"அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்" நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன்.
"சொல் நரசிம்மா"
"நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில்
ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று பார்த்த போது ஒரு விசித்திர காட்சி தென்பட்டது அரசே!"
"அதென்ன விசித்திர காட்சி நரசிம்மா?" ஆர்வமுடன் கேட்டார் அரசர்.
"இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரும் உருளை விண்ணிலிருந்து பெரும் சத்தத்துடன் விழுந்திருக்கிறது அரசே, நம் வீரர்கள் அருகில் சென்று பார்த்த பொழுது ஒரு சவம் அந்த உருளையின் உள்ளே
கிடந்திருக்கிறது"
"நான் உடனே அந்த உருளையை காண வேண்டும்,நாம் இப்பொழுதே புறப்படுகிறோம்,ரதத்தினை தயார் செய்யுங்கள்"
"உத்தரவு அரசே"
அரண்மனையில் இருந்து புறப்பட்ட ரதம் வடக்குப் பகுதிக்கு சூரிய அஸ்தமணத்திற்கு பின் வந்து சேர்ந்தது.
"அரசே நீங்கள் அருகில் செல்ல வேண்டாம்,என் உள்ளுணர்வு இதில் ஏதோ விஷமம் இருப்பதாக சொல்கிறது" கவலையுடன் சொன்னான் நரசிம்மன்.
"எதிரிகள் என் பெயர்கேட்டாலே காத தூரம் ஓடுவார்கள் என்பதை மறந்துவிட்டாயா நரசிம்மா? இந்த உருளை என்னை என்ன செய்துவிடப்போகிறது, நீயும் என்னோடு வா, உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்துவிடுவோம்"
அரசரும்,நரசிம்மனும் மிகுந்த ஜாக்கிரதையோடு உள்சென்றனர்..
"இதென்ன அரசே நிறைய எண்களும் சில கைப்பிடிகளும் இருக்கின்றன?" வியப்புடன் கேட்டான் நரசிம்மன்.
"விந்தையாக இருக்கிறது நரசிம்மா! இங்கே பார் சிகப்பு வண்ணத்தில் நெருப்பென ஜொலிக்கிறது ஒரு விளக்கு!"
"ஆம் அரசே என் உடைவாளால் அதைக் கீறிப்பார்த்துவிடுகிறேன்" என்றவாறே தன் உடைவாளால் ch2008 என்கிற குறியீடு பொறிக்கப்பட்ட
சிகப்பு விளக்கை தொட்டான் நரசிம்மன்..
பெருத்த சத்தத்துடன் விண்ணில் சிறுபுள்ளியென மறைந்தது
அந்த விசித்திர உருளை.
"தோ பாரு மச்சி டிராமாலேர்ந்து கோமாளி பசங்க நேரா தெருவுக்கு வந்துட்டானுங்க"
தங்களை பரிகாசம் செய்கின்ற சென்னைத் தமிழ்மக்களை கண்டு
திகைத்து நின்றனர் அரசரும், நரசிம்மனும்.
2008ம் ஆண்டு புது வருட கொண்டாட்டத்தில் களைகட்டி இருந்தது
சென்னை.
Thursday, December 13, 2007
[+/-] |
விசித்திர உருளைch2008 |
Wednesday, December 12, 2007
[+/-] |
காதல் 2007 |
கடற்கரை.
கடலைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது?
பேச ஆரம்பித்தான் கார்த்திக்.
"ஏதோ பேசனும்னு சொன்னியே மலர்...."
"என்னை மன்னிச்சுடு,இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை கார்த்திக்" உடைந்தகுரலில் வந்து விழுந்தது மலரின் வார்த்தைகள்.
அவன் எதிர்பார்த்ததுதான்.
மலருக்கு நிச்சயதார்த்தம் நேற்றுதான்
நடந்தது.
"தெரியும் மலர்"
"உனக்கு கவலையா இல்லையா கார்த்திக்,எனக்கு அழுகையா வருதுடா"
"இதுல அழுறதுக்கு என்ன இருக்கு? உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கற
மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்,படிச்சவர் அப்புறம் என்ன மலர்?"
"தெரியும் கார்த்திக்,ஆனா உன்னைப் பிரிஞ்சு எப்படி வாழப்போறேன்னுதான்
தெரியலடா"
"முதல்ல பிரண்டா இருந்தோம்,அப்புறம் காதலிச்சோம்,இப்போ பிரியறோம்,இதுல கவலைபட்டு என்ன ஆகப்போகுது மலர்?"
"எப்படிடா இவ்ளோ ஈஸியா உன்னால பேச முடியுது?"
அவள் கேட்டதை கவனிக்காமல் நாளை நடக்கவிருக்கும் தன் நிச்சயதார்த்தத்தை நினைத்தபடியே பேச்சைத்தொடர்ந்தான் கார்த்திக்.
Tuesday, December 4, 2007
[+/-] |
ஓடிப்போனவள் - சிறு குறிப்பு |
ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தான் சத்யா. கண்கள்மூடி வாக்மேனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தான்.
சத்யாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் பூங்கோதை. கண்களில் நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது
கண்ணீர் அருவி.
ரயில் மும்பையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது...
அப்பாவை பிரிந்து வந்ததை நினைத்து நினைத்து அழுதாள் பூங்கோதை. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால் அப்பாதான் எல்லாம். இவளுக்காகவே மறுமணம் செய்யாமல்,தனி ஆளாக இவளை வளர்த்தவர்..
அப்பாவை யார் தரக்குறைவாக பேசினாலும் அவ்வளவுதான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் ஒருவர் தவறாக அப்பாவை சொன்னதற்கு நெருஞ்சி முள்ளால் அவரது சைக்கிளை பஞ்சர் ஆக்கியவள் பூங்கோதை.
அப்படிப்பட்ட அப்பாவை பிரிந்து......
சத்யாவை கல்லூரியில்தான் சந்தித்தாள்... கல்லூரியில் எந்த பெண்ணைக் கேட்டாலும் தனக்குப் பிடித்தவன்
சத்யா என்றுதான் சொல்வார்கள்.ஆறடி உயரம்...கூடைப்பந்து அணியின் கேப்டன். திறமையான விளையாட்டு வீரன். பூங்கோதை சத்யாவின் தீவிர ரசிகை,பின் காதலி,இப்போது மனைவி. கொடுத்துவைத்தவள் என்று தோழிகளின் வாழ்த்தோடு சத்யாவின் கரம்பிடித்தவள்.
சத்யாவிற்காக இன்று அப்பாவை பிரிந்து பயணிக்கிறாள்.....
சத்யா பிறந்துவளர்ந்தது மும்பையில்தான்,அவனது அப்பா அம்மா இருப்பதும் மும்பைதான். பாட்டிவீட்டிலிருந்து மதுரையில் படித்தவன்.
சத்யாவிற்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது, இனி மதுரை பக்கம் எப்போதும் வர விரும்பமாட்டான் சத்யா.
மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் பூங்கோதையின் அப்பா வசிக்கிறார். வெள்ளந்தி மனிதர்.எப்படித்தான் தனியாக இனி வாழப்போகிறாரோ?
மும்பை வந்து நின்றது ரயில்.
சத்யாவின் வீட்டிற்குள் நுழையும்போதே பயம் கவ்விக்கொள்ள ஆரம்பித்தது...எப்படி சத்யாவின் அப்பா அம்மாவை பார்ப்பது?
படபடப்புடன் காலடி எடுத்துவைத்தாள் பூங்கோதை.
சத்யாவின் அப்பா பூங்கோதையின் அருகில்வந்து பேச ஆரம்பித்தார்.
"அண்ணன் கல்யாணத்துக்கு டூர்ல இருந்து வந்திடுவேன்னு சொல்லிட்டு ,அந்த ஹிந்திக்காரனோட ஓடிப்போயி என் தலையில மண் அள்ளி போட்டுட்டா எம் பொண்ணு, இனிமேல் நீ மட்டும்தாம்மா எம் மக"
மாமனாரின் வயதான கண்களில் தன் அப்பாவை பார்த்து சிலிர்த்தாள் பூங்கோதை.
Monday, December 3, 2007
[+/-] |
ஒரு நடிகையின் கதை.... |
"ஹலோ சுகுமாரன், பூஜாஸ்ரீ பேசுறேன், என் கதையை படமாக்கனும், நீங்கதான் டைரக்டர், யாருகிட்டேயும் இதுபத்தி சொல்ல வேண்டாம், தேவையில்லாத குழப்பங்கள் வரலாம். இன்று மாலை 5 மணிக்கு என்னை வந்து பாருங்கள்,தேங்க்ஸ்,பை" துண்டிக்கப்பட்ட தொலைபேசியை கீழே வைக்காமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சுகுமாரன்.
அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? தமிழகத்தின் நம்பர் 1 நடிகையாக,கனவுக்கன்னியாக திகழ்பவராயிற்றே பூஜாஸ்ரீ! அவர் கடித்த கொய்யாபழத்தை ஏலம்விட்டு தங்கள் அன்பை காண்பித்தார்களே தமிழக ரசிகர்கள்!!
இயக்குனராக வேண்டும் என்கிற என் பத்துவருட கனவு நிஜமாகப் போகிறதா!! பூரித்து நின்றான் உதவி இயக்குனராக பணிபுரியும் சுகுமாரன்.
அவர் கதையை படமாக்க வேண்டும் என்றாரே! எத்தனை ஹீரோக்களின் தூக்கம் கெடப்போகிறதோ தெரியவில்லை! எத்தனை நிஜங்கள் வெளியே தெரியப்போகிறதோ தெரியவில்லை!
பூஜாஸ்ரீ கவர்ச்சியில் மின்னும் நடிகைதான் என்றாலும் தைரியசாலி! பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது ரசிகன் ஒருவன் கிண்டல்செய்ததற்காக அவனை ஓட ஓட செருப்பால் அடித்து விரட்டியவர்!
அவர் கதை என்றால் கண்டிப்பாய் அந்த நான்கெழுத்து இளம் நடிகரை பற்றி சொல்லாமலா போய்விடுவார்! இருவரும் காதலித்தது
இந்தியாவே அறியுமே!
அவரைப் பற்றி ஒரு கிசு கிசு வந்தாலே போதும், பத்தே நிமிடங்களில் அந்த பத்திரிக்கை விற்றுத் தீர்க்குமே! அவருடைய கதையை படமாக எடுத்தால்!
தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கும் படமாக அல்லவா அமையும் இந்தப் படம்! சூப்பர் ஹிட்டாக படம் ஓடும்...நம்பர் 1 இயக்குனராக நான் வருவேன்!
கலர் கலராய் கனவுகள் விரிய சந்தோஷத்தில் குதித்தான் சுகுமாரன்.
மாலை 4.30 மணி.
பூஜாஸ்ரீயின் பங்களாவின் வரவேற்பரையில் காத்திருந்தான் சுகுமாரன்.
4.55க்கு படியிறங்கி வந்தது தமிழகத்தையே தன் விழியில் வைத்திருக்கும கனவுதேவதை.
"வணக்கம் மேடம்"
"வணக்கம், உட்காருங்க, மிஸ்டர். சுகுமாரன் எனக்கு சுத்தி வளைச்சு பேசறது
பிடிக்காது,நேரா விசயத்துக்கு வர்றேன். என் கதையை படமாக்கனும், இனிமேலும் எந்த ஒரு நடிகைக்கும்,பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது,தெரு நாய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு
காட்டணும், ரெண்டே மாசத்துல முடிச்சு ரிலீஸ் பண்ணனும், நீங்க சுறுசுறுப்பா இயங்குறத பலபேர் சொல்லி கேள்விபட்டிருக்கேன். அதனாலதான் உங்கள செலக்ட் பண்ணினேன், வாட் டூ யூ சே?" படபடவென்றுபேசினாள்.
"என்மேல நம்பிக்கை வச்சதுக்கு தேங்ஸ் மேடம், கண்டிப்பா சீக்கிரம் படத்தை முடிக்கலாம்..கதை டிஸ்கசன் எப்போ வச்சுக்கலாம் மேடம்"
"குட்,இப்படித்தான் வேகமா இருக்கணும், இப்பவே கதை சொல்கிறேன்,
தெருவில் சுற்றித்திரியற நாய்களால் சமீபத்துல பெங்களூருல ஒரு இளம்நடிகை கொல்லப்பட்டதை மையமா வெச்சு இந்தக் கதையை எழுதி இருக்கேன்.... தெருநாய்களை ஒழிப்பதை பத்திதான் கதை...என்று சொல்ல ஆரம்பித்தாள் பூஜாஸ்ரீ.
சிரிக்கவா அழவா என்று புரியாமல் சிலையாக கதைகேட்டுக்கொண்டிருந்தான் சுகுமாரன்.
ஒரு நடிகையின் கதை என்று பெரியதாய் விளம்பரம் கண்டு அடித்துப்பிடித்து அந்த பிரபல வாரப்பத்திரிக்கையை வாங்கி இந்தக் கதையை படித்துவிட்டு நானும் பத்து ரூபாய் செலவானதை எண்ணி சிரிக்கவா அழவா என்று புரியாமல் நிற்கிறேன்.
சர்வேசனின் 'நச்சென்று ஒரு கதை' போட்டிக்கு எழுதப்பட்ட சிறுகதை