துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த
அவசர தொனியில் அம்மா தொலைபேசியபோதே உணர்ந்துகொண்டேன் அவனை பற்றியே சோகச்செய்தியை பகிரப்போகிறாளென்று.
வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது இதயத்துடிப்பு. முக்கியத்துவம் இழந்துவிட்ட அவனது மரணம் எவ்வித திடுக்கிடலையும் உண்டாக்கவில்லை என்றபோதும் கால்சட்டை பருவகால நண்பனின் இழப்பின் வலி மனதெங்கும் வியாபித்திருந்தது. கல்லூரிக்காலத்தில்
முறுக்கேறிய உடம்புடன் வலம் வந்த ஒருவனை மரணம் துரத்தும் கடைசி காலத்தில் இற்றுப்போன உடலாய் மங்கிய கண்களுடன் பார்க்க
எப்படி முடிந்தது அவனது அம்மாவால்? கடைசி நாட்களிலும் சம்யுக்தையின் நினைவுக்காட்டில் வழிதவறிய சிறுவனாகவே அவனை மாற்றியது எது? சாபம் தந்த தேவமகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளது வாழ்க்கையில் இவனைப்பற்றி கணநேரம் சிந்திக்க நேரமிருக்குமா? சம்யுக்தா! சாபங்களின் தேவதையின் முகம் எனக்குள் உருப்பெற ஆரம்பித்தது.
சம்யுக்தையின் வருகை:
வறண்டு விரிசல் விழுந்த விளைநிலத்தில் சருகான பயிர்களாய் நின்றிருந்த எங்களது கல்லூரிக்குள் முதல்மழையாய் நுழைந்தவள் சம்யுக்தா.
வெட்டாத முடியும் சவரம் செய்யப்படாத தலையுமாக நூலகத்தில் அடைந்துகிடக்கும் அவனை அவள் கண்டநாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் புதைந்துகிடப்பவன் அவன். தூசி படர்ந்த பழைய புத்தகமாய் நூலகமே கதியென்று கிடந்தவனை நிமிரச்செய்த முதல் பெண் சம்யுக்தா.
மொட்டுகள் மலர்வதை போன்று இதழ்பிரித்து அவள் சிரிக்கும் லயத்தில் கல்லூரியின் ஒவ்வொரு கதாநாயகர்களும் வீழ்ந்தபோது எதற்கும் செவிகொடுக்காமல் கவிதைகிறுக்கனை நோக்கி சென்றவள்.கல்லூரிகளுக்கு பின்னாலிருக்கும் மரத்தடிகளில் அவனும் அவளும் கவிதைபேசி சிரித்தபோது வெந்து தணிவார்கள் நண்பர்கள். உலகின் மிகச்சிறந்த கவிஞனாக நாளை மிளிரப்போகும் அவனை பின்னாளில் உடைத்தெறிவாள்
என்று யாருமே எண்ணியதில்லை.
அவன்,அவள்,அவர்கள்:
தந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலேயே ஏழ்மையின் கொடிய கரங்களில் சிக்கி கடைகளில் சிறுசிறு வேலைபார்த்து அம்மாவையும் தங்கையையும் கவனித்த மிகச்சிறந்த உழைப்பாளி அவன். வீட்டுச்சுழல் மனதை நெருக்கும்போதெல்லாம் சம்யுக்தையுடனான பொழுதுகளே அவனை மீட்டெடுத்தன.
மில்லுக்கு சொந்தகார அப்பா,வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்கள் வறுமை என்ற வார்த்தைகூட கேட்டிராத அவளுக்கு அவனது ஏழ்மை மீதான கரிசனமும் அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமும் எப்போதும் இருந்தன.
அவர்களது உரையாடல்களை கடந்துசெல்லும் எவரேனும் கேட்கநேரிட்டால் ஐம்பது வருடங்கள் கழித்து பேசவேண்டிய விஷயங்கள் ஏன் இப்போது விவாதிக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றும். அவர்கள் பேசாத விஷயங்களில்லை காதலை மட்டும் கழித்துவிட்டால்.
அவனது மெழுகுவர்த்திரி:
காலம் எப்போதும் ஒரு முகத்துடன் நம்மிடம் பழகுவதில்லை. நேற்றொரு முகம் இன்றொரு முகம். இலக்கியம் பேசிய இடைவெளிகளில் சிறுக சிறுக நுழைந்த நேசம் பெரும்விருட்சமென வளர்ந்து நின்றபோது அவனக்கு அவனே அந்நியமாகியிருந்தான். காவியங்கள் மொழிந்த உதடுகள் இப்போது சொல்லுக்கும் மெளனத்திற்கும் இடையே அலைபாய்ந்து அடங்கின. அவளும் வார்த்தை தொலைந்த மெளனியாக கண்களுக்குள் ஏதோ தேடும் பார்வையுடன் வலம்வந்தாள்.
அவர்களிடையே கம்பீரமாய் நின்றிருந்த நட்புச்சுவர் இடிந்து துகள்களாகி காற்றில் கரைந்தபோது காதலென்னும் புது உலகிற்குள் நுழைந்தார்கள்.
என் நண்பனை நான் இழந்தது அப்போதுதான். அது எனக்கு அப்போது புரியவில்லை. மயக்கத்தில் திரிபவனிடம் எனது நட்புவார்த்தைகள் தொலைந்து போயிற்று.கரைமீண்ட அலையாய் அவனை உள்ளிழுத்துக்கொண்டாள் சம்யுக்தை.
சம்யுக்தையின் நீங்குதல்:
பட்டாம்பூச்சிகளுடனும் பூஞ்சிட்டுகளிடமும் பேசித்திரிந்தவன் அவளது பிறந்தநாளுக்கான பரிசுத்தேடலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்த நாளில்தான் சம்யுக்தை பற்றிய செய்தியொன்றி காற்றில் கசிந்து கல்லூரியை உலுக்கியது.
அவள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை எனும் செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்.சம்யுக்தையின் திருமண அழைப்பிதழ்களை நண்பனொருவன் கொண்டுவந்தபோது முற்றும் துறந்த ஞானிகளின் தீட்சண்யம் அவனது பார்வையில் உணரமுடிந்தது.சொட்டுக்கண்ணீரோ அல்லது பிதற்றலோ இல்லாமல் மெளனியாக கல்லூரியைவிட்டு அவன் வெளியேறி சென்றது நண்பர்களுக்கு பெரும் துக்கத்தை பரிசளித்தது.
அவன்,நான்,மரணம்:
நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது சப்தங்களால் நிறைந்த அவனது வீட்டு முற்றம். வீட்டிற்குள் நுழைந்து நார்க்கட்டிலில் பூமாலைகளுக்கு நடுவே முகம் மட்டும் தெரிய கிடத்தப்பட்டிருக்கிறான் அவன்.இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது.
அவனும் நானும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பழைய கணங்களின் ஞாபகங்களோடு அந்த உடலை பார்க்கிறேன். சம்யுக்தையால் எனை பிரிந்த அவனை இறுக கட்டிக்கொண்டு அவனுள் நுழைகிறேன். யாருமே உணர்ந்து கொள்ளாத என் ஆத்மா அந்த உடலுக்குள் சங்கமித்து கண்ணயர்கிறது. என் இருத்தல் தொலைந்த வலியில் துடித்தழுது கொண்டிருக்கிறாள் அம்மா.
துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்..
-நிலாரசிகன்.
Monday, November 2, 2009
சம்யுக்தை மற்றும் ஓர் மரணம் - சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
"இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது. "
Nenjai thodm varthaigal... kavingare.. neer valga.. um sorpogal valga...
Post a Comment