கருவிழி மீன்கள்:
லக்ஷ்மியின் கண்களை பற்றி சூர்யா பேசாத நாட்களே இல்லை எனலாம்.
என்னுடம் பணிபுரியும் சூர்யாவிற்கு லக்ஷ்மியை மூன்று வருடங்களாக தெரியும்.
இணையத்தில் யாஹூ சாட்டில்தான் இருவரும் சந்தித்தார்கள். மெல்ல வளர்ந்தது
நட்பு. மூன்று வருடங்கள் நச்சரித்தபின்,கடந்த மாதம்தான் லக்ஷ்மி அவளது
புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அதை பார்த்த நாளிலிருந்து சூர்யாவுக்குள்
ஏற்பட்ட மாற்றத்திற்கு அளவே இல்லை.
அவளுக்கு எத்தனையோ மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தாலும் முதன் முதலாய்
காதல் கடிதம் எழுத தோன்றியபோது என்னிடம் வந்து புலம்பினான் சூர்யா.
"என்னமோ தெரியலடா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுட்டுது...இத்தனை நாளா
பிரண்டுன்னு சொல்லிட்டு இப்போ விரும்புறேன்னு சொன்னா தப்பா நினைச்சுக்குவாளோன்னு
பயமாவும் இருக்கு...பட் நவ் ஐம் இன் லவ் வித் ஹெர்...ப்ளீஸ் நீதான் கவிதை எல்லாம் எழுதுவ இல்ல
அவளுக்கு புடிக்கிற மாதிரி கவித்துவமா ஒரு லவ் லெட்டர் எழுதி தரணும்..." என்றான்.
"ஆளைவிடுடா காலேஜ்ல படிக்கிறப்போ இப்படித்தான் நண்பர்களுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுத்தே
என் வாழ்க்கை போச்சு...அதுமட்டுமில்லாம உன் காதலிக்கு நீதான் டா எழுதணும்"
எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவன் கேட்கவில்லை. சரி எழுதி தருகிறேன் என்றதும் அவளது
புகைப்படத்தை தந்துவிட்டு சென்று விட்டான்.
கடிதமெழுத அமர்ந்தேன் நான்.
பூக்களின் சினேகிதியே,
மூன்று வருடங்களாய் என் உயிரில் கலந்துவிட்ட தோழி நீ. நான் விழும்போதெல்லாம் வார்த்தைதோள்
தந்த புனிதமானவள் நீ. இலையுதிர்காலத்திலும் நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சியாய் திகழும் உன்
நட்பில் திளைத்தவன் நான். உன்னோடு நான் பேசியதைவிட நம்மோடு நட்பு அதிகம் பேசியிருக்கிறது.
உன் குரல் கேட்காத பொழுதுகள் அனைத்தும் அனலாய் கொதிக்கின்றன. உச்சரிக்கப்படாத என்
வார்த்தைகளெல்லாம் உனக்குள் வீழ்ந்துகிடக்கின்றன. நட்பென்னும் கடற்கரையில் நாம் கட்டிய மணல்வீட்டை
இன்று காதலென்னும் அலைவந்து உடைத்தது நினைத்து புரியாத உணர்வுகளால் நெஞ்சு விம்முகிறது தோழி.
என் தோழன் என்கிற உனது எண்ணத்தில் கல்லெறிகிறது என் மனதில் புதிதாய் பூத்திருக்கும் நேசம். உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தைகளிலும் எனக்கான நட்பை மட்டுமே பார்த்து ரசித்து பழகிய இதயம் நட்பின் முனையில்
காதலை சுமந்து ஓடிவருகிறது உன் பின்னால். காயங்களால் நிரம்பிய என் பயணத்தில் நீ மட்டுமே வசந்தங்களை
பரிசளித்தாய். வாழ்க்கை முழுவதும் வசந்தமாக உன்னை வேண்டி நிற்கிறது மனசு.
இத்தனை நாட்கள் வராத காதல் இன்றெப்படி வந்தது எனக்குள்? உன் புகைப்படம் காணும் வரையில் தோழி என்று
மட்டுமே எண்ணிய என் இதயம் இப்பொழுது எப்படி காதலுக்குள் விழுந்து தத்தளிக்கிறது? உன் அழகில் மயங்கி நிற்கிறதா
என் உயிர்? இல்லை. உன் கண்களில் வழிகின்ற ப்ரியங்களை வாழ்வு முழுவதும் எனதாக்கி கொள்ளவே
விரும்புகிறது இந்த சுயநல மனம். என்னை மன்னித்துவிடு தோழி. உன்னிடம் எதையும் மறைத்ததில்லை இப்பொழுது
காதலையும்....
வண்ணமீன்களை பார்த்து ரசிப்பது இதயத்திற்கு நல்லது என்கிறது மருத்துவம். உன் கருவிழி மீன்களை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதே என் தவம்.
என் விரல்பற்றி வெகுதூரம் நடக்கவேண்டும் என்பது உன்னுடைய நெடுநாள் விருப்பம். உன் விரல்பற்றி அக்னி சாட்சியாய்
உன்னை என்னில் பாதியாக்கி கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன் லக்ஷ்மி. Yes I am in love with you.
உன் பதில் மடலுக்காக காத்திருக்கும்,
சூர்யா.
எழுதி முடித்தவுடன் சூர்யாவிற்கு அனுப்பினேன். ஒடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றி மச்சான் என்று போனவன்
மூன்று நாட்களாய் அலுவலகம் வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
மூன்று நாள் தாடியுடன் அலுவலகம் வந்த சூர்யா யாரிடமும் பேசவில்லை. அவனை அழைத்துக்கொண்டு
புல்வெளிக்கு சென்றேன். ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தோம். சிறிது நேர மெளனத்திற்கு பின் என்
பார்வை உணர்ந்து அவனாகவே பேச ஆரம்பித்தான்.
"நீ எழுதி கொடுத்த லவ் லெட்டரை அவளுக்கு அனுப்பிட்டு இரண்டு நாளா காத்திருந்தேன் டா... எப்பவும்
மெயில் அனுப்பிச்சா உடனே பதில் வந்திடும் பட் இரண்டு நாளாகியும் வரலைங்கறதால ரொம்ப துடிச்சிட்டேன்.
நேத்து மெயில் அனுப்பியிருந்தா... அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தமாம். அதை சொல்றதுக்காக
மெயில்பாக்ஸை திறந்தப்போதான் என்னோட மெயில் பாத்திருக்கா. இரண்டுநாளா என்னசொல்றதுன்னே
தெரியாம நேத்துதான் இந்த மெயிலை அனுப்பிச்சா" என்றபடி அவள் அனுப்பிய மடலை காண்பித்தான்.
"சூர்யா,
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.போலித்தனமற்ற உன் குறும்புபேச்சில் மனசு எப்பவும்
சிரிச்சுக்கிட்டே இருக்கும்.ஆனா காதலிக்கணும் உன்னையே திருமணம் செய்துக்கணும்ங்கற
எண்ணம் ஏனோ வந்ததே இல்லடா. யூ ஆர் மை பிரண்ட் பார்எவர்.. உன்னோட மெயிலை படிச்சுட்டு
என்னால எதுவுமே பண்ணமுடியலை. ஏன் தெரியுமா எனக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்.
அதை சொல்றதுக்காகத்தான் உனக்கு மெயில் பண்ண வந்தேன்.பட்..... இட்ஸ் ஆல் ரைட் சூர்யா.
யாருக்கு யார்ங்கறது நம்ம கையில இல்ல.
எப்பொழுதும் சூரியன்போல் நீ பிரகாசிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
கண்ணீருடன் உன்
தோழி."
படித்துமுடித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விரக்தியான புன்னகையுடன் உடைந்த
குரலில் சொன்னான் சூர்யா " அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து எழுதி கொடுடா"
மழை தூறல்போட ஆரம்பித்தது.இருவரும் மெல்ல நடக்க
ஆரம்பித்தோம். என் தோளில் சாய்ந்தபடி மெளனமாய் நடந்துவந்தான் சூர்யா. அந்த மெளனத்திற்குள் கவிதையாய் மலர்ந்திருந்தாள்
லக்ஷ்மி.
-நிலாரசிகன்.
Thursday, December 25, 2008
[+/-] |
காதல்கதைகள்: கதை 2 |
Tuesday, December 23, 2008
[+/-] |
காதல்கதைகள் - கதை 1 |
முன்கதைக்குறிப்பு:
[நான் கண்ட,கேட்ட காதல்கதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை அனைத்தும் நடந்த கதைகள்.
சற்று புனைவுடன் எழுதியிருக்கிறேன்,பெயர்கள் கற்பனையே]
சக்தியும்,ப்ரியம்வதாவும்:
பனி விழும் அதிகாலையில் இப்படித்தான் இந்தக்குட்டிக்கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று
நினைத்தேன். காரணம் ப்ரியம்வதாவை நினைத்து மெழுகுவர்த்திரியை ஏற்றி வைத்துக்கொண்டு
அழுதுகொண்டிருக்கும் சக்தியின் காதல் பனி விழும் அதிகாலை போல மிக அற்புதமானதுதான்.
ஆனால் என்னசெய்வது காதலில் பிரிவுதான் ஞானத்தை தருகிறது என்பதுபோல் சக்தி கொஞ்சநாட்களாக
தத்துவம் பேச ஆரம்பித்திருந்தான். ப்ரியம்வதாவின் பிரிவுதான் காரணம்.
சக்தி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளன். சிறுகதைகளில் அடுத்த ஜெ.கே இவன் தான் என்றார்கள் நண்பர்கள்.
அவனது ரசிகையாக அறிமுகமானாள் ப்ரியம்வதா. இருவரும் முதன்முதலாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான்
சந்தித்தார்கள்.
"எனக்கு உங்க கதைன்னா ரொம்ப இஷ்டம் சக்தி...ஐ ஜஸ்ட் லவ் இட்..எப்படி இவ்ளோ நல்லா எழுதறீங்க?" விழிகள் விரிய
கேட்டவளிடம் எழுத்தாளன் என்கிற சிறு கர்வத்துடன் பதில் சொன்னான் சக்தி.
"ரொம்ப சிம்பிள்ங்க...அதாவது பார்த்தீங்கன்னா..19ம் நூற்றாண்டின் இறுதியில புகழ்பெற்ற..... " ஏதேதோ சொல்லி அரைமணிநேரம்
பேசினான். அதன் பிறகு எஸ்.எம்.எஸும்,செல்லுமாக நட்பு மலர்ந்து காதலில் விழுந்தார்கள் இருவரும்.
ப்ரியம்வதாவும் இவனுக்காக கஷ்டப்பட்டு கவிதைகள் எழுதி அனுப்புவாள்
"நீ இல்லாவிட்டால் வானம் கறுக்கிறது மேகம் சிவக்கிறது வாழ்வின் அந்திவரை நீ வேண்டும் இல்லை மரணத்தை
முத்தமிடும் என் இதழ்கள்" என்று அவள் எழுதும் கவிதைகளை விட அதில் ஒளிந்திருக்கும் காதல் அழகாய் கண்சிமிட்டும்.
திடீரென்று ஒரு நாள் சக்திக்கு அவளிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
"என் தம்பிக்கு நாம பழகறது பிடிக்கலை சக்தி. எனக்கும் மாப்பிள்ளை பார்க்கிறாங்க.
இனிமேல் என்கிட்ட பேசவோ,என்னை சந்திக்கவோ முயற்சிக்காத,குட்பை"
பித்துப்பிடித்தவன்போல் திரிந்தான் சக்தி. ப்ரியங்களால் வதைத்து சென்ற அந்த ப்ரியம்வதாவின் நினைவில்
தினம் தினம் துடித்தான். எழுதுவதை மொத்தமாக நிறுத்திவிட்டான். இப்பொழுதெல்லாம் எங்காவது தடதடக்கும்
ரயிலின் ஓசைகேட்டால் மட்டும் சக்தியின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
எனக்கு சக்தியை பார்க்க பாவமாக இருக்கிறது. காதலால் தன்னிலை இழந்தவர்களில் சக்தியும் ஒருவன்.
ப்ரியம்வதா யாரை வதைத்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.
-நிலாரசிகன்.
Sunday, September 7, 2008
[+/-] |
விதி - சிறுகதை |
மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள்
ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும். முதல் முறையாக ஒரு
கொலை செய்யப்போகிறேன் என்கிற எண்ணமே உடலுக்குள் ஏதேதோ செய்தது. லேசாய்
உடம்பு சுட்டது. முதல் வகுப்பு ஏசியில் பயணித்தும் வியர்த்துக்கொண்டே
இருந்தது. இவை எதுவும் அறியாமல் என் தோளில் சாய்ந்துகொண்டு "ரீடர்ஸ்
டைஜஸ்ட்" படித்துக்கொண்டிருந்தாள் என் காதலி பூஜா.
எதிர் சீட்டில் இரு பெண்கள் ஒன்று நான் கொல்லப்போகும் ரேவதி. இன்னொருபெண்
பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவள் போலிருந்தாள். எலுமிச்சை நிறம்.
டிசர்ட்டில் தமிழ்ப்படுத்த முடியாத ஒரு ஆங்கில வாசகமிருந்தது. அவளை பற்றி
எதற்கு இப்போது? நான் கொலை செய்ய வேண்டியது ரேவதியை. காதில் ஐபோடை
மாட்டிக்கொண்டு,கண்கள் மூடி,ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பாடலை
ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் முகம் மட்டும் பளிச்சென்று இருந்தது.
அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரியுமே அது மாதிரி.
ரேவதி என்முன் வந்து அமர்ந்துபோது என்னை அடையாளம் கண்டுகொண்டு எவ்வித
பயமோ பதட்டமோ இல்லாமல் வெகு இயல்பாய் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு
பாடல்களில் மூழ்கிப்போனாள். பூஜாவிடம் ரேவதி என்னுடன் கல்லூரியில்
படித்தவள் என்று மட்டும் சொன்னேன். ரேவதியால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட
பூகம்பத்தை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. காரணம்,பூஜா என் காதலி. இந்த
இரண்டு வருடங்களாய் நான் சிரிப்பதற்கு காரணம் பூஜா. அதற்கு முன்பு நான்கு
வருடமாய் நான் அனுபவித்த சித்ரவதைக்கு காரணம் அப்பாவிபோல் என் முன்னால்
அமர்ந்திருக்கும் இந்த ரேவதிதான்.
ரேவதியும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். சென்னையிலிருக்கும்
மிகப்பிரபலமான கல்லூரியில்
முதலாம் ஆண்டு மாணவனாக கனவுகளுடன் சேர்ந்த முதல் வருடம் எவ்வித
பிரச்சினையுமின்றி கடந்துபோனது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளில்தான்
பிரச்சினை ஆரம்பமானது. எங்கள் பக்கத்து கல்லூரியின் சேர்மன் எலக்ஷனில்
ஏற்பட்ட அடிதடிக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள்தான் காரணம் என்று
உசுப்பிவிட்டதில் இருகல்லூரிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அப்போது கல்லூரிக்கு தன்னுடைய காரில் வந்துகொண்டிருந்த ரேவதியை
ஒருகூட்டம் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. கார் கண்ணாடிகள் அடித்து
நொறுக்கப்பட்டது. ரேவதியின் அப்பா ஒரு கோடீஸ்வரர். தன்னுடைய பணபலத்தை
பயன்படுத்தி காரை நொறுக்கியவர்கள் அனைவரையும் போலீஸ் ஸ்டேசனில்
நிறுத்தினார். சண்டையை வேடிக்கை பார்த்த நான் உட்பட.
இந்த அடிதடியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதை எவ்வளவோ
எடுத்துச்சொல்லியும் யாரும் கேட்பதாயில்லை. பிடிபட்ட மாணவர்கள் தங்கள்
பின்புலத்தால் வெளிவந்துவிட்டனர். அநாதையாய் மாட்டிக்கொண்டவன் நான்
மட்டும். 15 நாட்கள் காவலில் வைத்துவிட்டு அனுப்பினார்கள். என்னை
அவமானபடுத்திய ரேவதியை பழிவாங்க நினைத்து அவள் ஜிம்மிலிருந்து கார்
நோக்கி போகும்போது ஆசிட் பாட்டிலை அவள் மீது எறிந்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல் ஓடிவிட்டேன். மறுநாள் போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு
போய் வாயில் நுரைதள்ளும் வரை அடித்தார்கள். ஒவ்வொரு அடிவிழும்போதும்
அவள் முகம் எவ்வளவு கோரமாய் மாறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டே வலியை
பொறுத்துக்கொண்டேன்.
கொலை முயற்சி வழக்கில் என்னை கைது செய்து புழல் சிறையில் நான்கு வருடம்
அடைத்தார்கள். மனம் கல்லாகி இருந்தது. ஆனாலும் ஒரே திருப்தி ரேவதியின்
கோரமுகம் மட்டும்தான். கொஞ்ச நாளில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் சொன்ன
செய்தி கேட்டு மனம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. ரேவதியின் முகத்தை
நோக்கி நான் வீசிய ஆசிட் தவறுதலாக அவள் கையில் பட்டிருக்கிறது. சிறிய
காயத்துடன் தப்பிவிட்டாள். நான்கு வருடமாய் வன்மத்துடன் ஜெயில் கம்பிகளை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
ஜெயிலை விட்டு வெளியே வந்தவுடன் எவ்வளவோ தேடியும் ரேவதியை கண்டு
பிடிக்கமுடியவில்லை. ஏதோ வெளியூருக்கு போய் விட்டதா சொன்னார்கள்.
படிப்பும் இல்லாமல் ஜெயில் சென்று வந்தவன் என்கிற பட்டத்துடன் சென்னையில்
வேலைதேட விரும்பவில்லை. திருட்டு ரயிலேறி மும்பை வந்து ஒரு ஹோட்டலில்
வேலைக்கு சேர்ந்து, வாழ்க்கை திசைமாறி போனது.
ஹோட்டலுக்கு எதிரே இருந்த பெண்கள் கல்லூரியில் தான் பூஜா
படித்துக்கொண்டிருந்தாள். நான்கு மாதம் கஷ்டப்பட்டு அவளை கவர்ந்து என்
காதலியாக்கியது அவள்மீதுள்ள காதல் மட்டுமல்ல.சென்னையில் அவள் அப்பா
வைத்திருக்கும் ஜுவல்லரி மீது கொண்ட காதலும்தான்.
"தூக்கம் வருது நவீன்…தூங்கலாமா?" பூஜாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு
கொண்டுவந்தது. பூஜா அழகிய மஞ்சள் நிற நைட்டிக்கு மாறியிருந்தாள். மற்ற
இரு பெண்களும் நைட்டிக்கு மாறியிருந்தனர்.
நானும் பூஜாவும் லோயர் பெர்த்தில் படுத்துக்கொண்டோம். எனக்கு நேர் மேலே
உள்ள பெர்த்தில் ரேவதியும், பூஜாவுக்கு மேலே உள்ள பெர்த்தில் அந்த
கல்லூரி பெண்ணும் படுத்துக்கொண்டனர்.
மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. இரயிலில் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.
எல்லோரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். எப்படி ரேவதியை ரயிலைவிட்டு
தள்ளுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை மாற்றி எழுதிய இந்த
சண்டாளியை எப்படி கொல்வது? யோசித்தபடியே படுத்திருந்தேன் ஏசியின்
குளிரில் மெல்ல உறங்கிப்போனேன்.
திடுக்கிட்டு விழித்து மணியை பார்த்தேன். அதிகாலை மூன்று மணி. சே கொலை
செய்ய போகும் நேரத்திலும் எனக்கு தூக்கம் வருகிறதே? இப்பவே புரொபஷனல்
கில்லராக மாறிவிட்டேனா? சீக்கிரம் காரியத்தை முடிக்கவேண்டும் என்று
நினைத்துக்கொண்டிருந்தபோது ரேவதி பாத்ரூம் நோக்கி நடந்தாள். இதுதான்
சரியான தருணம். சட்டென்று எழுந்தேன். விளக்கில்லாமல் இருள்
கவிந்திருந்தது. அடிமேல் அடியெடுத்துவைத்து மெல்ல சென்று ரயிலின் கதவை
திறந்து வைத்துக்கொண்டு கதவருகே ரேவதிக்காக காத்திருந்தேன்.
பாத்ரூமிலிருந்து டவலால் முகம் துடைத்துக்கொண்டே வந்தவளை சட்டென்று கதவை நோக்கி வேகமாக தள்ளினேன்.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து ரயிலுக்கு வெளியே விழுந்தவளின்
அலறல்சத்தம் காற்றில் கலந்து மறைந்தது.
இத்தனை வருடமாய் இதற்காகத்தானே காத்திருந்தேன். இனி என் பூஜா என்
ஜுவல்லரி. கதவை மெதுவாய் மூடிவிட்டு சீட்டுக்கு வந்து உட்காரும்போதுதான்
கவனித்தேன்…பூஜாவைக் காணவில்லை! ஓடிச்சென்று பாத்ரூமிலும் தேடினேன்.
எங்குமில்லை என் பூஜா. அப்படியெனில்…நான் தள்ளியது பூஜாவையா? அய்யோ ஏன்
எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. இனி நான் மட்டும் இருந்து என்ன
ஆகிவிடப்போகிறது? பூஜா நானும் உன்னோடு வந்துவிடுகிறேன் ஓடிச்சென்று
கதவைத் திறந்து குதித்துவிட்டேன்.
ஒரு முட்புதரில் பொத்தென்று விழுந்ததில் எலும்புகள் நொறுங்கியிருக்கவேண்டும்..உயிர் போகும் வலியுடன்,எங்கிருக்கிறேன் என்கிற
உணர்வு குறைய ஆரம்பித்தபோது காதிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்திருந்தது.
இரவு பத்து மணிக்கு நான் உறங்கிய பின்னர் குளிர் தாங்க முடியாமல்
பூஜாவிற்கு மேலுள்ள பெர்த்தில் படுத்திருந்த அந்தக் கல்லூரி பெண் பூஜா
இடத்திற்கும் பூஜா அவள் இடத்திற்கும் மாறியதோ, பாத்ரூம் போனது ரேவதி
என்று நினைத்து அந்த கல்லூரி பெண்ணை நான் தள்ளிவிட்டதோ, கீழே விழுந்தவள்
ரயில் பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து கரை நோக்கி
நீந்தியதோ அறியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் ரேவதி. இவை எதைப் பற்றிய
கவலையுமின்றி சென்னை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த நீள ரயில்.
Wednesday, September 3, 2008
[+/-] |
காட்சிப்பிழை - சிறுகதை |
மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில் இறங்கி செருப்பை அணிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக கார் நிறுத்தும் இடம் நோக்கி சென்றாள். மாலை வெயிலில் அழகாய் மின்னியது அந்த உயர் ரக கார். காரை பார்த்த பிறகுதான் ப்ரியாவிற்கு போன உயிரே திரும்பி வந்தது. இந்த தில்லியில் பூட்டியிருக்கும் காரையே திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். நல்லவேளை என் கார் தப்பித்தது என்றெண்ணியபடியே கதவைத் திறந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவள் அதிர்ந்தாள். அருகே மெளனமாய் அமர்ந்திருந்தான் அருண்.
அருணைக் கண்டதும் அதுவும் இவ்வளவு பக்கத்தில் தன்னுடைய காரில் அமர்ந்திருக்கும் அருணைக் கண்டதும் ப்ரியாவிற்கு குப்பென்று வியர்த்தது.
ஆறு வருடங்கள் கழித்து அவனைக் கண்டவுடன் இனம் புரியாத ஒரு பயம் தொற்றிக்கொண்டது. முதலில் அவன் தானா என்கிற சந்தேகம் கூட ஏற்பட்டது காரணம் அப்போது சட்டை பேண்ட் அணிபவன் இப்போது ஜீன்ஸும், டீ-சர்ட்டும், கூலிங்கிளாஸுமாய் ஆளே மாறியிருந்தான். தன் அருகே அருண் உட்கார்ந்திருப்பதை அவள் கணவன் பார்த்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. காரணம் திருமணத்திற்கு முன் அருணை உயிருக்கு உயிராய் நேசித்தவள் ப்ரியா.
சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதுதான் அருணுக்கும் ப்ரியாவிற்கும் காதல் மலர்ந்தது. பார்வை பரிமாற்றத்தில் கொஞ்ச நாட்கள், பின் மெல்ல மெல்ல ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது நேசம். முதலில் ப்ரியாதான் காதலை சொன்னாள். கொஞ்சம் தயங்கித் தயங்கிதான் பேசுவான் அருண். அவனது ஏழ்மையும் ப்ரியா பணக்கார குடும்பப்பெண் என்பதாலும் முதலில் கொஞ்சம் தயங்கியபடியே பேசுவான் அருண். நாட்கள் ஓடியதில் உடல்வேறு உயிர் ஒன்று என்கிற நிலைக்கு வந்துவிட்டனர் இருவரும். ஒரு நாள் திடீரென்று ப்ரியாவிற்கு அதிகாலையில் போன் செய்தான் அருண்.
"என்னடா இவ்ளோ சீக்கிரம் போன் பண்ற" தூக்க கலக்கத்தில் கேட்டாள் ப்ரியா.
"செல்லம், இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு மெரினாவுக்கு வந்துடு, காரணம் கேட்காத..நீ வா சொல்றேன்"
அன்று மாலை நான்கு மணிக்கு கடற்கரை சென்று காத்திருந்தவள், பின்னாலிருந்து அருணின் குரல் கேட்டு திரும்பினாள். அங்கே பத்து பதினைந்து சிறுவர்களுடன் கையில் ஒரு பெரிய கேக்குடன் நின்றுகொண்டிருந்தான் அருண்.
"ஹேய் இன்னைக்கு என்னோட பர்த்டேகூட இல்லையே ஏன் இந்த அமர்க்களம் அருண்?" விழிகள் மலர கேட்டவளின் அழகிய முகத்தை தன் கைகளில் ஏந்தி பேச ஆரம்பித்தான் அருண் "இன்னைக்கு நாம காதலிக்க ஆரம்பிச்சு சரியா ஒருவருசம் ஆகுது ப்ரியா. என்னோட உயிரை நான் சந்திச்ச நாள். என் வாழ்க்கையில எப்பவுமே மறக்க முடியாத பொன்நாள். ஐ லவ் யூ டா" அவனை இறுக அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் ப்ரியா.
பூகம்பம் சொல்லிக்கொண்டா வருகிறது? ப்ரியாவின் காதலுக்கு அவள் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. "நம்ம சாதியென்ன அவன் சாதி என்ன? அதுமட்டுமில்ல ப்ரியா, நம்ம வீட்டுல கைகட்டி நின்னு வேலை செய்யறானே முத்துச்சாமி அவனை விட குறைவாதான் அருணால சம்பாதிக்க முடியும். தேவதை மாதிரி எம் பொண்ணை வளர்த்துருக்கேன். போயும் போயும் ஒரு பரதேசிக்கா உன்னை கல்யாணம் பண்ணி கொடுப்பேன். இப்பவே அவன மறந்துட்டு நான் சொல்ற மாப்பிள்ளையை கட்டிக்கோ. சினிமாத்தனமா ஏதாவது பண்ண நினைச்சா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை பெத்ததுக்கு உங்க அம்மாவை கொன்னு பொதச்சுருவேன்"
மூன்று நாட்கள் அடம்பிடித்துப் பார்த்து ஓய்ந்துபோனாள் ப்ரியா. விறுவிறுவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தன. தில்லியில் அரசாங்க பதவியில் இருக்கும் நரேனுக்கும் ப்ரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அப்பாவின் மிரட்டலிலும் அம்மாவின் கெஞ்சலிலும் ப்ரியாவின் தீர்க்கம் குறைந்து காதல் காணாமல் போனது.
கல்லூரியில் எல்லோருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டி இருக்கும் இடத்திற்கு சென்றவள் அங்கே அருணைக் கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாய் நின்றாள். வேகமாய் அவள் அருகே வந்தவன் அவள் கழுத்தைப் பிடித்து கண்ணுக்கு நேராக ஊடுருவி ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னான் "எவ்ளோ தைரியம் இருந்தா எவனோ ஒருத்தனை கட்டிக்க சம்மதிப்ப, நீ எங்க போனாலும் உனக்கு நான் தாண்டி எமன்" அவள் பேச ஆரம்பிப்பதற்குள் போய்விட்டான். கொஞ்ச நேரம் அழுதுகொண்டு அப்படியே நின்றாள்.
ஆறு வருடத்திற்கு முன்பு நடந்தவை அனைத்தும் மின்னலாய் மனதில் பளிச்சிட்டு மறைந்தது.இத்தனை வருடம் வராதவன் இப்போது வந்திருக்கிறானே என்ன ஆகுமோ என்று பயந்தபடியே பேச ஆரம்பிப்பதற்குள் அவளது கார் கண்ணாடியை தட்டி வெளியே வருமாறு சைகை செய்தாள் ஒரு பெண். அருகில் ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.
குழப்பத்துடன் இறங்கி
"என்னம்மா என்ன வேணும்?" என்றாள்.
"சாரி மேடம் அங்க உட்கார்ந்திருக்கிறது என்னோட ஹஸ்பெண்ட், உங்க காரும் எங்க காரும் பக்கத்துல நின்னதால தெரியாம உங்க கார்ல ஏறி உட்கார்ந்திருக்கார்" ஓ இவள்தான் அருணின் மனைவியா என்று நினைத்துக்கொண்டு
"உங்க காருக்கும் என் காருக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியாதா?" சற்று சலிப்புடன் கேட்டாள்.
"கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்த ஆக்ஸிடெண்ட்ல அவரோட ரெண்டு கண்ணுலயும் பார்வை போயிடுச்சு அதனாலதான் தெரியாம உங்க கார்ல ஏறி உட்கார்ந்திருக்கார். வெரி சாரி மேடம்" சொல்லிவிட்டு அருகில் நின்ற சிறுமியிடம்
"ப்ரியா போய் அப்பாவ கூட்டிக்கிட்டு வாம்மா" என்றாள். அப்பாவை கூட்டிச்செல்ல ஓடினாள் அச்சிறுமி. வார்த்தைகள் தொலைந்து ஊமையாய் நின்றிருந்தாள் அருணின் முன்னாள் காதலி ப்ரியா.
Thursday, August 7, 2008
[+/-] |
தூவல்..(சிறுகதை) |
அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று அமர்ந்தேன். அறைத்தோழன் நல்ல உறக்கத்திலிருந்தான். உறங்க மறுத்தன என் கண்கள். நினைவுகள் மெல்ல பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
பேனா கொண்டுவராமல் பள்ளிக்கு சென்றால் "பேனா(ய்) இல்லாமல் ஏன்னா(ய்) வந்தாய் போநா(ய்) வெளியே" என்று அழகாய்த் திட்டுவார் தமிழாசிரியர்.
அப்படி ஒரு நாள் பேனா இல்லாமல் சென்றதால் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்திருந்தார். தொடர்ந்து அழுது கொண்டே நின்ற என்னிடம் வந்தவர் "வெளிய நிக்கிறதுக்காக இப்படி தொடர்ந்து அழுவலாமா? நாளைக்கு மறக்காம பேனா கொண்டுவந்துரனும் சரியா?" என்றவாறே என் தோளில்தட்டி வகுப்பிற்குள் சென்று அமர வைத்தார். வெளியே நின்றதற்காக அழுவதற்கு நான் என்ன மூக்கொழுகி குமாரா? இரண்டு வாரம் என் அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய "ஹீரோ" பேனா திருடுபோனதால் நான் அழுதேன் என்பது யாருக்கும் தெரியாது. உலகில் மிகச்சிறந்த பொருள் "ஹீரோ" பேனா தான் என்பது என்னுடைய எண்ணம்.
பன்னிரெண்டாம் வகுப்பு டியூசன் சென்டரில்தான் முத்துச்செல்வியை சந்தித்தேன்.எண்ணை தேய்த்து தலைசீவி இரட்டை ஜடைபின்னி பச்சைக்கலர் ரிபன்கட்டியிருப்பாள். எப்பொழுதாவது மரிக்கொழுந்தும் கனகாம்பரமும் அவள் கூந்தலை அழகாக்கும். என்னுடன் படித்தவர்கள் எல்லோரையும் விட முத்துச்செல்விக்கு என்னைத்தான் பிடித்திருந்தது. பெஞ்சிலிருந்து முன் பெஞ்சைக் கடந்துசென்று பிரம்பால் அடிவாங்கிவிட்டு திரும்பும்போதெல்லாம் அவள் கண்கள் கலங்கியிருக்கும். காரணம் டியூசன் சென்டரிலேயே நான் தான் அடிமுட்டாள். அடிக்கடி அடிவாங்கும் முட்டாள். எல்லோரும் நான் அடிவாங்குவதை ரசிக்கும்போது இவள் மட்டும் பரிதாபமாய் பார்த்ததால் எனக்கும் அவளை பிடித்துப்போனது. அவளை பிடித்ததற்கு மற்றும் ஒரு காரணம் அவளிடமிருந்த விலையுயர்ந்த "பார்க்கர்" பேனா. முதல் நாள் கணக்கு நோட்டும் இரண்டாம் நாள் பேனாவும் கடன் வாங்கினேன். கணக்கு நோட்டை மட்டும் திருப்பித்தந்துவிட்டு டியூசன் சென்டரை மாற்றிக்கொண்டேன். முத்துச்செல்வி இரண்டுநாள் உம்மென்று இருந்துவிட்டு பின் சகஜமாகிப்போனதாக கேள்விப்பட்டு பேனாவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.
கஷ்டப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் தேறி கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில் கண்ணில் பட்டவள்தான் ரஞ்சனி. அவளைப் பார்த்தவுடனே பிடித்துப்போனது. இவள்தான் என் மனைவி என்று உள்ளுக்குள் மணியடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் பேச முயற்சித்து வெற்றி பெற்றேன் ஒரு மழைநாளில். குடையில்லாமல் நனைந்தபடி நடந்தவளுக்கு ஓடிச்சென்று குடைகொடுத்துதவி வள்ளல் ஆனேன். சில மாதங்களில் என் உற்றத்தோழியாக மாறியவள் என் பிறந்த நாள் பரிசாக ஃபாரீன் பேனா ஒன்றை பரிசளித்தாள். தங்க நிறத்தில் மினுமினுத்தது அந்தப்பேனா. அழகிய வேலைபாடுகளுடன்கூடிய மூடியில் சின்னதாய் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. பேனாவைக் கண்ட பரவசத்தில் ரஞ்சனியின் கைகளில் முத்தமிட்டுவிட்டேன். அன்று கோபித்துக்கொண்டு போனவள் அதன் பிறகு என்பக்கம் திரும்பவேயில்லை. மன்னிப்புக்கேட்டு நான்கு நாட்கள் அவள் பின்னால் அலைந்து சோர்ந்தபோது அவள் விட்டுச் சென்ற தங்கநிற பேனா மட்டுமே உடனிருந்தது.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு வந்த ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் வாழ்க்கை என்பதின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.
இரண்டுமணி நேர மின்சார ரயில் பயணமும்,பெரும் மக்கள்கூட்டத்தினூடாக நடப்பதும் வாடிக்கையானபோது தளர்ந்திருந்த எனக்கு ரயிலில் என்னோடு பயணிக்கும் சேட்டுப்பெண் மீது இனம்புரியாத ஒன்று உருவானது.அவளின் தங்கநிற தேகமும்,பச்சை நிற கண்களும் மனசுக்குள் ஏதேதோ கற்பனைகளை உருவாக்கின. மெல்ல அவளுடன் பழக ஆரம்பித்தபோது அவளுக்கு பிடித்த புத்தகமொன்றை பரிசாக தந்தேன். உடனே முகம் மலர்ந்தவள் ரயில் நிலையமென்றும் பாராமல் என் புறங்கையில் முத்தமிட்டாள். ரஞ்சனியின் ஞாபகம் வந்து போனது. முத்தமிட்டதோடு நில்லாமல் பரிசாக தங்கப்பேனா ஒன்றை தந்துவிட்டு "வில் யூ மேரி மீ" என்றாள். என் ஆங்கில அறிவு அவளுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள். அவளுடன் ஊர்சுற்ற அடிக்கடி விடுப்பு எடுத்ததால் வேலை பறிபோனது.
திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தவள் அவளது நிச்சயதார்த்த செய்தியை சொல்லி இருசொட்டு கண்ணீர்விட்டு பிரிந்துவிட்டாள். கையில் பணமில்லாமல் ரணப்பட்ட நெஞ்சுடன் மும்பை தெருக்களில் சுற்றி அலைந்தபோதுதான் பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டது. பிக்பாக்கெட் அடிப்பதும்,சிறுசிறு பொருட்களை மார்க்கெட்டில் திருடுவதும் அவனது தொழில். வேறு வழியின்றி அதைக்கற்றுக்கொண்டு வயிற்றைக் கழுவினேன். அப்போதுதான் பேனாவில் கத்தியும் உண்டு என்பது தெரிந்தது.மும்பை நகர போலீஸில் ஒரு நாள் சிக்கியதில் அவர்கள் அடித்த அடியில் வலது கால் நரம்பு அறுந்துவிட்டது.
சில நாட்களில் வெளியே வந்துபோது ஒரு கூலிப்படையின் அறிமுகம் கிடைத்தது.
நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது அறைக்கதவு திறக்கும் சப்தம். அந்த அதிகாலையில் இரண்டுபேர் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். கருப்புத்துணியால் என் தலைமூடப்பட்டது. உயிர் பிரிகின்ற பொழுதிலும் பேனாவின் முனை உடைத்த நீதிபதியை திட்டிக்கொண்டேயிருந்தது மனம்.
Tuesday, July 29, 2008
[+/-] |
அகல்யா – அறிவியல் புனைக்கதை |
சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும். சைக்கிளை முடிந்த அளவிற்கு வேகமா மிதிக்க ஆரம்பித்தேன். சாலையின் இரு பக்கமும் கனத்த இருள் கவிந்திருந்தது. பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், மழை எதிர்நோக்கும் தவளைகளின் சத்தமும் பெரிதாகிக்கொண்டே போனது. சைக்கிள் பஞ்சராகிவிட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. இவை எதைப்பற்றிய கவலையுமின்றி என் தோளை இறுகப்பற்றிக்கொண்டு ஏதோவொரு பாடலை பாடியபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.
அகல்யா என் உயிரில் கலந்துவிட்ட தேவதை. என்னுடன் கல்லூரியில் படித்தவள்.
பாறைமனதிற்குள் வேராக நுழைந்து இன்று விருட்சமாக மாறியவள். இன்று என் காதலி. நாளைய மனைவி. வழக்கமான சாதி பிரச்சினை என்றாலும் அவளது அப்பா ஊரின் மிகப்பெரிய மில்லுக்கு சொந்தக்காரர்.கொழுத்த பணம் படைத்தவர். அவரது கைகளில் சிக்கிவிடாமல் வெளியூர் சென்று வாழ முடிவெடுத்து இப்போது ஊரைவிட்டு சைக்கிளில் தப்பிச் செல்கிறோம். இன்னும் எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் டவுனுக்கு சென்றுவிட்டால் தப்பிவிடலாம்.
அகல்யாவின் அப்பாவிற்கு இந்நேரம் தெரிந்து ஆட்களுடன் கிளம்பி இருப்பார்.
இவை எதைப்பற்றிய கவலையுமின்றி பாடிக்கொண்டிருந்தாள் அகல்யா.
“அகல் கொஞ்சம் பாடாம வாயேன் ப்ளீஸ்மா”
“அதெல்லாம் முடியாது பாடுறது என் இஷ்டம்…நீ சைக்கிளை மிதி” சொல்லிவிட்டு சத்தமாக பாட ஆரம்பித்தாள். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய் அறிவுகெட்டவளே ஒங்கப்பன் இந்நேரம் அரிவாளுடன் கிளம்பி இருப்பான். நானே மிதிக்க முடியாம சைக்கிள மிதிக்கிறேன். இதுல பாட்டு ஒண்ணுதான் முக்கியமா?”
“சரி நான் பாடலை. ஆமா நாம எங்கே போறோம்?”
இதற்குமேல் இவளிடம் பேசி பயனில்லை. எப்போது விளையாடுவது என்று தெரியாது! எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும். நினைத்துக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தேன். என் தோளில் சாய்ந்தவள் மெல்ல என் இடுப்பைக் கிள்ளினாள். விளையாட்டுக்காரி! மறுநிமிடமே என் கோபம் மறைந்தது.
“கிள்ளாத செல்லம் வலிக்குது”
“எப்போ என்னை இறக்கி விடுவ? எனக்கு உட்கார முடியல ரொம்ப வலிக்குது”
“கொஞ்சம் பொறுத்துக்கமா இன்னும் நாலு கிலோமீட்டர்தான்”
மழை நின்றிருந்தது. காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அகல்யாவிற்கும் எனக்கும் நாளை திருமணம் என்பதை நினைத்து மனசெல்லாம் பூக்களாக மலர்ந்திருந்த நேரத்தில் டவுனை அடைந்தேன்.
டவுனிலிருக்கும் என் நண்பனின் தம்பி ஒருவனுடைய வீட்டிற்கு சென்று
கதவை தட்டியபோது நடு இரவு. கதவை திறந்து எங்களை அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் உள்ள குடிசைக்கு அழைத்துச் சென்றான் நண்பனின் தம்பி.
“அண்ணே நீங்களும் அண்ணியும் இன்னைக்கு ஒருநாள் இங்க தங்கிக்கிங்க,நாளைக்கு மத்த விசயத்த பேசலாம்” சொல்லிவிட்டு கொட்டாவிவிட்டபடி போய்விட்டான்.
குடிசைக்குள் கிடந்த கட்டிலில் களைப்புடன் அமர்ந்தேன்.
“அகல்யா உங்க அப்பாவை ஜெயிச்சுட்டேன். இனி என் கண்மணியை என்னைவிட்டு பிரிக்க யாராலும் முடியாது நாளைக்கு நம்ம கல்யாணம்”
அகல்யாவிடமிருந்து எந்த பதிலுமில்லை.
“இராத்திரி பதினோரு மணிக்கு வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலையேன்னு பாக்குறியா தாயி…உங்க அப்பன என்ன கேணையன்னு நினைசுட்டானா அந்த பொடிப்பய? நேத்துதான் மெட்ராஸுல இருந்து உன்னைய மாதிரியே ஒரு ரோபோவ ஆர்டர் செஞ்சு வாங்கிட்டுவந்தேன். நீன்னு நெனச்சு அதை கூட்டிக்கிட்டு போயிட்டான். இந்நேரம் பாட்டரி தீர்ந்து அதுவும் செத்திருக்கும்” சொல்லிவிட்டு சிரித்தார் அகல்யாவின் அப்பா. கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தாள் அகல்யா.
[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் புனைக்கதை போட்டிக்காக எழுதப்பட்டது]
-நிலாரசிகன்.
Monday, July 21, 2008
[+/-] |
ஏலியன் - விஞ்ஞான புனைக்கதை |
என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள் டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே சில்லென்ற காற்றும், ஏதோவொரு பூவின் வாசமும் மிதந்து வந்தது. நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். இரண்டு நாட்களாய் மண்டைக்குள் குடைச்சல். என் மனைவி மேலியனிடமும் சரியாக பேசவில்லை. என் வீட்டு நாயின் குரைப்புச் சத்தம் அவ்வப்போது கேட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தூக்கமின்றி பின்னிரவில் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் நடந்தபோது நான் கண்ட சில விநோதங்கள்தான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய முப்பது வருட வாழ்க்கையில் அன்றுதான் அந்த விநோதமான கால்தடங்களை தோட்டத்தில் பார்த்தேன்.
முதலில் ஏதோவொரு மிருகத்தின் கால்தடமென்றே நினைத்தேன். மிருகங்களை பற்றிய ஆராய்ச்சியில் பத்துவருட அனுபவமுள்ள என்னால் அந்த கால்தடத்திற்கு எந்தவொரு மிருகமும் காரணமில்லை என்று உறுதியாக நம்ப முடிந்தது. அப்படியெனில்..... அந்த தடங்களை புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
என்னுடைய கணினியின் டிஜிட்டல் நூலகத்தை ஆராய்ந்தபோது நூறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கால்தடமொன்றின் புகைப்படம் கிடைத்தது. அந்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் நான் எடுத்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் ஒத்துப்போனதை கண்டவுடன் துள்ளிக்குதித்தேன். என் சந்தேகம் சரிதான். ஒரு வேற்றுகிரக வாசியின் கால்தடம்தான் நான் தோட்டத்தில் பார்த்தது.
வேற்றுகிரக வாசியை உயிருடன் பிடித்துக்கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுக்கும். என் மகளை தேசத்தின் மிகச்சிறந்த பள்ளியில் சேர்க்கலாம். என் மனைவிக்கு மிக உயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம். சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தன என் கனவுகள்.
ஏலியனை பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் ஏலியன்கள் பலமற்றவர்கள் என்ற செய்தி மனதிற்கு தெம்பூட்டியது.
உடனே செயலில் இறங்கினேன். என்னிடமிருக்கும் இரவுக்கேமிரா மூலமாக தினமும் தோட்டத்தை நோட்டமிட ஆரம்பித்தேன். நான்கு நாட்களுக்கு பின் அந்த வினோத உருவம் மெதுவாய் என் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மரத்தின் மீது விறுவிறுவென்று ஏறி பழம் பறித்து தின்ன ஆரம்பித்தது தெரிந்தது. மிகவும் குள்ள உருவம்.உடம்பில் ரோமங்கள் இல்லை. பெயர்தெரியாத ஏதோ ஒன்றால் இடுப்பை மறைத்திருந்தது. முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன. மூக்கு நீண்டிருந்தது. தலையில் மட்டும் கொஞ்சம் முடியிருந்தது. ஆச்சரித்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியும் ஒரு ஜீவனா? நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.
மறுநாளிருந்து அந்த ஏலியனை பிடிக்க திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். இந்த குள்ள உருவத்தை பிடிக்க திட்டம் தேவையா என்று மனதிற்குள் தோன்றினாலும் நூறு வருடங்களுக்கு முன்பு அதாவது 2100ம் ஆண்டு ஏலியனுக்கும் என் முன்னோருக்கும் நடந்த மிகப்பெரிய போரில் ஏலியன்களால் உயிரிழந்த "தியாகிகள் சரித்திரம்" புத்தகம் நினைவுக்கு வந்தது. ஏலியன்கள் நம் போன்று உடல்வலிமை இல்லாவிட்டாலும் நிறைய ஆயுதங்கள் வைத்திருப்பதாக அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தது. ஒருவேளை இந்தக் குள்ளனும் ஏதேனும் ஆயுதம் வைத்திருந்தால்? மனதிற்குள் பலவாறு சிந்தனைகள் ஓடியது. முடிவில் அறுக்க முடியாத இழைகளால் ஆன வலையை வீசி பிடித்துவிட தீர்மானித்தேன்.
தோட்டத்து மரமொன்றின் உச்சியில் அந்த வலையை இலைகளுக்கு இடையில் மறைவாக விரித்தேன்.
அந்த வலையானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இன்று இரவு அந்த ஏலியன் மரத்தில் பழம் தின்ன வரும்போது அவனை ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம். அதன்பிறகு இந்த தேசத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் நானும் ஒருவன்.
வீட்டு பால்கனியில் அமர்ந்து உயர்ரக பைனாகுலர் மூலமாக அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன். என் அருகில் வந்து நின்றாள் டிமோ. அவளுக்கு இது வியப்பாகியிருக்க வேண்டும். தினமும் இரவானால் தனக்கு கதை சொல்கின்ற அப்பா இன்று ஏதோ விந்தையாக செய்கிறாரே என்று தோன்றியிருக்க வேண்டும்.
"அப்பா என்ன செய்றீங்க?" என்றவளை அணைத்துக்கொண்டே சொன்னேன்.
"இன்று உனக்கு ஒரு ஏலியனை பரிசாக தரப்போகிறேன்" என்னைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் தந்துவிட்டு உறங்க போய்விட்டாள் டிமோ.
இரவின் இரண்டாம் பாதியில் எதிர்பார்த்தபடியே அந்த உருவம் மெல்ல மரத்தில் ஏறத்துவங்கியது. பழத்தை பறிக்க கையை நீட்டும் சமயத்தில் ரிமோட்டை இயக்கினேன். வலை விரிந்து அந்த உருவத்தை மொத்தமாக அமுக்கியது.
அங்கும் இங்கும் கையை அசைத்து ஏதேதோ செய்தது அந்த ஏலியன்.
வீட்டிலிருந்து இறங்கி வேகமாக ஓடிச்சென்று வலையை தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து வீட்டினுள் போட்டேன். மிரட்சியான ஒரு பார்வையுடன் ஒடுங்கி இருந்தது அதன் உடம்பு.
உறங்கிக்கொண்டிருந்த டிமோவும்,என் மனைவி மேலியனும் சத்தம்கேட்டு எழுந்து வந்தார்கள்.
"இதுதான் ஏலியனா அப்பா" என்றாள் என் மகள் வியப்புக்குறையாமல்.
"ம் இதுதான் ஏலியன்" பெருமையுடன் சொன்னேன்.
"இந்த ஏலியன் எங்கிருந்து வந்திருக்கிறதப்பா?" ஆர்வமிகுதியில் கேட்டாள் டிமோ.
"இது Earth எனப்படும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறது. இனி நாம்தான் இந்த வெப்டியூன் கிரகத்தின் மிகப்பெரும் பணக்காரர்கள்" என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன்.
-நிலாரசிகன்.
[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
Tuesday, July 15, 2008
[+/-] |
மழை (அறிவியல் புனைக் கதை) |
இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே?
தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும் அழிந்துபோனது. கடல் கொந்தளிப்பும் சேர்ந்துகொண்டதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
ஆபத்து காலத்தில் பயன்படுமென்று நான் வாங்கி வைத்திருந்த ரப்பர் படகு இருந்ததால் தப்பிக்க முடிந்தது. துடுப்பு வலித்து வலித்து உள்ளங்கை மரத்துப்போய்விட்டது. இனியும் என்னால் இந்தப் படகை ஓட்ட முடியாது. எங்கே போகிறோம்,எங்கே சென்று சேருவோம் எதுவும் தெரியாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் மிதந்து கொண்டிருக்கிறது என் படகு. பசி உயிர் போகிறது.
மயக்கம் வருவது போலிரு....... விழித்துப் பார்த்தபோது தூரத்தில் பச்சை பசேலென்று மரங்கள் தென்பட்டன. சிறிய தீவு போலிருந்தது. வேகவேகமாக படகை செலுத்தினேன்.
நிலம்! நிலத்தில் இறங்கி மரங்களை நோக்கி ஓடினேன். நிறைய மாமரங்கள் இருந்தன.மரத்தை சுற்றிலும் மாம்பழங்கள் விழுந்து கிடந்தன. பொறுக்கி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
ஏழு பழங்கள் உண்டுமுடித்தபின் பயணக்களைப்பில் அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தேன். நான் விழிப்பதற்கு முன் என்னைப் பற்றி அடைப்புக்குறிக்குள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
[என் பெயர் எக்ஸ். ஆங்கிலத்தில் டபிள்வியூக்கு பின் வரும் எக்ஸ். செயற்கை மழை உருவாக்க அமைக்கப்பட்ட சர்வதேச குழுவின் தலைமை விஞ்ஞானி.
கேல்சியம் குளோரைடு,கேல்சியம் கார்பைடு,கேல்சியம் ஆக்ஸைடு, அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை காற்றில் செலுத்தினால்,காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை வருவிக்கும் தன்மை உடையவை. மாதம் நான்கு முறை எட்டுமணி நேரம் செயற்கை மழை பொழியவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
என் சிறுவயது முதலே பிற உயிர்களை கொன்று இன்பம் காண்பது எனக்கு பிடிக்கும். ஓணான்,அணில்,புறா,கிளி,குயில் இவையெல்லாம் சிறுவயதில் நான் வேட்டையாடி கொன்றது. பிற உயிர்கள் சாகும்போது கிடைக்கின்ற இன்பத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இதுதெரியாமல் இந்த குழுவிற்கு என்னை நியமித்தது இந்த அரசின் தவறு!. மாதம் நான்கு முறை உருவாக்க வேண்டிய மழையை தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்வதுபோல் உருவாக்கிவிட்டு நான் மட்டும் தப்பித்துக்கொண்டேன். த்ரில்லாக பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணியதால் ஒரு ரப்பர் படகு மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன்.ஓரிரு நாட்கள் பயணித்துவிட்டு உலகை அழித்தவன் நான் என்று சத்தம்போட்டு கத்திவிட்டு நானும் செத்துவிடவேண்டும் என்பதே என் திட்டம்.இப்போது நிம்மதியாக மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருக்கிறேன்]
உறக்கம் கலைந்து விழித்தபோது இருட்டிவிட்டிருந்தது. உலகை அழித்துவிட்டேன் என்றல்லவா நினைத்தேன். எப்படி இந்த இடம் மட்டும் எப்படி தப்பித்தது.இங்கே மட்டும் மழை பெய்யவில்லையா? கடலில் பெய்துகொண்டிருக்கும் மழை இந்த சிறிய தீவை மட்டும் நனைக்காமல் பெய்துகொண்டிருக்கிறதே!
ஆச்சர்யத்துடன் நடக்க ஆரம்பித்தேன். செடிகளையும் மரங்களையும் தவிர வேறொன்றும் இல்லை.
பூச்சிகளின் சத்தமும், உயர்ந்த மரங்களிடையே வசிக்கும் பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.
இவைகளை அழிக்க என்னால் இயலாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டது.
கவலையுடன் ஒரு பாறையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பாறைக்கு அருகே இருந்த மரத்திற்கு பின் சலசலப்பு கேட்டது. ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. ஏதேனும் காட்டுமிருகமாக இருக்குமோ என்றெண்ணியபடி கையில் ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு அந்த மரத்தின் அருகே சென்றேன்.
அங்கே....
ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளது உடலை மூட்டுவரை நீண்ட கருங்கூந்தல் மூடியிருந்தது. வேறு உடைகள் இல்லை. அவள் அருகில் நீண்ட தாடியும் இறுகிய உடலுடன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரையும் கொன்று விட்டால் போதும். உலகை அழித்தவன் நான் என்கிற சந்தோசத்தில் நானும் மரித்துவிடலாம். சற்றுத் தொலைவில் கூரிய கல்லொன்று கிடந்தது. அதை எடுக்க வேகமாக ஓடியதில் கால் இடறி அந்த கல்லில் விழுந்துவிட்டேன். நெஞ்சிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.
என் அருகில் அவர்கள் இருவரும் வந்து நின்றார்கள்..
மரண வலியுடன் "உன் பெயர் என்ன?" என்று அந்த இளைஞனை கேட்டேன்.
"இரண்டாம் ஆதாம்" என்று அவன் சொன்னதை கேட்க நான் உயிருடன் இல்லை.
[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
Wednesday, July 9, 2008
[+/-] |
குப்பைக்காரன் - அறிவியல் சிறுகதை |
முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன் வில்லியம்ஸுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 15ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான். அவனுடைய மேலாளர் “உங்கள் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மிஸ்டர். வில்லியம்ஸ் “என்று போனவாரம்தான் கைகுடுத்துவிட்டு போனார். ஆனால் பயணம் செய்யப்போகும் ஏழு விண்வெளி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய பெயரைத் தேடித் தேடி
ஏமார்ந்து போனான்.
வில்லியம்ஸ் உலகப் புகழ் பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானி. விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளிலேயே அதிபுத்திசாலியாக தானிருந்தும் மற்றவர்கள் “குப்பைக்காரன்” என்று தன்னை அழைப்பதை வில்லியம்ஸ் கொஞ்சமும் விரும்பவில்லை.இவனொன்றும் தெருவில் போடப்படுகின்ற குப்பைகளை அள்ளும் குப்பைக்காரன் அல்ல.
விண்வெளியில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சிறியதும் பெரியதுமாக பல லட்சம் ஓட்டை உடைசல்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் செயலற்றுப் போன செயற்கைக்கோள்களின் கழன்ற உறுப்புகள். செயற்கைக்கோள்களைச் செலுத்திய ராக்கெட்டுகளின் உடைந்த பாகங்களும் இதிலடங்கும். இந்த விண்வெளிக்குப்பைகளை லேசர் கற்றை மூலமாக இங்கிருந்தே அழிப்பதுதான் வில்லியம்ஸின் வேலை.
எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல ஜடாயுவில் பயணம் செய்யப்போகும் வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் அவர்கள் அனைவரையும் பழிவாங்கும் கொடூர எண்ணம் வில்லியம்ஸுக்கு தோன்றியது.
உடனடியாக செயலில் இறங்கிவிட்டான். விண்வெளியில் ஒரு ராக்கெட்டின் உடைந்த பாகம் சுற்றிக்கொண்டிருப்பதை தொலைநோக்கியில் பார்த்தவுடன் அவனது மூளைக்குள் குடிகொண்டிருந்த கொடூர எண்ணம் உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.
வழக்கமாக இது போன்ற குப்பைகளை லேசர் கற்றை செலுத்தி அழித்துவிடுவது இயல்பு. அதுதான் அவனது வேலையும் கூட. ஆனால் இப்போது அந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான் வில்லியம்ஸ். இரு வார கடும் முயற்சிக்குப் பின் வில்லியம்ஸ் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அந்த ராக்கெட் துண்டு பயணித்தது.
இதற்கிடையில், இவன் செய்கின்ற வேலையைக் கண்காணிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ரோபோவுக்குத் தெரியாமல் இதனை செய்தாகவேண்டும். ஏனெனில், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அந்த ரோபோ இவனது மேலாளருக்கு ரிப்போர்ட் அனுப்பும். ஆனால் அதிபுத்திசாலியான வில்லியம்ஸுக்கு அந்த இயந்திர மனிதனை கட்டுப்படுத்துவது பெரிய விசயமாக இருக்கவில்லை. ரோபோவுக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் கணினியில் புதிதாய் ஒரு புரோக்ராம் எழுதி ரோபோவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா விண்ணுக்கு செலுத்திய கொலம்பியா ஓடத்தின் இறக்கை மீது ஏதோ ஒரு பொருள் மோதியதால் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் உட்பட ஏழு விஞ்ஞானிகளின் உயிர் பறிக்கப்பட்டது. அது ஒரு தற்செயலான நிகழ்வு.
அதே போல் இந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை மூலமாக செலுத்தி
இந்தியா விண்ணிற்கு அனுப்ப இருக்கும் “ஜடாயு” ஓடத்தில் மோதச்செய்துவிடுவதுதான் வில்லியம்ஸின் திட்டம். இதுவும் ஒரு தற்செயலான செயல் என்றே உலகம் எண்ணும். தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன்னை கேலி செய்யும் மற்றவர்களுக்கு கிடைப்பதா?
14/ஆகஸ்ட்/2053.
விண்வெளியில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடைந்த ராக்கெட்துண்டு ஜடாயு மீது மணிக்கு 32 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதும்படி கச்சிதமாக ஒரு புரோக்ராம் எழுதினான் வில்லியம்ஸ். அவனது இதழ்களில் கொடூரமான ஒரு புன்னகை உருவாயிற்று.
15/ஆகஸ்ட்/2053 அதிகாலை நான்கு மணி.
பெருத்த சத்தமுடன் விண்ணோக்கி கிளம்பியது ஜடாயு.
ஜடாயுவின் உள்ளே…
மெதுவாய் கண்விழித்த வில்லியம்ஸை சுற்றிலும் கவசமணிந்த சக பணியாளர்கள் விண்வெளி ஓடத்திற்குள் மிதந்தவாறு கண்ணடித்தார்கள். தன் காதுகளில் மாட்டப்பட்டிருந்த
ஸ்பீக்கரில் அவர்களுடைய பாட்டுச் சத்தம் சன்னமாக கேட்டது. “ஹாப்பி பேர்த்டே டு யூ!!”.
(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)
Wednesday, July 2, 2008
[+/-] |
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்கதை |
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது முதல் முறையாக கோபம் வந்தது.அதை விட அதிகமாக ஜெனியின் கொள்ளுப்பாட்டன் மீது கோபம் வந்தது. நேற்று டிஜிட்டல் நூலகத்தில் அவருடைய வலைப்பதிவை படித்ததிலிருந்து ஜெனியின் பிடிவாதம் அதிகமாகிவிட்டது. "உலகிலேயே அதிக ருசி கொண்ட மாமிசம் மான்கறிதான்" என்று ஜெனியின் கொள்ளுப்பாட்டன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதை படித்ததிலிருந்து தனக்கும் மான்கறி வேண்டும் என்று அடம்பிடித்தாள் ஜெனி.
பிற உயிர்களை கொன்றால் என்ன நடக்கும் என்கிற எண்ணம் வந்தவுடன் ஜேம்ஸுக்கு பயம் தொற்றிக்கொண்டது. இரு புறாக்களை வேட்டையாடி சமைத்து தின்றதால் முதுமை ஊசி போடப்பட்டு ஒரே நிமிடத்தில் நாற்பது வயதை அடைந்துவிட்ட தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. நாற்பது வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள மரங்களை பராமரிப்பது, ஒவ்வொரு தெருவிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதும்தான் வேலை என்றாகிவிடும்.
ஜெனிக்காக மானை வேட்டையாடி பிடிபட்டால் நாளைக்கே நாற்பது வயதாக்கி விடுவார்கள். அதன்பிறகு இப்போது போல் மாதம் இருநூறு கோடி சம்பளம் கிடைக்காது. பென்சன் பணம் மாதம் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
இரண்டு கோடிக்கு ஒரு பழைய கார் கூட வாங்க முடியாது. ஆனாலும் ஜெனிக்காக இதைச் செய்தே ஆக வேண்டும். அதுவும் அரசிடம் பிடிபடாமல் செய்தாகவேண்டும். காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
“ஹாய் டியர் என்ன ரொம்ப யோசனையில இருக்க?”
பின்புறமாக வந்து ஜேம்ஸைக் கட்டிக்கொண்டு அவன் முதுகில் கன்னம் பதித்தவாறே கேட்டாள் ஜெனி.
“நான் முடிவு பண்ணிட்டேன் ஜெனி. உனக்காக மானை வேட்டை ஆட போறேன்”
தீர்க்கமான குரலில் சொன்னான் ஜேம்ஸ்.
“வாவ்…எப்படி ஜேம்?”
“எப்படின்னு முடிவு பண்ணல ஆனா இன்னும் சரியா மூணு மாசத்துல என் செல்ல ஹனிக்கு மான்கறியை நானே ஊட்டிவிடுவேன்” என்றபடி அவளது இதழ்களை ஈரமாக்கினான்.
சொன்னதை செயல்படுத்த தினமும் பல மணி நேரம் உழைத்தான் ஜேம்ஸ். உலகில் மொத்தம் மிஞ்சியிருப்பது இரண்டு மான்கள் மட்டும்தான் என்கிற செய்தி படித்தவுடன் தன் மூதாதையர்களை திட்டித்தீர்த்தான். அந்த இருமான்களும் வல்லநாடு மலையில் வசிப்பதை அறிந்துகொண்டான். மலையை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயற்கைகோளை உருவாக்கி இருந்தது அரசு.
அந்த செயற்கைகோளை மீறி எப்படி அந்த மான்களை நெருங்குவது என்று யோசித்தான் ஜேம்ஸ்.
மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது. அதன் பிறகு இரண்டு வாரங்களாக ஜேம்ஸ் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்கு கீழே நூறு அடி ஆழத்திலிருந்த தன்னுடைய ரகசிய அறையில் மும்முரமாக ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தான் ஜேம்ஸ்.
இருவாரங்களாக ஜேம்ஸிடமிருந்து எவ்வித தொடர்புமின்றி துடித்தாள் ஜெனி.
தன் படுக்கை அறையின் சன்னல் வழியே கடந்து செல்கின்ற தூரத்து பறவைகளை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள் .
திடீரென்று தன் கன்னத்தில் யாரோ கிள்ளுவது போன்று உணர்ந்து வெடுக்கென்று எழுந்து நின்றாள். அந்த அறையில் அவளைத் தவிர யாருமில்லை.
சன்னமாய் அவள் காதருகே ஒரு குரல் கேட்டது. “ஹனி மை டியர் ஜெனி”
ஜேம்ஸ்ஸின் குரலைக் கேட்டவுடன் திடுக்கிட்டாள். “ஜேம்ஸ் வேர் ஆர் யூ?” பதட்டத்துடன் கேட்டாள் ஜெனி. திடீரென்று அவள் கண்ணெதிரே தோன்றினான் ஜேம்ஸ்.
“ஹே ஜேம்ஸ் நீ எப்படி இங்கே வந்தே?”
“வெரி சிம்பிள் டியர், இப்போ நான் நினைச்சா யார் கண்ணுக்கும் தெரியாம மறைய முடியும். ரெண்டு வாரமா இதுக்காகத்தான் என்னோட ரகசிய அறையில உழைச்சேன் ஜெனி. இதோ பார் இந்த ஆரஞ்சு கேப்ஸூலை சாப்பிட்டா உடனே கண்ணுக்கு தெரியாம மறஞ்சுடலாம். எப்போ திரும்பவும் சகஜ நிலைக்கு வரணுமோ அப்போ இந்த வயலட் கேப்ஸூல் சாப்பிடணும். இனிமே அந்த மான்கறி இந்த மானுக்குத்தான்” என்றபடி அவள் கன்னத்தில் தட்டினான்.
தில்லியிலிருந்து தன்னுடைய விமானத்தில் மூன்று நிமிடத்தில் நெல்லைக்கு வந்து சேர்ந்தான் ஜேம்ஸ். திருநெல்வேலியில் விமானத்தை நிறுத்திவிட்டு ஆரஞ்சு மாத்திரையை விழுங்கி, அங்கிருந்து வல்லநாடு வந்து மூன்று மணி நேரத் தேடலுக்கு பின்னர் ஐம்பதடி தூரத்தில் ஒரு மானைப் பார்த்தான். கொஞ்சம் தழைகளை எடுத்து அதற்குள் ஆரஞ்சு மாத்திரையை வைத்து மானுக்கு கொடுத்தான். அதை தின்றவுடன் மானும் மறைந்துபோனது.
ஜெனி வீட்டு வாசற்கதவில் பொருத்தியிருந்த கணினியிடம் உள்நுழைய அனுமதி பெற்று வீட்டு வாசலில் மானுடன் நின்றுகொண்டிருந்தான் ஜேம்ஸ்.
ஜெனி வீட்டு வேலைக்கார ரோபோ ஜேம்ஸிற்கு வணக்கம் சொன்னது.
“குட் ஈவ்னிங்” என்றவாறே வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் மானை வைத்துவிட்டு ஜெனியைத் தேடினான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
“அரசை ஏமாற்றி மானை கடத்த முயன்ற குற்றத்திற்காக உங்களுக்கு முதுமை ஊசி போடப்படும். பிற உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அந்த குற்றத்தை ஊக்கப்படுத்தியதற்காக மூன்று முதுமை ஊசிகள் போடப்பட்டிருக்கிறது உங்கள் காதலி ஜெனிக்கு. நாளையிலிருந்து இந்தத் தெருவின் கழிவறைகளை சுத்தம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” கரகரத்த குரலில் பேசிவிட்டு எழுந்து சென்ற மான் வடிவ ரோபோவைக் கண்டு உறைந்து நின்றான் ஜேம்ஸ். மெல்ல அவன் தோள் தொட்டாள் மூதாட்டி ஜெனி.
(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் புனைக்கதை போட்டிக்காக எழுதப்பட்டது)
-நிலாரசிகன்.
Monday, June 30, 2008
[+/-] |
தனலட்சுமி டாக்கீஸ் - சிறுகதை |
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?
துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கட்டையன்தான்
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.
தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.
நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.
கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும். "எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்"
"ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு"
எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.
ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.
"என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல" டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.
"வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்" என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.
இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.
தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.
"எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்"
அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.
மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.
தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.
திருமண நாளும் வந்தது.
பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.
நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.
அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.
------------------------------
பின் கதைக்குறிப்பு:
ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் "தனலட்சுமி டாக்கீஸ்"க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
[நவீன விருட்சம் சிற்றிதழில் பிரசுரமாகிய கதை]
Sunday, June 22, 2008
[+/-] |
சேமியா ஐஸ் - சிறுகதை |
இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.
வெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. குனிந்து முள்ளை எடுக்க நேரமில்லை. நொண்டிக்கொண்டே அடுத்த தெருவிற்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்று பார்த்தேன்.
தூரத்தில் நின்றிருந்தார் முருகேசு அண்ணன். கைகாட்டிக்கொண்டே நொண்டி நொண்டி அவரிடம் சென்றேன்.
பிளாஸ்டிக் செருப்பைஅவரிடம் கொடுத்தேன். வாங்கி பார்த்துவிட்டு சைக்கிள் ஹேண்ட்பாரில் தொங்கிய கோணிப்பைக்குள் போட்டுக்கொண்டார்.
"ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணா" மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னேன்.
என் கையில் ஐஸ்ஸை தந்துவிட்டு ஐஸ்வண்டியை தள்ளிக்கொண்டு போய்விட்டார்.
கையில் வாங்கியவுடன், போன வருட கோவில் திருவிழாவில் சேமியா ஐஸ் வாங்க தேவையான ஒரு ரூபாயை சேர்க்க நான் பட்டபாடு நினைவுக்கு வந்தது.
இரண்டு மைல் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே இருக்கும் கந்தசாமி அண்ணாச்சி தோட்டத்தின் வேலியோரம் விழுந்துகிடக்கும் நெல்லிக்காய்களை பொறுக்கி, வரும் வழியில் வாய்க்காலில் கழுவியெடுத்து, கோவில் வாசலருகே பழைய பேப்பர் விரித்து நெல்லிக்காய்களை விற்று ஒரு ரூபாய் சேர்த்துதான் சேமியா ஐஸ்வாங்கினேன்.
ரூபாய் இல்லாவிட்டால் கண்ணாடி பாட்டில்,பிளாஸ்டிக் செருப்பு,உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் ஏதேனும் கொடுத்தால் ஐஸ் வாங்கலாம்.
உள்ளங்காலில் முள் உறுத்தியது. கையில் வழிகின்ற சேமியா ஐஸ்ஸை விறுவிறுவென்று தின்றுமுடித்து அருகிலிருந்த தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்துகொண்டு உடைந்த முள்ளை விரல் நகத்தால் எடுத்தபோது "பளார்" என்று என் முதுகில் ஒரு அறை விழுந்தது.
வலியுடன் திரும்பி பார்த்தால், கண்கள் கோபத்தில் மின்ன,பத்தரகாளி போல் நின்றிருந்தாள் சின்னம்மா.எனக்குத் தெரியும் சின்னம்மாவிடம் சிக்குவேனென்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.
ஆடுகளுக்கு புல் அறுக்க மட்டும்தான் சின்னம்மா வீட்டை விட்டு வாய்க்கால் ஓர தோட்டத்திற்கு வருவாள். மற்றபடி எப்பொழுதும் அடுப்பங்கரையிலும் ஆட்டுக்காடியிலும்தான் இருப்பாள்.
அவளுக்கு எதற்கு பிளாஸ்டிக் செருப்பு? சந்தைக்கு அப்பாவுடன் போகும்போதுகூட வெற்றுக்காலுடன் போவதுதான் சின்னம்மாவிற்கு பிடிக்கும். எதற்கும் உபயோகமில்லாத செருப்பால் இன்று ஒரு சேமியா ஐஸ்
என் வயிற்றுக்குள் இருக்கிறது. கூடவே முதுகில் விழுந்த அடியின் வலியும்.
சின்னம்மா கையில் சிக்கினால் வேப்ப மரத்தில் கட்டிவைத்து மிளகாய் பொடியால் அபிசேகம் பண்ணிவிடுவாள்.போன மாதம் கபடி விளையாடிவிட்டு விளக்குவைத்த பிறகு வீட்டிற்கு வந்ததற்கு இரவு இரண்டுமணிவரை வேப்பமரத்துடன் நின்றது நினைவுக்கு வந்தது. செத்தாலும் சின்னம்மாவிடம் சிக்கக்கூடாது என்று ஓட ஆரம்பித்தேன். கொஞ்சதூரம் விரட்டிக்கொண்டு வந்தாள், பின் முடியாமல் இடுப்பில் கைவைத்து நின்று ஏதேதோ கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு திரும்பி போய்விட்டாள்.
இருட்ட ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்திருந்தேன். பசி தாங்கமுடியாமல் வயிறு வலிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்காது. மிளகாய் தூள் மட்டும் இனிப்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பசியுடன் உறங்ககூடாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. சரி வருவது வரட்டும் வீட்டிற்கு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.
வீட்டை நெருங்க நெருங்க இதயம் துடிக்கும் சத்தம் காதுகளில் கேட்டது. வாசற்கதவை மெதுவாய் திறந்து உள்ளே சென்றேன். தோள்துண்டை சுருட்டி தலைக்கு வைத்து திண்ணையில் படுத்திருந்தார் அப்பா. நல்ல உறக்கத்தில் இருக்கிறார் என்பதை உரத்த குறட்டை சத்தம் சொல்லிற்று.
அடுப்பங்கரையின் ஓரத்தில் பாய்விரித்து படுத்திருந்தாள் சின்னம்மா. பக்கத்தில் தங்கச்சி பாப்பா வாயில் கைவைத்தபடியே உறங்கிக்கொண்டிருந்தது. சின்னம்மாவின் தலைக்குமாட்டிலிருந்த சோற்றுப்பானை என்னை கூப்பிடுவதுபோல் இருந்தது.
பூனைபோல் அடிமேல் அடியெடுத்து வைத்து சோற்றுப்பானையில் கைவைத்தேன்.
பானையை மூடியிருந்த அலுமினியத் தட்டு தவறி சின்னம்மாவின் கையில் விழுந்துவிட்டது. சட்டென்று எழுந்தவள் என்ன செய்தாள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இரண்டு மணிவரை வேப்பமரத்துடன் இருப்பவன் இன்று ஐந்துமணிவரை வேப்பமரத்தில் ஒண்டியிருந்தேன். பிள்ளையார் கோவில் பாட்டுச்சத்தத்தில் எழுந்துவிட்டேன். அசதியில் நின்றுகொண்டே உறங்குவது பழக்கமான ஒன்றுதான். ஆனாலும் கால்வலி விண் விண் என்றது.
ஐந்துமணிக்கு சின்னம்மாவின் கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டபின்னரே என் கட்டுகளை அவிழ்த்துவிட்டார் அப்பா. என்னவோ அறிவுரையெல்லாம் சொல்லியவாறே சோற்றை பிசைந்து ஊட்டினார். அரைப்பானை சோற்றை விழுங்கிவிட்டு திண்ணையில் படுத்துறங்கிவிட்டேன்.
திண்ணை சூடாக ஆரம்பித்த மதிய வேளையில் முழித்து சுவற்றில் பதிந்திருக்கும் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். சின்னம்மா அடித்த அடியால் கன்னம் இரண்டும் தக்காளிபோல் சிவந்து வீங்கியிருந்தது.
தூரத்தில் எங்கோ ஐஸ்வண்டிக்காரரின் மணிச்சத்தம் கேட்டதில் மனதில் சேமியா ஐஸின் பிம்பம் பெரியதாய் தோன்ற வீட்டிற்கு வெளியே கிடந்த சின்னம்மாவின் புதுச்செருப்பைக் கண்டு சிரிக்க ஆரம்பித்தேன்.
Friday, June 6, 2008
[+/-] |
சைக்கிள் - சிறுகதை |
போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். போன வருட கோடைவிடுமுறையில் நடந்த போட்டியில் என்னை ஜெயித்து முதல் பரிசான மூன்று "தேன்மிட்டாய்" பாக்கெட்டுகளை வென்றவன் தான் செல்வராஜ். போனமுறை நான் தோற்றதற்கு காரணம் ராஜன் அண்ணன் கடையில் எடுத்து ஓட்டிய வாடகை சைக்கிள்.ஆனால் இப்போது நான் பயணிப்பது என் சைக்கிளில்.
போனவருடத்தை நினைத்துக்கொண்டிருந்தால் அதோ எனக்கு முன் மூச்சிரைக்க சைக்கிளை மிதிக்கும் செல்வராஜை என்னால் வெல்லமுடியாது.சோறு தின்பவன் மாதிரியா சைக்கிள் ஓட்டுகிறான்? போன வருட தோல்வியால் பள்ளிமுழுவதும் என்னை கிண்டல்செய்ததை மறக்க முடியுமா? இன்னும் சிறிது தூரம்தான்....இதோ அவனை நெருங்குகிறேன்... விடமாட்டேன்....வெற்றி! வெற்றி!
மூன்று தேன்மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வீடுவந்தேன். நண்பர்கள் மத்தியில் என் புகழ் பரவியது.என் வெற்றிக்கு காரணம் என் புது சைக்கிள் என்று நினைத்தனர் நண்பர்கள்.சைக்கிள் வாங்கித்தந்த அப்பாவிற்கும், வெற்றி வாங்கித்தந்த சைக்கிளுக்கும் மனதால் நன்றி சொன்னேன்.
அப்பாதான் தினமும் என்னை பள்ளியில் கொண்டுவிடுவார்.பக்கத்து ஊரிலிருக்கும் பள்ளிக்கு என்னுடன் நடந்தே வருவார் அப்பா. பலநாட்களாக அழுது அடம்பிடித்தபின்னரே சைக்கிள் ஒன்றை வாங்கித்தந்தார். சைக்கிளுக்கு பூஜை போட்டு,சந்தனம்,குங்குமம் வைத்து பிள்ளையார்கோவில் வாசலில்தான் சைக்கிள்சாவியை என் கையில் தந்தார் அப்பா. "வேகமா ஓட்டக்கூடாதுப்பா...மெல்ல ஓட்டனும்" என்கிற அறிவுரையை அப்பா முடிக்கும் முன்பே பாதி தெருவை தாண்டியிருந்தது என் "டைகர்". என் சைக்கிளுக்கு நான் வைத்த செல்லபெயர் அதுதான்.
அதன்பின்னர் பக்கத்து தெரு மகேசனுடன் சைக்கிளில் ஒன்றாக பள்ளி செல்ல ஆரம்பித்தேன். தினம் தினம் யார் முதலில் பள்ளி சென்றடைவது என்கிற போட்டியில் மகேசனுக்கு எப்போதும் இரண்டாவது இடம்தான்.
புத்தகப்பையை கேரியரில் வைத்து விழாமலிருக்க வலதுகையால் பிடித்துக்கொண்டே வேகமாக பெடலை அழுத்தி மிதிக்க வேண்டும். எதிர்க்காற்றில் ஓட்டுவது மிகவும் கடினம், சிலநேரம் காற்றை எதிர்க்கமுடியாமல் கீழே விழுந்தாலும் சமாளித்து முதலிடம் பெற்றிருக்கிறேன்.
மேடு பள்ளமென்று பாராமல் வேகமாக ஓட்டியதில் வாங்கிய இரண்டாவது மாதமே கிறீச்சிட ஆரம்பித்தான் டைகர்.
தேங்காய் எண்ணை விட்டுப் பார்த்தேன். ராஜன் அண்ணன் கடைக்கு சென்று கிரீஸ் வைத்து பார்த்தேன் அப்பாவும் என்னென்னவோ செய்து பார்த்தார் டைகரின் கிறீச் சத்தம் மட்டும் ஓயவேயில்லை.
"வண்டிய வேகமா ஓட்டாதன்னு சொன்னா கேட்கறதே இல்ல..பாரு சைக்கிளு பாவம்போல கத்துது" என்று அடிக்கடி சொல்வார் அப்பா.
சைக்கிள் வாங்கிய ஒருவருடத்தில் ஐம்பது முறையாவது கீழே விழுந்திருப்பேன் ஆனால் ஒருமுறைகூட பலத்த அடி பட்டதில்லை. சைக்கிள் வந்த மகிழ்ச்சியில் நன்றாக படிக்கவும் ஆரம்பித்தேன். எப்பொழுதும் முதல்மூன்று இடத்தில் இருந்ததால் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக மாறினேன்.
"சைக்கிளு வீட்டுக்கு வந்த நேரம் எம் பேரனுக்கு நல்ல ராசி,நல்லா படிக்கிறான்ல புள்ள" என்று வெத்தலையை இடித்துக்கொண்டே சொல்வார் பாட்டி. டைகர் என் வீட்டில் ஒரு உறுப்பினராக மாறிப்போனான்.
ஒருமுறைகூட சைக்கிளை ஓட்டியதில்லை ஆனாலும் தினமும் சைக்கிளை துடைத்து சுத்தம் செய்வார் அப்பா.
பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிக்காக சென்னைக்கு வந்தபின்பு எங்கள் வீட்டு மாட்டுக்காடியின் ஓரத்தில் நிரந்தரமாக நின்றுகொண்டிருந்தான் டைகர்.தூசி அண்டாமலிருக்க ஒரு பழைய போர்வையால் மூடிவைத்திருந்தார் அப்பா. ஒவ்வொரு முறையும் கடிதத்தில் மறக்காமல் சைக்கிளை பற்றி ஒருவரியாவது எழுதுவார்.
விடுமுறைக்காக ஊர் செல்லும்போதெல்லாம் கிராமத்து தெருக்களில் டைகரில் வலம் வந்து மகிழ்வேன்.
கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்பொழுதுதான் அந்த சம்பவம் நேர்ந்தது. விடுதிக் காப்பாளர் என் அறைக்கதவை தட்டி அந்த துக்கச் செய்தியை சொன்னார்.
உடனே பஸ்பிடித்து ஊருக்கு வந்தேன். அம்மா மயக்க நிலையில் ஓரமாக அமர்ந்திருந்தார். அப்பாவின் சடலம் வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். என் அலறல் சத்தத்தில் ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள் அம்மா. "ராசா உங்கப்பா போயிட்டாருடா..நம்மள அநாதையாக்கிட்டு போயிட்டாருடா.." அம்மாவின் குரல் அழுகின்ற பெண்களின் பெரும்சத்தத்தின் நடுவிலும் நெஞ்சில் அறைந்தது. தொண்டை வறண்டு மயங்கி விழுந்தேன்.
சவக்குழிக்கு சற்றுத்தொலைவில் என்னை அமர்த்தி மொட்டை அடித்தார்கள். தோளில் பானைநீர் சுமந்து மூன்றுமுறை சுற்றி வந்தபின் புதைகுழியில் மூன்று முறை மண் அள்ளிப் போட்டேன். கண்ணீருடன் வீடு வந்துசேர்ந்தேன்.
நான்கைந்து நாட்களில் சுற்றம்தவிர்த்து அம்மா,நான்,பாட்டி மட்டும் மிஞ்சியிருந்தோம்.
"அசதியா இருக்கு சந்தைக்கு சைக்கிள்ள போறேன்னு போனவருதான் மேலத்தெரு முனையில திரும்பும்போது தடுமாறி கீழே விழுந்துட்டாரு. மண்டையில அடிபட்டு அதேயிடத்துல உசுரு போயிருச்சு ராசா...மொத மொதலா சைக்கிள்ள போறாரேன்னு பெருமையா நினைச்சேன் இப்படி ஆயிடுச்சே" அப்பா இறந்த நாளிலிருந்து திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.
ராஜன் அண்ணன் கடைக்கு சைக்கிளை சென்று விற்றுவிட தீர்மானித்து, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மாட்டுக்காடியிலிருந்த சைக்கிளை வெளியிலெடுத்து வாசல் வந்து பெடலை மிதிக்க தொடங்கினேன்.
"சனியன் புடிச்ச சைக்கிளு அநியாயமா உங்கப்பன் உசிர வாங்கிருச்சே" பாட்டியின் புலம்பல் காதில் சன்னமாய் விழுந்தது.
எப்போதும் கிறீச்சிடும் சைக்கிள் இன்று சத்தமின்றி பயணித்துக்கொண்டிருந்தது.