Thursday, September 20, 2007

ஊனம்

ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை
முதல்முறையாய் ஆட்கொண்டது.
ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்.

எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன்.

"அண்ணா அண்ணா" என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன்.

அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் இடதுகை

நொறுங்கி கூழாகிப்போனது.

அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர் ரமேஷின் இடதுகையை.

நேற்றுதான் மருத்துவமனைவிட்டு வீடு வந்திருக்கிறான் .

"ரமேஷ்....அண்ணா வந்திருக்கார் பாருடா" அரைத்தூக்கத்திலிருந்தவனை

மெதுவாய் எழுப்பினார் அவன் அம்மா .

"அண்ணா இனி என்னால மத்த பசங்க மாதிரி விளையாட முடியாதாண்ணா?"

என்னைக்கண்டவுடன் கண்ணில் நீர்மல்க கேட்டான் ரமேஷ.

"உனக்கு ஒண்ணுமில்லடா நீ முன்ன மாதிரியே விளையாடலாம், உன் பிரண்ட்ஸ்கூட வெளியே போகலாம்,எல்லாம் பண்ணலாம்டா"
நான் சொன்னதைகேட்காமல் அழத்துவங்கிவிட்டான் ரமேஷ்.

என் ஆறுதல்வார்த்தைகளால் அவனை சமாதானப்படுத்த இயலவில்லை

ஊனம்தந்தவலியை அவன் கண்களில் உணர்ந்தவனாய்
வீடுநோக்கி திருப்பினேன் என் சக்கரநாற்காலியை.

2 Comments:

காஞ்சனை said...

“ஊனம் தந்த வலியை அவன் கண்களில் உணர்ந்தவனாய் வீடுநோக்கி
திருப்பினேன் என் சக்கரநாற்காலியை."
என்னென்னவோ யோசிக்க வைத்துவிட்டது இந்த வரிகள்.
இப்போது தான் நன்றாக‌ கதை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். வளரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.

கவிதைகளுடன்,
சகாரா.

Anonymous said...

Hats off....