Monday, May 19, 2008

கண்ணே தேன்மொழி!



கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது.

அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத்.

"என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே பேசாம கடலையே பாக்குற?" பொறுமையிழந்து கேட்டான் சேகர்.

பெருமூச்சு ஒன்றை பலமாய் வெளியிட்டு பேசத்தொடங்கினான் வினோத்.

"சேகர், உனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் காதலுக்கும் ஒத்தே வராதுன்னு, எவ்வளவோ சொல்லியும் தேன்மொழி புரிஞ்சுக்க மாட்டேங்கறாடா, என்னைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கறா, நான் என்ன மச்சி பண்றது?"

"நெனச்சேன்... என்னடா கொஞ்ச நாளா காதல பத்தி பேச்சக்காணோம்னு, ஆரம்பிச்சாச்சா!" கலகலவென்று சிரித்தான் சேகர்.

"என்ன நக்கலா? நான் இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணதில்லன்னு உனக்கு தெரியாதா சேகர்?" கோபமாக கேட்டான் வினோத்.

"மச்சி, நீ யாரையும் லவ் பண்ணமாட்ட ஏன்னா ஓவியம் பெயிண்டிங்ன்னு சுத்தறவன் நீ. பட், உன்னை எத்தனை பேருக்கு பிடிக்கும்ங்கறது ஊருக்கே தெரியும்"

"அதுக்கு நான் பொறுப்பில்லையே! எனக்கு ஒரு பெரிய ஓவியனா வரணும்ங்கற எண்ணம் மட்டும்தான் இருக்குடா. நாடி,நரம்பு,ரத்தம் எல்லாம் நான் உலகம் போற்றும் ஓவியனா வரணும்ங்கற வெறி உறைஞ்சு இருக்குடா..இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் சுத்த வேஸ்ட்!" சலிப்புடன் சொன்னான் வினோத்.

"ஒத்துக்கறேன் டா... உன் லட்சியம் எனக்கு புரியுது. அதுக்காக நீ வாழ்நாள் பூரா இப்படியே பிரம்மச்சாரியா இருக்கபோறியா? படம் வரையரவங்க எல்லாம் கல்யாணம் பண்ணலையா? நெஞ்சத் தொட்டு சொல்லு டா ஃபூல்!"

"எனக்கு 22 வயசுதான் ஆகுது, இப்ப நான் இவள காதலிக்கறேன் சொல்லிட்டேன் வையேன் அவ்ளோதான்...பீச்,பார்க்,ஸாப்பிங்க்ன்னு ஊர் சுத்தறதே வேலையா போய்டும்.... அவளுக்குன்னு கிப்ட் வாங்கறது...கார்ட்ஸ் கொடுக்கறது...கவிதை கிறுக்கறது...டோட்டல் வேஸ்ட் ஆப் டைம் டா.."

"இதத்தான் ரெண்டு வருசமா கேட்டுக்கிட்டிருக்கேனே....சரி யார் இந்த தேன்மொழி? இவளுக்கும் எல்லோர்கிட்டயும் சொல்ற பதிலை சொல்லி பை சொல்ல வேண்டியதுதானே!?"

"தேன்மொழி என்னோட கம்ப்யூட்டர் கிளாஸ் மேட். நான் ஓவியன்னு தெரிஞ்சு ரசிகைன்னு அறிமுகமானா அப்புறம் டெய்லி எஸ்.எம்.எஸ் ஈமெயில்னு வளந்துச்சு எங்க பிரண்ட்ஷிப்... இப்போ என்னை லவ் பண்றாளாம்" கண்களின் கோபம் மின்ன பதில் சொன்னான் வினோத்.

"ஆள் எப்படிடா இருப்பா?" குறும்புடன் கேட்டான் சேகர்.

"அதெல்லாம் எதுக்கு கேட்குற? நானே கடுப்புல இருக்கேன்"

"சரி விடு மச்சி, நாளைக்கு நேரா அவகிட்ட போ.நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு கதைய விடு. வீட்டுக்கு நடைய கட்டு.சரியா?"

சரிடா, வா மொளகா பஜ்ஜி சாப்பிடலாம். இருவரும் எழுந்து மிளகாய் பஜ்ஜி கடையை நோக்கி நடந்தார்கள்.

******************************************************

"ஹலோ வினோத், எங்கடா இருக்கே இன்னைக்கு கிளாஸ் கிடையாதாம் பவ்யா போன் பண்ணினா, நாம ரெண்டுபேரும் சத்யம் போலாமா?" அலைபேசியில் ஒலித்தது தேன்மொழியின் குரல்.

இதுதான் சரியான சந்தர்ப்பம், இன்னைக்கு நாம பார்க்க போற படம்தான் ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்குற கடைசி படம்...மனசுக்குள் எண்ணியவாறே

"சரி தேன், சரியா 5 மணிக்கு மீட்பண்ணலாம், பை" சொல்லிவிட்டு கட் செய்தான் வினோத்.

இவகிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது,நான் வேற ஒரு பொண்ணை காதலிக்கறேன்னு பெரிய லெட்டர் எழுதி கொடுத்துட்டு வந்துடவேண்டியதுதான் நினைத்துக்கொண்டே கடிதம் எழுதத் தொடங்கினான் வினோத்.

******************************************************

மாலை 5.15மணி.

தேன்மொழியின் அலைபேசி அழகாய் சிணுங்கியது.

"ஹலோ எங்கடா இருக்கே" கோபத்துடன் கேட்டாள் தேன்மொழி.

"சாரி தேன் கொஞ்சம் வேலை...இதோ வந்துக்கிட்டே இருக்கேன்"

"சீக்கிரம் வா எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்ணறது?"

"ஒகேஒகே கூல் டவுன். வில் பி தேர் இன் 10 மினிட்ஸ்"

"சே சொன்னா சொன்ன நேரத்துக்கு வரவேண்டியதுதானே....அப்படி என்ன வேலை இவனுக்கு? வரட்டும் இன்னைக்கு வச்சுக்கிறேன்" பொறுமை இழந்து மனசுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

மணி 6ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.

தேன்மொழியின் அலைபேசி மீண்டும் அழைத்தது

"ஹலோ"

"ஹலோ தேன்மொழி இருக்காங்களா?" கனத்த குரல் மறுமுனையில் கேட்டது.

"நான்...நான் தான் தேன்மொழி பேசுறேன்...நீங்க..?" தடுமாற்றத்துடன் கேட்டாள் தேன்மொழி.

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ல இருந்து பேசுறோம். அரைமணி நேரத்துக்கு முன்னாடி ஜெமினி ப்ளைஓவர் பக்கத்துல ஒரு ஆக்ஸிடெண்ட். பைக்ல வந்த ஒரு பையன் மேல சிட்டி பஸ் இடிச்சுடிச்சி. அந்த பையனோட மொபைல்ல லாஸ்டு டயல்டு நம்பர்ல உங்க நம்பர் இருத்துச்சு அதான் கூப்பிட்டோம்"

"ஓ மை காட்... வினோத் வினோத்துக்கு என்ன ஆச்சு" அலறிவிட்டாள் தேன்மொழி.

"இப்போ எதுவும் சொல்ல முடியாது உள்ளே ஐ.சி.யூவில் அட்மிட் பண்ணி இருக்கோம். அவரோட பேரண்ட்ஸூக்கு சொல்லிடுங்க"

உடனே ஒரு ஆட்டோ பிடித்து அப்பல்லோ வந்து சேர்ந்தாள் தேன்மொழி.

******************************************************

அந்த கோர விபத்து நடந்து மூன்று மாதங்களாகிவிட்டது.

இருபது நாட்கள் கோமாவில் இருந்து மீண்டான் வினோத்.

வினோத் உயிர் பிழைத்ததே அபூர்வம் என்றார்கள் எல்லோரும்.

இடது கையின் எலும்பு முறிந்து போனதால் உள்ளே "ப்ளேட்" வைக்க வேண்டியதாயிற்று.

மெதுவாய் இப்பொழுதுதான் சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தான் வினோத்.

"வினோத் சேகர் வந்திருக்காண்டா...ஹால்ல இருக்கான் வாப்பா" அம்மாவின் சத்தம் கேட்டு மெதுவாய் ஹாலுக்கு வந்தான் வினோத்.

"ஹாய் வினோத் இப்போ எப்படி இருக்கடா"

"ம்ம்...பரவாயில்ல சேகர்...ஆமா இவ்ளோ நாளா எங்க போயிருந்த நீ?" கேள்விக்குறியுடன் கேட்டான் வினோத்.

"ஸாரி மச்சி உன்கிட்ட சொல்லலாம்னுதான் இருந்தேன் பட் அதுக்குள்ள் இப்படி ஒரு விபத்துல நீ சிக்கிட்ட, எனக்கு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்குடா மூணு மாசமாச்சு ஜாயின் பண்ணி. நேத்துதான் இந்தியா வந்தேன்." என்றபடியே தொடர்ந்தான் சேகர்

"வினோத் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் ஒரு சின்ன "வாக்" போலாமாடா?"

"ம்ம்...சரி வா"

******************************************************

இருவரும் அடுத்த தெரு வரும் வரையில் எதுவும் பேசவில்லை.

"என்னமோ முக்கியமான விசயம்னு சொன்னியே மச்சி" மெதுவாய் ஆரம்பித்தான் வினோத்.

"வினோத், எப்படி சொல்லறதுன்னே தெரியலடா.....பட் சொல்லலைனா என் தலையே வெடிச்சுடும்"

"அப்படி என்ன விசயம்டா?" ஆர்வமானான் வினோத்.

"உனக்கு தேன்மொழின்னு ஒரு ப்ரண்ட் இருந்தாளே அவ இப்போ எங்க இருக்கான்னு தெரியுமா உனக்கு?"

"அவுங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சாம். இப்போ திருச்சில இருக்கறதா அம்மா சொன்னாங்க, ஏன் அவள பத்தி இப்போ கேக்குற?"

"மனச தைரியப்படுத்திக்க வினோத்...உனக்கு ஆக்ஸிடன்ட் ஆகி ஒரு மாசம் கழிச்சு தேன்மொழி தற்கொலை பண்ணிக்கிட்டா" மெல்லிய குரலில் சொன்னான் சேகர்.

"வாட்! என்ன டா சொல்ற? ஏன் என்னாச்சு? ஏன் அம்மா என்கிட்ட பொய் சொன்னாங்க? என்ன நடந்துச்சு" பதறித்துடித்தான் வினோத்.

"நேத்துதான் எனக்கு விஷயம் தெரியும்.நீ படிச்ச கம்ப்யூட்டர் கிளாஸ்ல பவ்யான்னு ஒரு பொண்ணும் படிச்சா இல்ல? அவ எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டு பொண்ணுதான். நான் உன் பிரண்டுன்னு தெரிஞ்சுகிட்டு நேத்து எங்க வீட்டுக்கு வந்தா. தேன்மொழி தற்கொலை பண்ணிகிட்டாங்கற விசயத்தையும் சொன்னா, அதுமட்டுமில்ல டா" என்றவாறு பேச்சை நிறுத்தினான் சேகர்.

"என்னடா முழுசா சொல்லித் தொலை"

"பவ்யாவோட ஒரு புக் தேன்மொழிகிட்ட இருந்திருக்கு. தேன்மொழி இறந்த பிறகு அவ வீட்டுக்கு போய் பவ்யா அந்த புக்க எடுக்கறப்போ உன் பெயர் எழுதி ஒரு கவர் இருந்திருக்கு. அனேகமா அது உனக்கு தேன்மொழி எழுதுன லெட்டராதான் இருக்கும். பவ்யா அதை உன்கிட்ட சேர்க்க சொன்னா. இந்தா"
வினோத்தின் கையில் ஒரு கவரை கொடுத்தான் சேகர்.

******************************************************

வீட்டிற்கு வந்தவுடன் அவசர அவசரமாக தன் அறைக்குள் சென்று சேகர் கொடுத்த கவரை பிரித்தான் வினோத். உள்ளே ஒரு கடிதம் இருந்தது.

என்னுயிர் வினோத்,

இந்தக் கடிதம் உன்னைச் சேருமா சேராதா என்று எனக்குத் தெரியாது. இன்றுடன் விபத்து நடந்து 28 நாட்கள் ஆகிறது. முதல் ஒரு வாரமாக கோமாவில் ஆழ்ந்த உறகத்தில் நீ இருந்தாய். தூக்கமின்றி நான் தவித்தேன். உன்மேல் உயிரையே வச்சிருந்தேன். ஆனா ஏற்கனவே ஒரு பொண்ணை நீ லவ் பண்றங்கற விசயம் உன் சட்டைப்பையில் இருந்த லெட்டரை பார்த்தபிறகுதான் தெரிஞ்சுது. நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நெனச்சு பார்க்கவே முடியலை வினோத்.

இன்னைக்கு காலையிலதான் எனக்கு அந்த விசயத்த சொன்னார் டாக்டர்.
உன்னோட உயிர காப்பாத்த முடிஞ்ச அவங்களால உன்னோட
கண்கள் ரெண்டையும் காப்பாத்த முடியாதாம்.

சிற்பிக்கு எப்படி கைகள் முக்கியமோ அத மாதிரிதான் ஓவியனுக்கு கண்களும்.

உன்னோட வாழ முடியாட்டியும் நீ வரையற ஓவியத்த காலமெல்லாம் பார்த்துகிட்டே இருக்கற கண்ணா நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன். புரியலையா வினோத்?

யெஸ்,இப்போ நீ இந்தக் லெட்டர படிக்கறது என் கண்களாலதான்.

முத்தங்களுடன்,
தேன்மொழி.

உறைந்து நின்றான் வினோத். கடிதத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்தது
தேன்மொழியின் கண்ணீர்.



4 Comments:

Anonymous said...

arumayana kadhai

Nalini Varagunan said...

This is really a very good short story.My heart felt very heavy at the end....good piece

நிலாரசிகன் said...

மிக்க நன்றி அனானி,நளினி.

Jothika said...

Palarin karapanai arumai;
Silarin kavidai sirappu;
Aanal sirappaga piranthulla ungal sirukathai Arumaiyinum arumai....