புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது...
அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று சேலையில் அவள் வந்த அழகை வர்ணிக்க அடடா தமிழில் வார்த்தைகளே இல்லையா!
பூக்களால் செய்த சிலையோ?...பட்டாம்பூச்சிகள் இருவிழியோ?
இவள் என்ன பச்சைக்கிளி ஜாதியா? இல்லை புள்ளிமான் இனமா?
ஒரு பார்வையிலே வீழ்த்திவிட்டாளே என்னை? அந்த கருவிழிக்குள் தொலைந்தே போனதே என் சிறு இதயம்?
வாழ்ந்தால் இவளோடு வாழவேண்டும்...இல்லை இவள் விழிக்குள் குதித்து புனிதமாக உயிர்விட வேண்டும்!
சரவணனின் மனதில் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது..
இந்த நினைப்பிற்கு காரணம் கல்லூரியில் சரவணனுக்கு ஜூனியராக சேர்ந்திருக்கும் பூஜா.
ஐஸ்கீரிமில் செய்துவைத்த சிற்பம் போலிருப்பாள் பூஜா. யாருக்குத்தான் காதலிக்க தோன்றாது!
பூஜா கல்லூரியில் சேர்ந்து நான்கு நாட்களே ஆகிறது. அவளிடம் சென்று தன் மனதை திறந்தான் சரவணன்.
"பூஜா,ஒரு நிமிசம்"
ஐந்தரைஅடி பூ தலைதிருப்பி பார்த்தது.
"எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது,உன்னை பார்த்த உடனே எனக்கு புடிச்சிடுச்சி...உன் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை ரொம்ப அழகா,அற்புதமா இருக்கும்னு நினைக்கிறேன்...சீக்கிரம் ஒரு நல்ல பதிலை...அவன் முடிப்பதற்குள் வந்துவிட்டாள் அவள் தோழி ரீனா.
சட்டென்று அங்கிருந்து விலகி, "சே இந்த ஹிந்திக்காரி வந்து கெடுத்துட்டா" என்று அவள் தோழியை மனதிற்குள் திட்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் சரவணன்.
"ரீனா நம்ம சீனியர் சரவணன் என்கிட்ட ஏதோ சொன்னார் ஒண்ணுமே புரியலடி" ஹிந்தியில் சிரித்துக்கொண்டே சொன்னாள் பூஜா ஷெராவத்.
Thursday, September 27, 2007
[+/-] |
காதல் ரோஜாவே |
Wednesday, September 26, 2007
[+/-] |
சிகப்பு ரோஜா |
மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.
கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும்
மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.
வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.
"மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை
பத்தி எனக்குத் தெரியும் நீ உன் வேலைய பாருடின்னு சொல்லிட்டேன், பட்
இப்போ, இன்னைக்கு என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தப்பறம்தான் புரியுது
அவ சொன்னது உண்மைன்னு!"
"இதுவரைக்கும் தப்பான எண்ணத்தோட நீ என்கிட்ட ஒரு நாளும் வந்ததில்லையே வினோத்!
நீயா இப்படி?"
பொறிந்து தள்ளினாள் வித்யா.
"ரெட் லைட் ஏரியாவுக்குள்ள நீ போறத பஸ்ல இருந்து பார்த்தேன் ,கடவுளே அது நீ இல்லாம
வேற யாராவதா இருந்திருக்ககூடாதா?
பொறுமையாய் அவள் பேசுவதை எவ்வித சலனமுமின்றி கேட்டுக்கொண்டிருந்த வினோத்
பேச ஆரம்பித்தான்.
"என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்ளோதானா வித்யா? உன்மேல் என் உயிரையே வச்சிருக்கேன்
என் காதலை சந்தேகப்படுற உரிமை உனக்குக்கூட கிடையாது.
இன்னைக்கு காலைல எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு சின்னப் பையன் பிச்சை எடுத்துட்டு
இருந்தான்,விசாரிச்சப்போ அவனை யாரோ கடத்திட்டு வந்துட்டங்கங்கற உண்மை தெரிஞ்சுது.
அவன் அம்மா சிகப்பு விளக்கு பகுதியில பாலியல் தொழில்ல
ஈடுபடுறவங்கன்னும் தெரிஞ்சுது.
என் நண்பர்கள் சிலபேரும்,போலீஸும் சேர்ந்து அவனை மீட்டோம்.
அப்புறமா அவனை ரெட் லைட் ஏரியாவுல கொண்டு போய் விட்டுட்டு திரும்பி வரும்போதுதான் நீ பாத்திருக்கன்னு நினைக்கறேன்"
கடந்து செல்லும் ரயிலைப்போல தடதடவென்று பேசிவிட்டு
நடக்க ஆரம்பித்தான் வினோத்.
பெத்தவனால் நாலாயிரத்திற்கு விற்கப்பட்டு,பாலியல் தொழிலில்
பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டு,கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தவளை காப்பாற்றி, உடலை நேசிக்காமல் உள்ளம் மட்டும்
நேசித்தவன் கோபமாய் நடந்துசெல்வதை பரிதவிப்புடன்
பார்த்துக்கொண்டிருந்தாள் வித்யா.
Sunday, September 23, 2007
[+/-] |
வானவில்லோ நீ? |
அன்புள்ள திவ்யா....
என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்?
உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம்
மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன்.
அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே!
காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்.... அந்தக் கண்களை இனி என்று பார்ப்பேன் கண்ணே!
பிள்ளை மனம்கொண்டவள் நீ....என்னை பிரிந்துவிட்டு மெளனமாய் இருக்க
உன்னால் எப்படி முடிகிறது திவ்யா?
உன் பிரிவைக்கூட தாங்கி இருப்பேன் கண்ணே....அழாமல் நீ
பிரிந்திருந்தால்...
காலத்திற்கு நம் காதல் புரியவில்லை... காதலுக்கும் நம் அருமை தெரியவில்லல. நம்மை பிரித்து வேடிக்கை பார்க்கிறது.
உன்னோடு வாழமுடியாத என்னால் உன் நினைவுகளோடு வாழ
முடிகிறேதே....
பிரிந்த நாளில் நீ தந்த வார்த்தைகள் மட்டுமே
இன்று என் வாழ்க்கையின் கனத்தை மடிதாங்குகின்றன.
காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற
உன் ப்ரியமானவன்.
எழுதிய கடிதத்தை மீண்டுமொரு முறை படித்துவிட்டு அதனுடன் ரோஜாப்பூவொன்றை சேர்த்து கீழ்வைத்தேன்
நீர்வழிகின்ற என் கண்களை வியப்புடன் பார்க்கும் என் மகளைக்
கூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்
கல்லறைத்தோட்டத்தைவிட்டு.
Thursday, September 20, 2007
[+/-] |
ஊனம் |
ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை
முதல்முறையாய் ஆட்கொண்டது.
ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்.
எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன்.
"அண்ணா அண்ணா" என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன்.
அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் இடதுகை
நொறுங்கி கூழாகிப்போனது.
அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர் ரமேஷின் இடதுகையை.
நேற்றுதான் மருத்துவமனைவிட்டு வீடு வந்திருக்கிறான் .
"ரமேஷ்....அண்ணா வந்திருக்கார் பாருடா" அரைத்தூக்கத்திலிருந்தவனை
மெதுவாய் எழுப்பினார் அவன் அம்மா .
"அண்ணா இனி என்னால மத்த பசங்க மாதிரி விளையாட முடியாதாண்ணா?"
என்னைக்கண்டவுடன் கண்ணில் நீர்மல்க கேட்டான் ரமேஷ.
"உனக்கு ஒண்ணுமில்லடா நீ முன்ன மாதிரியே விளையாடலாம், உன் பிரண்ட்ஸ்கூட வெளியே போகலாம்,எல்லாம் பண்ணலாம்டா"
நான் சொன்னதைகேட்காமல் அழத்துவங்கிவிட்டான் ரமேஷ்.
என் ஆறுதல்வார்த்தைகளால் அவனை சமாதானப்படுத்த இயலவில்லை
ஊனம்தந்தவலியை அவன் கண்களில் உணர்ந்தவனாய்
வீடுநோக்கி திருப்பினேன் என் சக்கரநாற்காலியை.
[+/-] |
தில்லி To ஆக்ரா |
"என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?" ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.
"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "
"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"
என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.
தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்
"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.
தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது
"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.
வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்
Wednesday, September 19, 2007
[+/-] |
"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு" |
"குழந்தை பிறந்திருக்கிறது"
"நம் இனமா, மனிதனா?"
[+/-] |
ஐந்து வார்த்தைகளில் கதை |
வேலை
"ஏன் வேலைய விட்ட?"
"பூமி பிடிக்கல"
Tuesday, September 18, 2007
[+/-] |
நட்சத்திர தேடல் |
மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும்.
ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை
அவருடையது.
ஊருக்குள் அவர் வந்து பல வருடங்கள் ஆகிறது.
வாழைதோட்டத்திற்கு வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுடன் மட்டும் பேசுவார்.
இரவானால் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு வானம் பார்த்து நட்சத்திரங்களுடன் ஏதேதோ பேசுவார்.
"நிறைய நட்சத்திரம் இருக்கே இதுல நீ எந்த நட்சத்திரம் காமாட்சி" என்று இருபது வருடத்திற்கு முன்பு இறந்த காமாட்சிபாட்டியை நினைத்தபடியே கிடப்பார்.
" நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து பாக்கறேன்...வானத்துல அப்படி என்னத்ததான் பெரிசு பாக்குதோ" பீடியை பற்றவைத்துக்கொண்டே தன் நண்பனிடம் சொன்னான் பக்கத்து தோட்டத்து காவலாளி முருகேசு.
"இன்னைக்கு கிறுக்கு முத்திப்போச்சுடா, அந்திசாயறதுக்குள்ளேயே பெரிசு வானத்த பார்க்க ஆரம்பிச்சுட்டாரு..."
சிரித்துக்கொண்டே மீசைதாத்தாவின் குடிசையை கடந்து சென்றனர் இருவரும்.
இவர்களது உரையாடலை கண்சிமிட்டியபடியே ரசித்துக்கொண்டிருந்தார் நட்சத்திரமாகிவிட்ட மீசைதாத்தா.
Monday, September 17, 2007
[+/-] |
எம் பொழப்பு! |
குளிச்சு ரெண்டு வாரமாச்சு...பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும்.
அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம்.
போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்...
என் நேரம் அப்பவும் சாவு வரலை. லாரிக்காரன் போட்ட பிரேக்ல அநேகமா டயரு தேஞ்சிருக்கும்.
கேவலமா கெட்ட கெட்ட வார்த்தையால என்னை திட்டி தீர்த்துட்டான் லாரி டிரைவர்.
அதுக்கப்புறம் ரெண்டு நாளா எங்கேயும் வெளியில போகல. பிள்ளையார் கோவில்லேயே படுத்துக்கெடந்தேன்.
எத்தனை நாளைக்குத்தான் சோறுதண்ணி இல்லாம இருக்க முடியும்?
அந்த கோவில் அர்ச்சகர் ரொம்ப நல்லவர். கொஞ்சம் சுண்டலும் பொறியும் தந்தார்.
தெருத்தெருவா சோத்துக்கு நாயா அலையறது மாதிரி கஷ்டமான வேலை வேற எதுவுமே இருக்க முடியாது.
இதெல்லாம் அந்த எதிர்வீட்டு வாட்சுமேனுக்கு எங்க புரியப்போகுது? எப்போ என்னை பார்த்தாலும் அடிக்கத்தான் வர்றான் சண்டாளன். இருக்கட்டும் ஒருநாள் அவன உண்டு இல்லன்னு பண்ணிடுறேன்.
சரி சரி நேரமாச்சு பக்கத்து தெருல இருக்கற குப்பைத்தொட்டிக்கு போகணும்... நாய்ங்க வர்றதுக்கு முன்னால
போனாதான் சோறு கிடைக்கும்...
வாலாட்டியபடியே வேகமாய் ஓடத்துவங்கினேன் அடுத்த தெரு நோக்கி.
Sunday, September 16, 2007
[+/-] |
கறுப்பு வானவில் (இருநிமிடக் கதை) |
இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி
எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்... மனசுக்குள் வினோத்தை பற்றி
பலவாறாக எண்ணியபடியே நகம் கடித்துக்கொண்டிருந்தேன்
இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது..
பத்து மணிக்கே வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலை. எப்பவுமே பகல்ல மட்டும்தான் வெளியில வருவேன்.முதல் முறையா இராத்திரி நேரம்... அதுவும் இந்த பஸ்டாண்டில் காத்து நிற்கிறது என்னவோ போல
இருக்கு...வினோத் எப்படா வருவே நீ?
"ஹாய்" பின்னாலிருந்து கேட்ட வினோத்தின் குரலில் திடுக்கிட்டு திரும்பினேன்.
"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா,இப்படி லேட்டாக்கி என்னை பயமுறுத்திட்டியே!" திட்டிக்கொண்டே அவன் காரில் ஏறினேன்.
கார் வேகமெடுக்கத் தொடங்கியது.
ஏசி காற்றில் என் கூந்தல் கலைவதை
ரசித்தவாறே என் கரம்பற்றி பேச ஆரம்பித்தான் வினோத்
"சாரிமா...யாருக்கும் தெரியாம காரை எடுத்துகிட்டு வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு"
"வினோத்..ரொம்ப யோசிட்டுத்தான் உன்கூட வர்றேன்.. என்னை ஏமாத்திட மாட்டியே?"
"என்னடா செல்லம் என்மேல் நம்பிக்கை இல்லையா?...அது சரி...இது என்ன புருவமா இல்ல
கறுப்பு வானவில்லா" என் புருவத்தில் முத்தமிட்ட ஆரம்பித்தான் வினோத்.
அதிகாலை ஆறு மணி.
சே இவனை நம்பி இப்படி மோசம் போய்டோமே! இவனை யோக்கியன்னு
நினைச்சு வந்தேன்ல என் புத்திய எதால அடிக்கறது?
இவ்வளவு மட்டமானவனா இவன்?
வினோத்தை திட்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன் பஸ்டாண்டிலிருந்து என் வீடு நோக்கி.
இரண்டாயிரம் பேசிவிட்டு இருநூறு குறைச்சு தந்தா கோபம் வருமா வராதா?
[+/-] |
மணல்வீடுகள்..(இருநிமிடக் கதை) |
மெரினா கடற்கரை:
"இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே
இல்லையா?" கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா.
"இல்ல பாலா...உன் புரிதலில்தான் தப்பு இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கும்,
உன்கூட சினிமா,டிஸ்கோன்னு நான் சுத்தினதும் உண்மை, எனக்கு ஊர்சுத்துறது ரொம்ப பிடிக்கும்,அதுக்கு ஒரு ஆள் தேவைபட்டுச்சு. தேட்ஸ் ஆல்! இதுக்கெல்லாம் பெயர் காதல்,கத்தரிக்காய்ன்னா சுத்த
பைத்தியக்காரத்தனம் பாலா" இயல்பாகச் சொன்னாள் நந்தினி.
"எப்படி உன்னால இப்படி பேச முடியுது? உனக்கு மனசே இல்லையா நந்தினி"
"யார் சொன்னா? எனக்கு மனசுமிருக்கு,வாழ்க்கை பத்தின தெளிவும் இருக்கு
அடுத்த வாரம் எனக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை அமெரிக்காவுல சாப்ட்வேர் இன்ஞ்சினியர்" நான் வர்றேன் பாலா.
விறுவிறுவென்று நடந்து செல்லும் நந்தினியை தடுக்கமுடியாமல் கடலை
வெறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் பாலா.
மியாமி கடற்கரை:
"நீ ஒரு இந்தியன், நல்ல குடும்பத்து பையன்ங்கறதாலதான் உன்னன உயிருக்கு
உயிரா காதலிச்சேன் அருண். ஆனா இப்போ நாம பிரிஞ்சுடலாம்னு ஈஸியா சொல்றியே
இது உனக்கே நல்லா இருக்கா?" கோபமாகக் கேட்டாள் ஜெனிபர்.
"உண்மைதான் ஜெனிபர், எனக்கும் உன்னை பிடிச்சிருந்தது ஆனா நீ நினைக்கிற மாதிரி
உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீயும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண்தான்.
ஆனா நீ வளர்ந்த விதம் வேற உன்னால எங்ககுடும்பத்து பெண்ணா இருக்க முடியாது" கவலையின்றி
பேசினான் அருண்.
"சே நீ எல்லாம் ஒரு மனுசனா? உன்னை காதலிச்சத நெனச்சா வெட்கமா இருக்கு..கெட் லாஸ்ட் யூ கோவர்ட்"
ஆவேசமாக திட்டிவிட்டு எழுந்து சென்றாள் ஜெனிபர்.
"அப்பாடா நிம்மதி இனிமே எனக்கு அப்பா அம்மா பார்த்திருக்கற நந்தினியை கட்டிக்கவேண்டியதுதான்
அவ ரொம்பநல்ல குடும்பபெண்ணாம்" அப்பா போன்ல சொன்னதை நினைத்துக்கொண்டே கடலை
ரசிக்கத்துவங்கிய அருணைக் கண்டு கைதட்டி சிரித்தது ஒரு மெரினா அலை.
[+/-] |
கொடுத்துவைத்தவர்...(இருநிமிடக் கதை) |
கடற்கரை.
பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம்
கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை.
மழைக்கு ஒதுங்க அருகிலிருக்கும் கோவிலுக்குள் ஓடத்துவங்கினர்
சிறுவர் சிறுமியர்...ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் நுழைந்தனர்
பெரியவர்கள்.
மழையில் நனைந்துகொண்டே மெதுவாய் கோவிலை அடைந்தனர்
காதலர்கள்.
கடல்நீரில் கரையவேண்டிய பிள்ளையார்
மழைநீரில் கரைந்துகொண்டிருந்தார்.
"கொடுத்துவச்ச பிள்ளையாருப்பா உப்புத்தண்ணில
கர்யாம நல்ல தண்ணீல கர்யிராரு"
முணுமுணுத்துக்கொண்டே சென்றாள் பஞ்சுமிட்டாய்
விற்கும் கிழவி.
[+/-] |
"போனோமா வந்தோமான்னு இருக்கணும்"(இருநிமிடக் கதை) |
இரவு மணி இரண்டு.
வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
"சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.
அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது...
"அப்பா என்னை ஏன் தொந்தரவு பண்றே...நீ போய் கொடுத்துட்டு வரலாம்ல?"
"இல்லடா முன்னமாதிரி என்னால அலைய முடியல...கைகால் எல்லாம்
நடுங்க ஆரம்பிச்சுடுது வயசாகுதுல்ல?"
"அதுக்காக மும்பைல இருந்து நான் வந்து இந்த பூனாக்காரன பார்க்கணுமா?"
"இந்த ஒரு தடவை பொறுத்துக்கோ,இனி உன்னை நான் கூப்பிடல"
"சரி சரி உடனே கோவம் வந்துருமே?,நானே போறேன்"
இப்போது பூனே ரயில் நிலையத்திலிருந்து இரண்டுகிலோமீட்டர்தூரத்தில் இருக்கிறான் மகேசு.
மடியில் கனத்தை வைத்துக்கொண்டு யாருக்குத்தான் பயமிருக்காது?
இன்னும் அரைகிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரணாவ் சேட்டின் வீடு.
அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது "போனமா வந்தமான்னு" இருக்கணும் டா..
உனக்காக காத்துகிட்டு கிடப்பேன் சீக்கிரம் கொடுத்துட்டு
வந்துடு...
நாய்களின் குரைப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே போனது..
மகேசுக்கு நாய்கள் என்றால் ரொம்ப பயம்.. சின்ன வயதில் ஒருமுறை
தெரு நாயொன்று விரட்டியதில் கிழே விழுந்து முட்டில் ஏற்பட்ட தழும்பு இன்னும் இருக்கிறது.
சே இந்த பிரணாவ் சேட்டுக்கு அறிவே கிடையாது என் உசிர எடுக்கிறானே என்று சலித்துக்கொண்டே நடந்தான் மகேசு.
அதோ அந்த முனையில்தான் வீடு.. வீட்டை நெருங்கி மெதுவாய் கதவை
தட்டினான் மகேசு.
இருநிமிடம் கழித்து "கோன்" என்று தூக்ககலக்கத்தில் கேட்டவாறே கதவை திறந்த
சேட்டின் நெஞ்சில்தான் கொண்டுவந்ததை கொடுத்துவிட்டு
விசிலடித்துக்கொண்டே திரும்பி நடந்தான் மகேசு.
சேட்டின் அலறல் சத்தம் கேட்டு மிரட்சியுடன் தலை உயர்த்தி பார்த்தது ஒரு தெருநாய்.