Sunday, September 16, 2007

மணல்வீடுகள்..(இருநிமிடக் கதை)





மெரினா கடற்கரை:

"இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே
இல்லையா?" கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா.

"இல்ல பாலா...உன் புரிதலில்தான் தப்பு இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கும்,
உன்கூட சினிமா,டிஸ்கோன்னு நான் சுத்தினதும் உண்மை, எனக்கு ஊர்சுத்துறது ரொம்ப பிடிக்கும்,அதுக்கு ஒரு ஆள் தேவைபட்டுச்சு. தேட்ஸ் ஆல்! இதுக்கெல்லாம் பெயர் காதல்,கத்தரிக்காய்ன்னா சுத்த
பைத்தியக்காரத்தனம் பாலா" இயல்பாகச் சொன்னாள் நந்தினி.

"எப்படி உன்னால இப்படி பேச முடியுது? உனக்கு மனசே இல்லையா நந்தினி"

"யார் சொன்னா? எனக்கு மனசுமிருக்கு,வாழ்க்கை பத்தின தெளிவும் இருக்கு
அடுத்த வாரம் எனக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை அமெரிக்காவுல சாப்ட்வேர் இன்ஞ்சினியர்" நான் வர்றேன் பாலா.

விறுவிறுவென்று நடந்து செல்லும் நந்தினியை தடுக்கமுடியாமல் கடலை
வெறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் பாலா.

மியாமி கடற்கரை:

"நீ ஒரு இந்தியன், நல்ல குடும்பத்து பையன்ங்கறதாலதான் உன்னன உயிருக்கு
உயிரா காதலிச்சேன் அருண். ஆனா இப்போ நாம பிரிஞ்சுடலாம்னு ஈஸியா சொல்றியே
இது உனக்கே நல்லா இருக்கா?" கோபமாகக் கேட்டாள் ஜெனிபர்.

"உண்மைதான் ஜெனிபர், எனக்கும் உன்னை பிடிச்சிருந்தது ஆனா நீ நினைக்கிற மாதிரி
உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீயும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண்தான்.
ஆனா நீ வளர்ந்த விதம் வேற உன்னால எங்ககுடும்பத்து பெண்ணா இருக்க முடியாது" கவலையின்றி
பேசினான் அருண்.

"சே நீ எல்லாம் ஒரு மனுசனா? உன்னை காதலிச்சத நெனச்சா வெட்கமா இருக்கு..கெட் லாஸ்ட் யூ கோவர்ட்"
ஆவேசமாக திட்டிவிட்டு எழுந்து சென்றாள் ஜெனிபர்.

"அப்பாடா நிம்மதி இனிமே எனக்கு அப்பா அம்மா பார்த்திருக்கற நந்தினியை கட்டிக்கவேண்டியதுதான்
அவ ரொம்பநல்ல குடும்பபெண்ணாம்" அப்பா போன்ல சொன்னதை நினைத்துக்கொண்டே கடலை
ரசிக்கத்துவங்கிய அருணைக் கண்டு கைதட்டி சிரித்தது ஒரு மெரினா அலை.

13 Comments:

Follow your DREAMS... said...

Sari yaana konathil... paarkap patta nigal kaala vaazhkai. :)

Unknown said...

பொதுவாக இளைஞர் இளைஞிகளிடன் சுதந்திரமாக சுற்ற எண்ணம் உள்ளது. அதற்கு அந்த நேர துணை மட்டும்தான் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் நீண்டகால உறவு என எண்ணும்போது பொறுப்பு வந்துவிடுகிறது.

யோசிப்பவர் said...

kalaukkkuRee Nanpaa!

Kavipriyai said...

nice one

Kavipriyai said...

nice one

Anonymous said...

nalla kathai... kathaikkappatta vithamum arumai..

snegamudan,
nirandhari

யோசிப்பவர் said...

மியாமி மெரினா
இரண்டிலு மிருப்பது
மெல்லிய மணல்
மட்டு மல்ல
முறிந்து போன
மன(ண)ங்களும் தான்

இந்தக் கவியின் விதை
நிலா ரசிகனின் கதை

சோ.மஹாலெட்சுமி said...

Comment for மணல் வீடுகள்:
------------------------
சும்மா ப‌டிக்க‌ ம‌ட்டும் வேணும்னா, இந்த க‌தைக்கு இர‌ண்டு நிமிடங்க‌ள் போதும்..
ஆனா க‌தையில் க‌தாசிரிய‌ரானா நீங்க எதை அர்த்த‌ம் ப‌ண்ணி இந்த‌ க‌தையை எழுதியிருக்கீங்க‌, எதை, யாரை குத்தி காமிச்சுருக்கீங்க‌; எதை, யாரை குத்தி காமிக்க‌லை; கதையோட த‌லைப்புக்கும், க‌தைக்கும் எப்ப‌டி முடிச்சு போட்டு இருக்கீங்க‌ன்னு பார்க்கும் போது எங்க‌ளை ம‌ன்னிக்க‌னும் என்னை ப‌ல‌ நிமிட‌ங்க‌ள் உக்கார்ந்து சிந்திக்க வச்சுருக்கீங்க...

வெயில்லயும் காயாம, மழையிலயும் நனையாம வார்த்தைகளை கச்சிதமா கையாண்டு, ரொம்ப அழகா கதையை தோரணிச்சுருக்கீங்க..

ஆனா பாருங்க நான் உங்க அளவிற்கு அறிவாளியோ, சிந்தனை சிற்பியோ இல்லைங்கிறதால, எனக்கு விளங்காத சில சாடல்களையும், கதையின் கருவோடு அந்த சாடல்களை எவ்வாறு பிணைத்துள்ளீர்கள் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியாததையும் தங்களிடமே கேட்டுவிடலாமென்று முடிவு செய்துள்ளேன்..

எனக்கு புரியாத கேள்வி கிறுக்கல்கள்:

மெரினா கடற்கரையில்:-
ஒரு பெண் ஒரு ஆணோட இந்த காலத்து நாகரிக பாணியில் social-a jovial-a பழகுறத, காதல்னு தப்பா புரிஞ்சுகிட்டான்னு கதா நாயகி சொல்லும் போது அவ ரொம்ப ரொம்ப எதார்த்தவாதி, அந்த பையன் மேலதான் தப்பு, அவனோட அறியாமை தான் தப்புன்னு நினைக்க தோன்றினாலும்
அடுத்த பாராவிலே "வாழ்க்கைப் பத்தின தெளிவு" ங்கிற வரியில் நந்தினி மேல தான் தப்பு இருக்கு, she is cheating himனு ஒரு குத்தலா உணர்த்தி இருக்கிறதா நான் நினைக்கிறேன்..

Am I correct?

மியாமி க‌ட‌ற்க‌ரையில்:
என்ன‌தான் வெளி நாட்டில் ஒரு பெண்ணோட காத‌லித்து சுத்தினாலும் க‌ல்யாண‌ம்னு வ‌ரும்போது பெத்த‌வ‌ங்க‌ளும், ம‌த்த‌வ‌ங்க‌ளும், தானும் (இந்திய‌ ஆணின் ம‌னமாக‌ - குடும்பபெண் வேண்டும்) ம‌கிழும் ப‌டி காத‌லித்த‌வ‌ளை மிக‌ சுலப‌மாக‌ உத‌றிவிட்டு அனைவ‌ரும் ம‌கிழும் ப‌டியாக தன் வ‌ருங்கால‌ ச‌ந்தோஷ‌த்திற்கு ஏற்றார் போல‌ தான் எடுத்த முடிவில் எந்த ஒரு பிர‌ச்ச‌னையும் (தன் காதலால்,காதலியால் வரக்கூடிய பிரச்சனை) இல்லாம‌ல் ஜெயித்துவிட்ட‌தாக அருண் ம‌கிழும் போது, தாங்க‌ள் குறிப்பிட்டுள்ள "கைதட்டி சிரித்தது ஒரு அலை" என்பதில் மியாமி அலையும் அவன் வெற்றியை (காதலித்தவளை மிக சுலபமாக உதறியதை) கைதட்டி வரவேற்று சிரித்ததாக நான் உணரவில்லை... இவ்விடத்தில் கதையின் தலைப்பை கருவாக நினைத்து அருண் தன் மனதில் கட்டிய உயிரில்லா மணல் வீடை தான் (மியாமி அலை) மிக சுலபமாக கலைக்க போவதாக அதாவது நந்தினி அவன் எதிர்பார்க்கும் அளவிற்கு குடும்ப பெண் அல்ல; மேற்கத்திய கலாச்சாரத்தில் அதிக நாட்டம் கொண்ட, அவனைப் போலவே மாறும் குணம் கொண்ட பச்சோந்தி; மாப்பு அங்க வைக்கிறேன்டி உனக்கு ஆப்பு என்று கூறி கை கொட்டி சிரிப்பதாகவே உணர்கிறேன்..

என் உண‌ர்த‌லும், புரிந்து கொண்ட‌ப‌வையும் ச‌ரியெனில் என‌க்குள் உருத்திக் கொண்டிருக்கும் கேள்வி..

ப‌ல பேரோடு ப‌ழ‌கினாலும் த‌வ‌றில்லை; ப‌ல‌ பேரை ம‌ணந்து கொண்டாலும் த‌வ‌றில்லை என்று மிக‌ மிக‌ எதார்த்த‌மாக குருட்டான் போக்கில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளின் நாட்டில் ஓடும் மியாமி க‌ட‌ல், தான் கொண்டுள்ள உப்பின் ரோஷ‌த்திற்கு ஏற்ற‌வாறு தான் செய்ய‌ போகும் கலைக்கும் செய‌லின் உண்ண‌த‌த்தை மிக‌ அழ‌கிய‌ திமிரோடு, ரோஷ‌த்தோடு, ஏமாற்ற‌ப்ப‌ட்ட அந்த அமெரிக்க வாழ் இந்திய‌ப் பெண்ணின் சாப‌த்தோடு வ‌ருவ‌தாக உண‌ர்கிறேன் "கைதட்டி சிரித்தது ஒரு அலை" எனும் வ‌ரியில்.

ஏன் அதே வீரிய‌த்தையும், கோப‌த்தையும் தமிழர் பண்பாடோடு, தமிழனோடு, இந்தியனோடு இணைந்து வாழும் மெரினா க‌ட‌லின் அலைக்கு தாங்க‌ள் கொடுக்க‌வில்லை..

அருணை க‌ண்டிப்பாக மியாமி அலை த‌ண்டிக்க‌ப் போகிற‌து..
ஆனால் ந‌ந்தினியை ஏன் மெரினா க‌ட‌ல் அலை த‌ண்டிக்க‌வில்லை..
என்றைக்குமே பெண்க‌ளின் ஏமாற்ற‌த்திற்கும், சாப‌த்திற்கும் ம‌ட்டும் தான் இய‌ற்கை பதில் கூறுமா? துணை போகுமா ?
...
பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பாலாவிற்காக மெரினா க‌ட‌ல் அலையின் ஆத‌ர‌வினையோ, இல்லை நந்தினியின் பாசாங்குத் த‌ன‌மான ப‌ச்சோந்தி செய‌லிற்கு மெரினா க‌ட‌ல் அலையின் த‌ண்ட‌னையையோ ஏன் உங்க‌ள் க‌தையில் கூற‌வில்லை..??...

Hope you understand my point. If not please let me know.

நிலாரசிகன் said...

@மஹாலட்சுமி

//she is cheating himனு ஒரு குத்தலா உணர்த்தி இருக்கிறதா நான் நினைக்கிறேன்..

Am I correct?
//

Yes,You are correct.


//இவ்விடத்தில் கதையின் தலைப்பை கருவாக நினைத்து அருண் தன் மனதில் கட்டிய உயிரில்லா மணல் வீடை தான் (மியாமி அலை) மிக சுலபமாக கலைக்க போவதாக அதாவது நந்தினி அவன் எதிர்பார்க்கும் அளவிற்கு குடும்ப பெண் அல்ல; மேற்கத்திய கலாச்சாரத்தில் அதிக நாட்டம் கொண்ட, அவனைப் போலவே மாறும் குணம் கொண்ட பச்சோந்தி; மாப்பு அங்க வைக்கிறேன்டி உனக்கு ஆப்பு என்று கூறி கை கொட்டி சிரிப்பதாகவே உணர்கிறேன்..
//

மிகச்சரியான புரிதல். நான் சொல்ல வந்ததும் இதுவே.

//பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பாலாவிற்காக மெரினா க‌ட‌ல் அலையின் ஆத‌ர‌வினையோ, இல்லை நந்தினியின் பாசாங்குத் த‌ன‌மான ப‌ச்சோந்தி செய‌லிற்கு மெரினா க‌ட‌ல் அலையின் த‌ண்ட‌னையையோ ஏன் உங்க‌ள் க‌தையில் கூற‌வில்லை..??...
//
1.பாதிக்கப்பட்ட பாலாவிற்காக நான் அனுதாப படவில்லை. அவன் தேர்ந்தெடுத்த பெண் தவறானவள் என்று புரிந்துகொள்ளாமல் அவள் மீது காதல் கொண்டது இவன் செய்த தவறு.
2. நந்தினிக்கு பாலாபோன்ற நிஜக்காதலன் கிடைக்காமல் போனதே பெரியதண்டனைதான்...அவன் மனக்கடலின் கொந்தளிப்பு என்றாவது அவள் உணர்வாள் அதைவிட மிகப்பெரிய தண்டனை அவளுக்கு கிடையாது.

தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous said...

manal veedugal nanraga kaiyalapattu irukirathu

mahalakshmi in kelvi sarithan anal atharku eatrathana kalam sariya illai polum but nila rasigan mahalakshmi in kelvi ku neengal veru oru kathai moolam sollunga

melum elutha valthukkal

காஞ்சனை said...

கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பு. மணலில் கட்டிய வீடு போல் சட சடவென்று சரிந்து போனது அவர்களின் காதலில்லாக் காதல்.

சகாரா.

மங்களூர் சிவா said...

//
பொதுவாக இளைஞர் இளைஞிகளிடன் சுதந்திரமாக சுற்ற எண்ணம் உள்ளது. அதற்கு அந்த நேர துணை மட்டும்தான் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் நீண்டகால உறவு என எண்ணும்போது பொறுப்பு வந்துவிடுகிறது.

//
ரிப்பீட்டேய்

sarav said...

Chanceless, awesome....
உங்கள் கிரீடத்தில் மற்றுமோர் மாணிக்கம்...