இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?
துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கட்டையன்தான்
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.
தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.
நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.
கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும். "எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்"
"ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு"
எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.
ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.
"என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல" டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.
"வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்" என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.
இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.
தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.
"எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்"
அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.
மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.
தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.
திருமண நாளும் வந்தது.
பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.
நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.
அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.
------------------------------
பின் கதைக்குறிப்பு:
ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் "தனலட்சுமி டாக்கீஸ்"க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
[நவீன விருட்சம் சிற்றிதழில் பிரசுரமாகிய கதை]