Thursday, December 25, 2008

காதல்கதைகள்: கதை 2

கருவிழி மீன்கள்:

லக்ஷ்மியின் கண்களை பற்றி சூர்யா பேசாத நாட்களே இல்லை எனலாம்.
என்னுடம் பணிபுரியும் சூர்யாவிற்கு லக்ஷ்மியை மூன்று வருடங்களாக தெரியும்.
இணையத்தில் யாஹூ சாட்டில்தான் இருவரும் சந்தித்தார்கள். மெல்ல வளர்ந்தது
நட்பு. மூன்று வருடங்கள் நச்சரித்தபின்,கடந்த மாதம்தான் லக்ஷ்மி அவளது
புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அதை பார்த்த நாளிலிருந்து சூர்யாவுக்குள்
ஏற்பட்ட மாற்றத்திற்கு அளவே இல்லை.

அவளுக்கு எத்தனையோ மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தாலும் முதன் முதலாய்
காதல் கடிதம் எழுத தோன்றியபோது என்னிடம் வந்து புலம்பினான் சூர்யா.

"என்னமோ தெரியலடா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுட்டுது...இத்தனை நாளா
பிரண்டுன்னு சொல்லிட்டு இப்போ விரும்புறேன்னு சொன்னா தப்பா நினைச்சுக்குவாளோன்னு
பயமாவும் இருக்கு...பட் நவ் ஐம் இன் லவ் வித் ஹெர்...ப்ளீஸ் நீதான் கவிதை எல்லாம் எழுதுவ இல்ல
அவளுக்கு புடிக்கிற மாதிரி கவித்துவமா ஒரு லவ் லெட்டர் எழுதி தரணும்..." என்றான்.

"ஆளைவிடுடா காலேஜ்ல படிக்கிறப்போ இப்படித்தான் நண்பர்களுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுத்தே
என் வாழ்க்கை போச்சு...அதுமட்டுமில்லாம உன் காதலிக்கு நீதான் டா எழுதணும்"

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவன் கேட்கவில்லை. சரி எழுதி தருகிறேன் என்றதும் அவளது
புகைப்படத்தை தந்துவிட்டு சென்று விட்டான்.

கடிதமெழுத அமர்ந்தேன் நான்.

பூக்களின் சினேகிதியே,

மூன்று வருடங்களாய் என் உயிரில் கலந்துவிட்ட தோழி நீ. நான் விழும்போதெல்லாம் வார்த்தைதோள்
தந்த புனிதமானவள் நீ. இலையுதிர்காலத்திலும் நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சியாய் திகழும் உன்
நட்பில் திளைத்தவன் நான். உன்னோடு நான் பேசியதைவிட நம்மோடு நட்பு அதிகம் பேசியிருக்கிறது.
உன் குரல் கேட்காத பொழுதுகள் அனைத்தும் அனலாய் கொதிக்கின்றன. உச்சரிக்கப்படாத என்
வார்த்தைகளெல்லாம் உனக்குள் வீழ்ந்துகிடக்கின்றன. நட்பென்னும் கடற்கரையில் நாம் கட்டிய மணல்வீட்டை
இன்று காதலென்னும் அலைவந்து உடைத்தது நினைத்து புரியாத உணர்வுகளால் நெஞ்சு விம்முகிறது தோழி.
என் தோழன் என்கிற உனது எண்ணத்தில் கல்லெறிகிறது என் மனதில் புதிதாய் பூத்திருக்கும் நேசம். உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தைகளிலும் எனக்கான நட்பை மட்டுமே பார்த்து ரசித்து பழகிய இதயம் நட்பின் முனையில்
காதலை சுமந்து ஓடிவருகிறது உன் பின்னால். காயங்களால் நிரம்பிய என் பயணத்தில் நீ மட்டுமே வசந்தங்களை
பரிசளித்தாய். வாழ்க்கை முழுவதும் வசந்தமாக உன்னை வேண்டி நிற்கிறது மனசு.

இத்தனை நாட்கள் வராத காதல் இன்றெப்படி வந்தது எனக்குள்? உன் புகைப்படம் காணும் வரையில் தோழி என்று
மட்டுமே எண்ணிய என் இதயம் இப்பொழுது எப்படி காதலுக்குள் விழுந்து தத்தளிக்கிறது? உன் அழகில் மயங்கி நிற்கிறதா
என் உயிர்? இல்லை. உன் கண்களில் வழிகின்ற ப்ரியங்களை வாழ்வு முழுவதும் எனதாக்கி கொள்ளவே
விரும்புகிறது இந்த சுயநல மனம். என்னை மன்னித்துவிடு தோழி. உன்னிடம் எதையும் மறைத்ததில்லை இப்பொழுது
காதலையும்....

வண்ணமீன்களை பார்த்து ரசிப்பது இதயத்திற்கு நல்லது என்கிறது மருத்துவம். உன் கருவிழி மீன்களை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதே என் தவம்.

என் விரல்பற்றி வெகுதூரம் நடக்கவேண்டும் என்பது உன்னுடைய நெடுநாள் விருப்பம். உன் விரல்பற்றி அக்னி சாட்சியாய்
உன்னை என்னில் பாதியாக்கி கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன் லக்ஷ்மி. Yes I am in love with you.

உன் பதில் மடலுக்காக காத்திருக்கும்,
சூர்யா.

எழுதி முடித்தவுடன் சூர்யாவிற்கு அனுப்பினேன். ஒடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றி மச்சான் என்று போனவன்
மூன்று நாட்களாய் அலுவலகம் வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

மூன்று நாள் தாடியுடன் அலுவலகம் வந்த சூர்யா யாரிடமும் பேசவில்லை. அவனை அழைத்துக்கொண்டு
புல்வெளிக்கு சென்றேன். ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தோம். சிறிது நேர மெளனத்திற்கு பின் என்
பார்வை உணர்ந்து அவனாகவே பேச ஆரம்பித்தான்.

"நீ எழுதி கொடுத்த லவ் லெட்டரை அவளுக்கு அனுப்பிட்டு இரண்டு நாளா காத்திருந்தேன் டா... எப்பவும்
மெயில் அனுப்பிச்சா உடனே பதில் வந்திடும் பட் இரண்டு நாளாகியும் வரலைங்கறதால ரொம்ப துடிச்சிட்டேன்.
நேத்து மெயில் அனுப்பியிருந்தா... அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தமாம். அதை சொல்றதுக்காக
மெயில்பாக்ஸை திறந்தப்போதான் என்னோட மெயில் பாத்திருக்கா. இரண்டுநாளா என்னசொல்றதுன்னே
தெரியாம நேத்துதான் இந்த மெயிலை அனுப்பிச்சா" என்றபடி அவள் அனுப்பிய மடலை காண்பித்தான்.

"சூர்யா,

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.போலித்தனமற்ற உன் குறும்புபேச்சில் மனசு எப்பவும்
சிரிச்சுக்கிட்டே இருக்கும்.ஆனா காதலிக்கணும் உன்னையே திருமணம் செய்துக்கணும்ங்கற
எண்ணம் ஏனோ வந்ததே இல்லடா. யூ ஆர் மை பிரண்ட் பார்எவர்.. உன்னோட மெயிலை படிச்சுட்டு
என்னால எதுவுமே பண்ணமுடியலை. ஏன் தெரியுமா எனக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்.
அதை சொல்றதுக்காகத்தான் உனக்கு மெயில் பண்ண வந்தேன்.பட்..... இட்ஸ் ஆல் ரைட் சூர்யா.
யாருக்கு யார்ங்கறது நம்ம கையில இல்ல.
எப்பொழுதும் சூரியன்போல் நீ பிரகாசிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

கண்ணீருடன் உன்
தோழி."

படித்துமுடித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விரக்தியான புன்னகையுடன் உடைந்த
குரலில் சொன்னான் சூர்யா " அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து எழுதி கொடுடா"

மழை தூறல்போட ஆரம்பித்தது.இருவரும் மெல்ல நடக்க
ஆரம்பித்தோம். என் தோளில் சாய்ந்தபடி மெளனமாய் நடந்துவந்தான் சூர்யா. அந்த மெளனத்திற்குள் கவிதையாய் மலர்ந்திருந்தாள்
லக்ஷ்மி.

-நிலாரசிகன்.

9 Comments:

Raja said...

Sir,

Your nickname was "Nila Raseegan" but I think your present name is "Kadhal Raseegan" now.

Lovable & Touchable Story...

Regards,
Ponraja.P
9884126557

உமாஷக்தி said...

அழகான பெண்களின் தோழிகளும், காதலில் விழும் ஆண்களின் நண்பர்களும் பாவப்பட்ட characters..நீரோட்டமாய் கதை, சன்னமான தூறலில் நனைவதைப் போலிருந்தது...எத்தனையோ திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் தான் எனினும் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் நிலா இல்லை இல்லை ராஜா சொன்னது போல் காதல் ரசிகரே....

Anonymous said...

Dear Sir,
It was really a nice... keep it up and post manylike this...

yogalakshmi said...

Dear Nila,

Your Story is very nice.

giving mismerisem, poet about lakshmi

write about women, who is in true love, lonely and lovable girls.

Think about it....

நிலாரசிகன் said...

நன்றி ராஜா,உமா,அனானி.

யோகலட்சுமி,

விரைவில் பெண்ணின் காதலொன்றும் கதையாக மலரும்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

sugu said...

Good start
Nice stories (ninamana)

Valthukkal nila

-sugu

A N A N T H E N said...

//வண்ணமீன்களை பார்த்து ரசிப்பது இதயத்திற்கு நல்லது என்கிறது மருத்துவம். உன் கருவிழி மீன்களை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதே என் தவம்//
ரசித்து வாசித்த வரிகள்

//" அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து எழுதி கொடுடா"//
இதையும் நண்பன்தான் எழுதி தரணுமா?,
சூர்யாவிடம் சொல்லுங்கள், நிச்சயதார்த்தம் தானே நடந்திருக்கு, கலியாணம் வரை வாய்ப்புள்ளது என்று!!!

Hariharan Sekar said...

Hi Nila,

How are you selecting the perfect matching names? something the names stands in heart forever

இரசிகை said...

nallaayerunthathu..
antha kaadal kaditham koduththa itham..kathathin mudivil udane kaanaamal poivittathu..
vaazhthukal nila..