவன்.
அவன் சென்றபின் ஒருவாரம் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள் மித்திரை. கண்கள் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவளை பார்க்க பார்க்க எனக்கும் அழுகை வரும். அவள் கண்களை துடைத்துவிட்டு ,கைகளை பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நடக்க ஆசையாயிருக்கும். அவள் எனக்குள் நடக்கும் போராட்டங்களை உணர்வதில்லை என்று புரியும்போது ஏமாற்றத்துடன் விளையாட போய்விடுவேன். ஒரு மாதம் கழித்துதான் இந்த கிணற்றில் குதிக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியது. அந்த சண்டாளனை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாளே என்று கோபமும் மறுநிமிடம்
அனுதாபமும் என்னை சூழ்ந்துகொண்டது. யாரையும் திருமணம் செய்யாமல் என்னுடனே எப்போதுமிருப்பாள் என்கிற எண்ணத்தில் அவள் அம்மா
பாறாங்கல்லை தூக்கிப் போட்டாள்.

அடுத்த மாதமே தன் தம்பிக்கு கட்டி வைத்தாள். மித்திரை ஒரு வார்த்தையும் பேசாமல் எப்போதும் வாடிய முகத்துடனே இருந்தாள். திருமணம் முடிந்து இருவரும் பக்கத்து ஊருக்கு போனபோதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்னை சூழ்ந்துகொண்டது.
அவளும் புகுந்தவீடு போவதற்கு முதல்நாள் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அம்மா எதுவும் மனசுல வச்சுக்காம நல்லா குடும்பத்த நடத்தும்மா என்றவுடன் தலையை குனிந்துகொண்டாள். திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த எனக்கு அவளது தலைகுனிவை கண்டவுடன் கோபமாக வந்தது. எங்கும் எதற்கும் தலை குனியாதே மித்திரை. நீ நல்லவள். மனம் திரும்ப திரும்ப அதே வரிகளை சொன்னபோது என்னருகில் வந்து "உன்னை விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா இருக்குடா" என்றாள்.எதிர்பார்க்கா இவ்வார்த்தைகள் மனதின் உட்சுவர்களில் மோதி பலமுறை எனக்குள் ஒலித்தது. மித்திரைக்கு என்னை பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் என் பிரிவு வருத்தம் தருவதாக இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்வீட்டில் இருந்தபோது நினைத்த நேரமெல்லாம் மித்திரையை ஓடிச்சென்று பார்த்து, பேசி வளர்ந்தவன் அவளது பிரிவை தாங்கமுடியாமல் துடிதுடித்தேன்.

o0o

பள்ளிமுடிந்து கல்லூரியில் இளங்கலை பயில கோவைக்கு சென்றுவிட்டபின்பு வாழ்க்கை தடம் மாறியது. நல்லதொரு வேலை கிடைத்து திருமணம் முடிந்து என் மகள் பிறக்கும்வரை என் வாழ்விலிருந்து மித்திரை எனும் பெண் மறக்கப்பட்ட ஜீவனாகியிருந்தாள். பிரசவ வலியெடுத்து
மருத்துவமனைக்கு விரைந்து மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியிலிருந்த பெஞ்சில் அமர்ந்தபோது எதிர் பெஞ்சில்
பெண்ணொருத்தி அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்கிற வேண்டுதலில் மனம் ஓடிக்கொண்டிருந்தது.சிறிது நேர ஆசுவாசத்திற்கு பின் எதிர் பெஞ்சை பார்த்தபோது லட்சம் சில்லுகளாய் உடைந்துபோனது இதயம். என் பால்யகனவுகளில் தாவணிதேவதையாய் வலம்வந்த என் மித்திரை எனக்கு முன் அமர்ந்திருக்கிறாள்.
காலம் அவளது செளந்தர்யத்தை சலவை செய்திருந்தபோதும்
சுருக்கங்கள் இல்லாத விரல்கள் வனப்பின் கடைசி நிமிடங்களில் பூமி பார்த்துக்கொண்டிருந்தன. கருமை நிறத்தாலான மெழுகு சிலை போல் என்னெதிரில் அமர்ந்திருந்தவளின் வயது நாற்பதை கடந்திருக்கும் என்பதை நம்புவது கடினமானதாய் இருந்தது.

"மித்திரை" என் குரல்கேட்டு திடுக்கிட்டவள் யாரென்று பார்வையால் வினவியபோது,சிறுவயதில் அவள் பிரிந்த அன்று ஏற்பட்ட பிரிவின் வாசம் என் நாசிக்குள் நுழைந்து குரலை உடைத்தது. "நான்....நான்..எதிர்வீட்டு செல்வராசு". உடன் மலர்ந்த விழிகளுடன் அருகில்வந்து கண்களுக்குள் உற்றுப்பார்த்தபடி கேட்டாள் "இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கியா ராசு?". சொல்லமுடியாத உணர்வுகளால் அதுவரை கட்டிவைத்திருந்த கண்ணீர் பொத்துக்கொண்டது. "நீ இன்னும் மாறவே இல்ல" என் கண்ணீர் துடைக்க கைகள் உயர்த்தியவள் துடைக்காமல் பின்னகர்ந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தாள் கொண்டாள். அப்போதுதான் அவளது சேலையின் நிறம் வெண்மை என்பதை கவனித்தேன்.

o0o
"பறவை போல் சிறகிருந்தால் எவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கும் இந்த வாழ்க்கை" சங்கமித்திரை என்னிடம் சொன்னபோது
குளக்கரை படிக்கட்டில் உட்கார்ந்தபடி வறண்ட குளத்தை பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தேன். எவ்வித சலனமுமின்றி
படிக்கட்டில் ஊர்கின்ற கட்டெறும்புகளை கால்களால் நசுக்கிக்கொண்டிருந்தாள். என்னை விட பத்து வயது பெரியவள் எனினும் அவளை அக்கா என்று ஒருபோதும் நான் அழைத்ததில்லை. முதன் முதலில் அக்கா என்றபோதே "அக்கான்னு சொல்லாதடா பேர் சொல்லியே கூப்பிடேன்" செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு அவள் நடந்து சென்றது இருபது வருடங்கள் கழித்தும் என்னுள் அப்படியே இருக்கிறது. என்னை விட பெரியவளை அக்கா என்றழைக்காமல் பெயர் சொல்லி கூப்பிடுவது முதலில் கடினமாக தோன்றினாலும் உள்ளுக்குள் இனம் புரியாத சிலிர்ப்பு அப்போது இருந்தது.

"என்ன அப்படி புதுசா பார்க்குற?" மித்திரையின் இரண்டாவது கேள்வியில் தன்னிலை மறந்த உலகத்திலிருந்து இயல்புக்கு திரும்பினேன். "ஏன் சிறகிருந்தா உயர பறக்கலாம்னு நெனச்சியா?"என் கேள்விக்கு இரு நிமிட மெளனத்தை பதிலாக்கியவள் மெளனம் உடைத்து "இல்ல யாருமே பார்க்காத இடத்துக்கு தூரமா போயிடலாம்ல,அதான்"சொல்லி முடிக்கும்போது அந்த அழகிய கண்களில் நீர்கோர்த்திருந்தது.

"நான் இருக்கேன்ல? என்கூடவே இருப்பியா? என்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா?" துயரம் படர்ந்த வார்த்தைகளால் சன்னமாய் அவளிடம் கேட்டேன். சற்று நேர அமைதிக்குப்பின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு என் அருகில் வந்தவள் பின்னந்தலையில் தட்டி "உன்கூடதான் இருப்பேன் ராசு" என்றபடி என் விரல் பற்றிக்கொண்டு உடன் நடக்க ஆரம்பித்தாள்.என் மகளின் பிஞ்சு விரல்களை தொட்ட போது ஏற்பட்ட ஸ்பரிசத்தை நினைவூட்டியது அவளது தொடுகை.தாய்மை நிரம்பிய அந்த ஸ்பரிசத்தில் மீண்டும் சிறுவனாக உருமாற துவங்கியிருந்தேன் நான்.

-நிலாரசிகன்.


(டிசம்பர் மாத அகநாழிகை இலக்கிய இதழில் வெளியான படைப்பு)

1 Comment:

Unknown said...

mother never forgeted