Friday, November 30, 2007

வீட்டுப்பாடம்



"காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு
பின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை"

"எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுற இல்ல, அப்புறம் எப்படி பிடிக்கும்?"

"எங்க அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிடக்கூடாதே உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்"

"அதென்னடி மாசாமாசம் அம்மாவீட்டுக்கு போறது? அதுவும் சென்னைல இருந்து திருச்சிக்கு! போறதுக்கும் வர்றதுக்கும் செலவு கணக்குப்பாருடி...அப்புறம் போற எண்ணமே வராது!"


"அப்பப்பா! எப்போ பார்த்தாலும் கணக்கு பார்த்துகிட்டே இருக்கீங்களே! போன பிறவில கணக்கு வாத்தியாரா இருந்தீங்களோ! சே! வெறுப்பா இருக்கு"

"இப்படி கணக்கு பார்க்கலன்னா அப்புறம் எப்படி நான் குடும்பம் நடத்தறது. மளிகை கடைக்காரன்ல இருந்து பால்காரன்வரைக்கும் யார் பதில் சொல்றது? நம்மகிட்ட பணம்காய்கிற மரமெல்லாம் இல்ல"

"நீங்க ரெண்டுபேரும் இப்படி மோதிகிட்டு இருக்கறத உங்க பொண்ணு பார்த்துட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சுட்டா" சொல்லிப்போனார் அப்பா.

இருவருமாய் சென்று மகள்முன்பு அமர்ந்தோம்.

செல்லமகள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தாள்.

"செல்லம் எங்கள பார்த்தவுடனே ஓடிவந்து ஏதோ எழுதினியாமே,தாத்தா சொன்னார்...என்னமா எழுதின?"

"எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல அடிக்கடி மோதிக்கொள்ளும் உயிரினம் பற்றி எழுதுகன்னு வீட்டுப்பாடம் கொடுத்தாங்கப்பா அதுக்கு பதில் எழுதினேன்பா" என்றாள் பிஞ்சுமகள்.

"என்னடா எழுதினே" ஆர்வமுடன் கேட்டோம் நானும் என் மனைவியும்.

"அப்பாவும் - அம்மாவும்" ன்னு எழுதினேன்மா என்றாள் முத்துப்பல்காட்டி.

வீட்டின்பாடத்தை வீட்டுப்பாடம் மூலமாய் உணர்ந்து வெட்கித் தவறுணர்ந்து நின்றோம்.

1 Comment:

மங்களூர் சிவா said...

ஜஸ்ட் அட்டெண்டன்ஸ்!!

ஓவர் எதிர்பார்ப்போட படிச்சிட்டேன்!!