விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே
தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.
இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.
முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன்
பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான்
ஊர் திரும்பினான் முனியசாமி.
முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட
இவனுக்கு தெரியாது.
வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.
ஊருக்குள் முனியசாமிக்கு "அரைப்பைத்தியம்" என்று பெயர்.
எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற
முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.
முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.
-நிலாரசிகன்.
பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்....)
Wednesday, October 10, 2007
[+/-] |
இடுகாடு... |
Monday, October 8, 2007
[+/-] |
"14வது கதை" |
நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது
கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு.
வீடு என்பதை விட அதை பங்களா என்றே சொல்லலாம்.
சத்யா வரவேற்பறையில் காத்திருந்தாள். சத்யா எழுத்தாளர் பத்ரியின் தீவிர ரசிகை.
அந்த வீட்டின் நிசப்தம் சத்யாவிற்கு புதிதாக இருந்தது.
"வாங்க வாங்க" என்றவாறே வந்து அமர்ந்தார் பத்ரி.
"சார் வணக்கம், நான் சத்யா உங்களோட தீவிர ரசிகை..."
"ஓ தெரியுமே என் பி.ஏ சொன்னான், நீங்க வர்றதா"
"உங்களோட அடுத்த நாவல் "14வது கதை" பத்தி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன் சார் "
"அது ஒரு சைக்கோவை பற்றியது. நகரத்தில் திடீரென்று இளம்பெண்கள் காணாமல் போகிறார்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றியதுதான் 14வது கதை"
"தலைப்பே வித்தியாசமா இருக்கு சார்"
"அந்த சைக்கோ 13 பெண்களை கடத்தி கொன்றுவிடுகிறான், அவன் கடத்தப்போகும் 14வது பெண்ணை பற்றியதுதான் இந்தக்கதை"
"அந்த பெண் பெயர் என்ன சார்" ஆர்வமுடன் கேட்டாள் சத்யா.
"சத்யா" குரூரமாக சிரித்துக்கொண்டே கத்தியுடன் சத்யா நோக்கி முன்னேறினான் சைக்கோ பத்ரி.
மறுநாள் செய்தித்தாளில் சத்யாவின் புகைப்படம் பெரிதாக வந்திருந்தது.
"தொடர்கொலையாளி உயிருடன்பிடிபட்டான். பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சத்யாவிற்கு பிரதமர் பாராட்டு".