"நெருப்பு இருக்கா பெருசு?" கையில் அரிவாளுடன் நெருப்பு கேட்டால் யாருக்குத்தான் பயம் வராது? அதுவும் கண்கள் இரண்டும் சிவந்து உக்கிரத்துடன் அரை பனைமர உயரத்தில் ஒருவன் கேட்டால் குலைநடுங்காமல் என்ன செய்யும்? தீப்பெட்டியை கொடுக்கும் போது கை நடுங்கியது பெரியவருக்கு. பீடிக்கு நெருப்பு வைத்துவிட்டு தீப்பெட்டியை அவரிடம் கொடுக்கும்போது "இன்னைக்கு இந்த பீடி எரியுற மாதிரி நாளைக்கு எம் பொஞ்சாதி எரிவா" என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான் கந்தசாமி. ஒன்றும் புரியாமல் நகர்ந்து சென்றார் பெரியவர்.
மனதிற்குள் பல கேள்விகள் இருந்தாலும் தன்னுடன் வேலை செய்யும் இருளப்பன் சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் கந்தசாமியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
"என்ன கந்தா ஒம் பொஞ்சாதி அடிக்கடி நம்ம தோட்டத்து மோட்டார் ரூமுக்கு போயிட்டு வர்றா? காலம் கெட்டு கெடக்குது அவ்வளவுதான் சொல்லுவேன்"
இருளப்பன் வைத்த தீ கந்தசாமியின் கண்களில் தெரிந்தது.
நடையின் வேகத்தை கூட்டினான். அரிவாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்திருந்தது கந்தசாமியின் வலதுகை. இவனுடைய வேகத்தைக் கண்டு
ஊர்க்கோடியில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வெட்டியான் "ஊருக்குள்ள இன்னைக்கி ஒரு பொணம் விழுதுடோய்" என்று சந்தோஷமாக சங்கில் படிந்திருந்த தூசியை பழைய துணியால் துடைக்க ஆரம்பித்தான்.
கந்தசாமியின் அக்காள் மகள்தான் காமாட்சி. கட்டினால் மாமாவைத்தான் கட்டுவேனென்று ஒத்தைக்காலில் நின்று கந்தசாமியை திருமணம் செய்துகொண்டவள். அவளா இப்படி? இருளப்பன் முதலில் சொன்னபோது நம்பாமல் அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு போய்விட்டான் கந்தசாமி.
ஆனாலும் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. எதற்காக தினமும் இரு முறை தோட்டத்திற்கு காமாட்சி போகவேண்டும். அதுவும் இந்த கருக்கல் நேரத்தில் அவளுக்கு அங்கே என்ன வேலை? தனக்குள் இருந்த சந்தேக மிருகம் மெல்ல வளர்ந்து பெரு உருவமாய் காட்சியளிக்க ஆரம்பித்தவுடன் குடிசைக்கூரையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
போன மாதம் நிறைமாத கர்ப்பிணியாக காமாட்சி இருந்தபோது இருந்த சந்தோசமும், இறந்தே குழந்தை பிறந்ததை தயக்கத்தோடும் கண்ணீரோடும் காமாட்சியிடம் சொன்னபோது கொஞ்ச நேரம் ஓவென்று அழுதவள் பின்னர் இவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு "நீங்கதான் மாமா எனக்கு கொழந்த எல்லாமே" என்று அவள் உருகியபோது அடைந்த சந்தோஷமும் இப்போது அவளை வெட்டி எறிய போகின்ற நேரத்தில் கந்தசாமிக்கு நினைவுக்கு வந்தன.
தான் வேலைசெய்யும் தோட்டத்தின் முதலாளி நல்லவர்தான் ஆனால் அவரது மகன் தான் சரியில்லை என்பது கந்தசாமியின் நெடுநாளைய எண்ணம். வெளிநாட்டில் படித்தவன் என்பதால் எப்போதும் "டிப்-டாப்" ஆசாமியாக உலா வந்த முதலாளியின் மகனை ஊரிலுள்ள இளவட்ட பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்பிளந்தார்கள். போன வாரம்கூட முதலாளியின் வீட்டுவேலைக்கு காமாட்சி போய்வரும்போது கையில் பெரிய பெளடர் டப்பா ஒன்றை கொண்டுவந்தாள். "பாரு மாமா எவ்ளோ வாசமா இருக்கு, நம்ம சின்ன மொதலாளி தந்தாக" வெள்ளந்தியாக அவள் சொன்னதை அன்று இவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
இத்தனைநாட்கள் தன்னை முட்டாளாக்கிவிட்டாளே அந்த பாதகி என்று கருவிக்கொண்டே தோட்டத்தை வந்தடைந்தான் கந்தசாமி. தூரத்தில் மோட்டார் ரூம் தெரிந்தது. அதற்குள்தானே இருக்கிறார்கள் இருவரும்? பெளடர் கொடுத்து மயக்கிய முதலாளியின் மகனின் தலையை இரண்டாக பிளக்காமல் இந்த அரிவாள் கீழே இறங்காது..வரப்பில் விறுவிறுவென்று நடந்து மோட்டார் ரூம் நோக்கி முன்னேறினான்.
மோட்டார் ரூமின் கதவு சாத்தப்பட்டிருந்தது. சேற்றுக் காலால் ஓங்கி ஒரு மிதி மிதித்ததில் அந்த தகரக் கதவு படாரென்று திறந்துகொண்டது. சுவர்பக்கம் திரும்பி தன் ஆடையை சரிசெய்து கொண்டிருந்த காமாட்சி கதவு திறந்த சத்தத்தில் வெடுக்கென்று திரும்பி பார்த்தாள். கையில் அரிவாளும் கண்களில் வெறியுடனும் நின்றிருந்த கந்தசாமியை பார்த்தவுடன் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டாள் காமாட்சி. பின் சுதாரித்து பேச ஆரம்பித்தாள்.
"என்னை மன்னிச்சுடு மாமா. உனக்கு தெரியாம இங்க வந்தது எந்தப்புதான். நம்ம குழந்த செத்தே பொறந்ததால மாரு கட்டி வலி எடுக்கும்போதெல்லாம்
வீட்டு புறவாசல் பக்கத்துல நின்னு தாய்ப்பாலை பீச்சி வெளியேத்துவேன். அப்போதான் ஒரு தெருநாய் நம்ம வீட்டு வேலிக்கு பக்கத்துல ஆறு குட்டி போட்டிருக்கறது தெரிஞ்சது.
போன வாரம் கார்பரேசன் கார படுபாவிங்க அந்த தெருநாயயும் நாலு குட்டிகளையும் பிடிச்சிட்டு போயிட்டாங்க. பஞ்சாரத்துக்குள்ள ரெண்டு குட்டிங்க கிடந்ததால இந்த ரெண்டும் தப்பிச்சிடுச்சி. உனக்குதான் நாய்,பூனையெல்லாம் பிடிக்காதே. அதனாலதான் குட்டிகளை கொண்டு வந்து இந்த மோட்டார் ரூமுல வச்சிருக்கேன். வீணா போற தாய்ப்பாலை இந்த குட்டிங்க ரெண்டும் குடிக்கிறத பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? அங்க பாரு மாமா" கடகடவென்று பேசிவிட்டு அந்த சிறிய அறையின் மூலையை நோக்கி கைகாட்டினாள் காமாட்சி.
சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில் இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.
புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.