சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும். சைக்கிளை முடிந்த அளவிற்கு வேகமா மிதிக்க ஆரம்பித்தேன். சாலையின் இரு பக்கமும் கனத்த இருள் கவிந்திருந்தது. பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், மழை எதிர்நோக்கும் தவளைகளின் சத்தமும் பெரிதாகிக்கொண்டே போனது. சைக்கிள் பஞ்சராகிவிட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. இவை எதைப்பற்றிய கவலையுமின்றி என் தோளை இறுகப்பற்றிக்கொண்டு ஏதோவொரு பாடலை பாடியபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.
அகல்யா என் உயிரில் கலந்துவிட்ட தேவதை. என்னுடன் கல்லூரியில் படித்தவள்.
பாறைமனதிற்குள் வேராக நுழைந்து இன்று விருட்சமாக மாறியவள். இன்று என் காதலி. நாளைய மனைவி. வழக்கமான சாதி பிரச்சினை என்றாலும் அவளது அப்பா ஊரின் மிகப்பெரிய மில்லுக்கு சொந்தக்காரர்.கொழுத்த பணம் படைத்தவர். அவரது கைகளில் சிக்கிவிடாமல் வெளியூர் சென்று வாழ முடிவெடுத்து இப்போது ஊரைவிட்டு சைக்கிளில் தப்பிச் செல்கிறோம். இன்னும் எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் டவுனுக்கு சென்றுவிட்டால் தப்பிவிடலாம்.
அகல்யாவின் அப்பாவிற்கு இந்நேரம் தெரிந்து ஆட்களுடன் கிளம்பி இருப்பார்.
இவை எதைப்பற்றிய கவலையுமின்றி பாடிக்கொண்டிருந்தாள் அகல்யா.
“அகல் கொஞ்சம் பாடாம வாயேன் ப்ளீஸ்மா”
“அதெல்லாம் முடியாது பாடுறது என் இஷ்டம்…நீ சைக்கிளை மிதி” சொல்லிவிட்டு சத்தமாக பாட ஆரம்பித்தாள். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய் அறிவுகெட்டவளே ஒங்கப்பன் இந்நேரம் அரிவாளுடன் கிளம்பி இருப்பான். நானே மிதிக்க முடியாம சைக்கிள மிதிக்கிறேன். இதுல பாட்டு ஒண்ணுதான் முக்கியமா?”
“சரி நான் பாடலை. ஆமா நாம எங்கே போறோம்?”
இதற்குமேல் இவளிடம் பேசி பயனில்லை. எப்போது விளையாடுவது என்று தெரியாது! எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும். நினைத்துக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தேன். என் தோளில் சாய்ந்தவள் மெல்ல என் இடுப்பைக் கிள்ளினாள். விளையாட்டுக்காரி! மறுநிமிடமே என் கோபம் மறைந்தது.
“கிள்ளாத செல்லம் வலிக்குது”
“எப்போ என்னை இறக்கி விடுவ? எனக்கு உட்கார முடியல ரொம்ப வலிக்குது”
“கொஞ்சம் பொறுத்துக்கமா இன்னும் நாலு கிலோமீட்டர்தான்”
மழை நின்றிருந்தது. காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அகல்யாவிற்கும் எனக்கும் நாளை திருமணம் என்பதை நினைத்து மனசெல்லாம் பூக்களாக மலர்ந்திருந்த நேரத்தில் டவுனை அடைந்தேன்.
டவுனிலிருக்கும் என் நண்பனின் தம்பி ஒருவனுடைய வீட்டிற்கு சென்று
கதவை தட்டியபோது நடு இரவு. கதவை திறந்து எங்களை அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் உள்ள குடிசைக்கு அழைத்துச் சென்றான் நண்பனின் தம்பி.
“அண்ணே நீங்களும் அண்ணியும் இன்னைக்கு ஒருநாள் இங்க தங்கிக்கிங்க,நாளைக்கு மத்த விசயத்த பேசலாம்” சொல்லிவிட்டு கொட்டாவிவிட்டபடி போய்விட்டான்.
குடிசைக்குள் கிடந்த கட்டிலில் களைப்புடன் அமர்ந்தேன்.
“அகல்யா உங்க அப்பாவை ஜெயிச்சுட்டேன். இனி என் கண்மணியை என்னைவிட்டு பிரிக்க யாராலும் முடியாது நாளைக்கு நம்ம கல்யாணம்”
அகல்யாவிடமிருந்து எந்த பதிலுமில்லை.
“இராத்திரி பதினோரு மணிக்கு வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலையேன்னு பாக்குறியா தாயி…உங்க அப்பன என்ன கேணையன்னு நினைசுட்டானா அந்த பொடிப்பய? நேத்துதான் மெட்ராஸுல இருந்து உன்னைய மாதிரியே ஒரு ரோபோவ ஆர்டர் செஞ்சு வாங்கிட்டுவந்தேன். நீன்னு நெனச்சு அதை கூட்டிக்கிட்டு போயிட்டான். இந்நேரம் பாட்டரி தீர்ந்து அதுவும் செத்திருக்கும்” சொல்லிவிட்டு சிரித்தார் அகல்யாவின் அப்பா. கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தாள் அகல்யா.
[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் புனைக்கதை போட்டிக்காக எழுதப்பட்டது]
-நிலாரசிகன்.