
சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே
புரிந்துவிட்டது.இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.நிஜமான
புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில்
வேலை கிடைத்து கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்று சென்னைக்கு வந்து
இறங்கியிருக்கிறேன். அரும்பாக்கத்திலுள்ள நண்பனின் வீட்டை நோக்கி
சென்றுகொண்டிருக்கிறது ஆட்டோ. ஆட்டோவின் உட்புற கண்ணாடியில் பிள்ளையார்
படமொன்று ஒட்டியிருந்தது. முகத்தை திருப்பிக்கொண்டேன்.
பிள்ளையார்மீது கோபமில்லை. தன் மீது நம்பிக்கையில்லாதவனின் வழிபாடுதான்
கடவுள் என்கிற எண்ணம் எப்போதும் எனக்குண்டு.
நண்பன் வசிக்கும் முதல் மாடி வழக்கம்போலவே பேச்சிலர் அறைக்கான எல்லா
தகுதிகளோடுமிருந்தது. ஒருமுறை கிராமத்து வீட்டின் ஞாபகம் வந்து சென்றது.
வலது கால் எடுத்துவைத்து உள்நுழைந்தேன். போர்வைக்குள்ளிருந்து தலை
தூக்கியவன் "வா மாப்ளே" என்று வரவேற்றுவிட்டு போர்வைக்குள் மீண்டும்
சுருண்டு கொண்டான்.முதல் நாள் என்பதால் அலுவலகத்திற்கு செல்ல புது
உடையணிந்து மாடியிலிருந்து கீழ் இறங்கினேன். கீழ்வீட்டை கடக்க
முற்படும்போது திடீரென்று உடல் முழுவதும் சிலிர்க்க வைத்தது பின்னாலிருந்து
உடலை ஈரமாக்கிய தண்ணீர். திடுக்கிட்டு திரும்பினேன் வலதுகையில் வாளியும் இடது
கையை இடுப்பிலும் வைத்தபடி என்னை பார்த்து சிரித்தாள் சிறுமி ஒருத்தி.
கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஓடிச்சென்று அவளை பிடிப்பதற்குள்
வீட்டிற்குள் ஓடி ஓளிந்துகொண்டாள். மீண்டும் மாடி ஏறி உடை மாற்றி கீழே
வந்தேன். வீட்டு வாசலில் நின்றுகொண்டு சிரித்தபடி கேட்டாள் "திரும்பவும்
தண்ணீ ஊத்தட்டுமா?"
"அடிபிச்சுடுவேன்" என்றவாறு கையை ஓங்கினேன்.
"வவ்வ வவ்வே" பழிப்புக்காட்டிவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.
ஆரம்பமே அசத்தல்தான் என்று நினைத்துக்கொண்டு அலுவலகம் சென்றேன்.
முதல் நாள் அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் மொட்டைமாடி சென்று காலை
கொடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கும்போது அந்தச்சிறுமியின் முகம்
ஞாபகம் வந்தது. ஓங்கி தலையில் கொட்டியிருக்கவேண்டும்.
மறுநாள் மாடியிலிருந்து கீழ் இறங்கும்போது என்னை அறியாமல் பயம்
தொற்றிக்கொண்டது. இன்றும் அந்த வானரம் தண்ணீர் ஊற்றிவிடுமோ? பூனைபோல்
அடிமேல் அடியெடுத்து இறங்கி கேட்டை திறக்க நெருங்கினேன்.
"ஹைய்யா இன்னிக்கும் மாட்டிகிட்டியா" பின்னாலிருந்து சத்தம் கேட்டு
சுதாரிப்பதற்குள் உடலை நனைத்துவிட்டது தண்ணீர். ஆத்திரம் பொத்துக்கொண்டு
வந்தது. வேகமாக சென்று பிடிப்பதற்குள் வீட்டிற்குள் சென்று கதவை
மூடிவிட்டாள். விடாமல் தொடர்ந்து காலிங் பெல்லை அழுத்தினேன். ஜன்னல்
வழியே பழிப்பு காட்டிச் சிரித்தாள்.
தினமும் இவளிடமிருந்து தப்பித்து வெளியே செல்வதற்கு பேசாமல் குளிக்காமல்
இருந்துவிடலாம். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீதிருந்த கோபம் குறைந்து அவளின்
குறும்பை ரசிக்க ஆரம்பித்தது மனம்.
"உன் பேர் என்ன குட்டி?" தண்ணீர் வாளியுடன் நின்றவளிடம் நானாக சென்று
பேசியவுடன் ஆச்சரியம் தாளாமல் என்னை பார்த்தாள்.
"குட்டியா? நான் நல்ல உயரம்,உன் பேர் என்ன?" என்னிடம் கேட்டாள் வாளியை
கீழே வைத்தபடி.
"என் பெயர் அருண்"
"அருண் ஐஸ்க்ரீம் ஓனர் நீதானா?" இதை எதிர்பார்க்கவிலை நான். வாலில்லா
குரங்குகுட்டி ப்ராக் போட்டு நிற்பது மாதிரி இருந்தது.
"என் பெயர் ப்ரியா"
"நைஸ் நேம்,என்ன படிக்கிற?
"போர்த் ஸ்டாண்டர்ட் ஏ செக் ஷன்"
"செக் ஷனோட சேர்த்துதான் சொல்லுவியா?"
"ஆமா ஏ செக் ஷன்லதான் நல்லா படிக்கிற ஸ்டூடன்ஸ் இருக்காங்க"
"சரி டெய்லி தண்ணீ ஊத்துறியே ஏன்?"
"ச்சும்மா"
"இனிமே நாம ப்ரெண்ட்ஸ். என் மேல நீ தண்ணி ஊத்தக்கூடாது சரியா?" கையை நீட்டினேன்.
கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் "சரி நாம பிரண்ட்ஸ் இனி தண்ணீர்
ஊத்தமாட்டேன் அருண்னா". மனதிற்குள் சந்தேகம் பிறந்தது தண்ணீருக்கு பதில்
சாணித்தண்ணீ ஊத்திவிடுவாளோ என்று. வெளிக்காட்டிக்கொள்ளாமல் பை
சொல்லிவிட்டு அலுவலகம் சென்றேன்.
நகர வாழ்க்கை தினம் தினம் ஏதாவதொன்றை கற்றுத்தருகிறது. வெவ்வேறு
மனிதர்களை, மனித முகமூடிகளில் திரியும் மிருகங்களை,மின்சார ரயிலை போன்ற
வேகத்தை, நடுரோட்டில் அடிபட்டு துடிக்கும் நாயை பார்த்தும் பாராமல்
செல்கின்ற மனங்களை. சென்னைக்கு வந்து இருவாரம் ஓடிப்போனது. மாலை
வேளைகளில் மேல்மாடியிலிருக்கும் என் அறைக்கு வந்துவிடுவாள் ப்ரியா.
வீட்டைச் சுற்றிலும் பூத்திருக்கும் செவ்வந்தி,செம்பருத்தி,நந்தியா
வட்டை இன்னும்
பலவித பூக்களை பறித்துக்கொண்டுவந்து அறையின் நடுவிலிருக்கும் பூ
ஜாடியில் அழகாய் வைப்பாள். மடிக்காமல் சுருண்டு கிடக்கும் போர்வைகளை
மடித்தும், பாயை சுருட்டியும் ஓரமாய் எடுத்து வைப்பாள். எனக்கு
ஆச்சரியமாக இருக்கும், இந்தச் சிறிய வயதில் எப்படி வந்தது இந்த
பொறுப்புணர்ச்சி?
"உனக்கு யாரு குட்டி இதெல்லாம் சொல்லி தந்தா?"
"ஐய இதுகூட தெரியாதா எங்க டாடிக்கே நான் தான் சொல்லித்தந்தேன்" என்பாள்.
அவள் செய்ய வேண்டிய ஹோம்வொர்க் அனைத்தையும் என்னுடன் அமர்ந்து செய்வாள்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் என் கால்களிடையே சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்து டி.வி பார்ப்பது அவளுக்கு அதிகம் பிடிக்கும்.
ஹே அருண் அண்ணா எனக்காக போகோ சானல் மாத்த வேண்டாம். போனா போகட்டும் நான் சன் மியூசிக் பாக்கறேன் என்பாள் பெருந்தன்மையாக.
அவள் மிக அழகாகப் படம் வரைவாள். ஒரு குரங்கை வரைந்து அதன் அடியில் அருண் அண்ணா என்று எழுதி என்னிடம் ஒரு முறை வாங்கிக் கட்டிக் கொண்டாள். மற்றொரு தடவை ஸ்கூல் போட்டியில் பரிசு வாங்கியதற்கு நான் அவளை சிட்டி செண்டர் அழைத்துச் சென்று அவள் விரும்பியவற்றையெல்லாம் வாங்கித் தந்தேன்.
தினமும் அவர்கள் வீட்டிலிருந்து காலை உணவும் இரவு டிபனும் வந்துவிடும்.
எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவளின் அம்மா உணவு கொடுத்தனுப்புவதை
நிறுத்தவில்லை. "என் பொண்ணுக்கு ஹோம்வொர்க்கெல்லாம் சொல்லித்தர்ற. நீயும்
தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறது நல்லதில்லப்பா,உனக்கும் சேர்த்து
சமைக்கிறதுல எந்த கஷ்டமும் கிடையாது இனி வேண்டாம்னு சொன்னா
ப்ரியாக்குட்டிகிட்ட சொல்லிகொடுத்திடுவேன்" என்னையும் குழந்தையாக
பாவித்தார் ப்ரியாவின் அம்மா.
அலுவலக எரிச்சல்களிலிருந்தும் நகரத்தின் நரக வாழ்க்கையிலிருந்தும் என்னை
காப்பாற்றியது ப்ரியாவுடன் நானிருக்கும் தருணங்கள் மட்டும்தான். சில
நாட்கள் என் அறையிலேயே படுத்துறங்கி விடுவாள். தூக்கிச்சென்று அவள்
வீட்டில் விட்டுத்திரும்புவேன். மறுநாள் பெரிய மனுஷி போல பேசுவாள்
"அருண்னா நேத்து ரொம்ப டயர்டா இருந்துச்சா அதான் டி.வி பார்க்கும்போதே
தூங்கிட்டேன்".
குழந்தையின் உலகில் சிறகடித்து பறந்துகொண்டிருந்தோம்
நானும் ப்ரியாவும். வார இறுதியில் சினிமாவுக்கும்,கடற்கரைக்கும் தவறாமல்
ப்ரியாவை கூட்டிச்செல்வது பொழுதுபோக்கானது.
புதிதாக எனக்கே எனக்காக ஒரு வண்டி வாங்க ஆசைப்பட்டு ஒரு பல்ஸார் வாங்கினேன். முதல் முதல் என் செல்ல ப்ரியாக்குட்டியைத்தான் ஏற்றினேன். நாங்கள் இருவரும் முதலில் போனது மெரினா.அதன் பின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல். அன்றிரவு வீட்டுக்கு வரும் போதே தூங்கி வழிந்தாள்.
நான்கு மாதங்கள் கழிந்த சுவடே இல்லாமல் மறைந்துபோனது. ஒரு சனிக்கிழமை
காலை மாடிக்கு வந்தவள் "அண்ணா இன்னிக்கு ஸ்பென்சர் போலாமா? எனக்கு டிரெஸ்
எடுக்கணும்".
இருவரும் ஸ்பென்சர் பிளாசாவில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு அவளுக்கு
பச்சைக்கலரில் ப்ராக் ஒன்று எடுத்தோம். உடை வாங்கிய மகிழ்ச்சியில் துள்ளி
குதித்துக்கொண்டு வந்தாள்.
ஆளுக்கொரு பார்ப்கான் வாங்கிக்கொண்டு அருகிலிருந்த படிக்கட்டில்
உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான்
ப்ரியாவுக்கு இருமல் வந்தது. இரு முறை பலமாக இருமியவள் திடீரென்று ரத்தம்
கலந்து வாந்தியெடுத்தாள். பதறி அடித்து அவளை அள்ளிக்கொண்டு ஆட்ட
பிடித்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். போகும்
வழியிலேயே அவர்களது வீட்டிற்கு போன் செய்து விசயத்தை சொன்னேன்.
மருத்துவமனையின் வாசம் பதற்றத்தை அதிகப்படுத்தியது.
இருநாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துவிட்டு ப்ரியாவுடன்
மருத்துவமனையில் இருந்தேன்.
முதல் நாள் மாலை என்னை அருகில் அழைத்தாள் "அருண்னா உனக்கு நெக்ஸ்ட் வீக்
பெர்த்டே இல்ல..நான் நிறைய சார்ட் வாங்கி படம் வரஞ்சு வச்சிருக்கேன். என்
ரூம்ல பெட்டுக்கு அடியில இருக்கு மறக்காம எடுத்துக்குவியா"
"சரிம்மா நீ தூங்கு" என்று சொல்லிவிட்டு அவளது பிஞ்சுக்கரங்களை
பற்றிக்கொண்டேன். சூடாக இருந்தது அவள் உடல். அன்று மாலை அவளது வீட்டிற்கு சென்று எனக்காக அவள் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பார்த்தேன். சின்னஞ்சிறு பறவையொன்று மரத்தில் உட்கார்ந்திருப்பது போல மிக அழகாய் வரைந்திருந்தாள்.
மறுநாள் அவளது அம்மா என்னை தனியாக அழைத்துச்சென்று அந்த விசயத்தை சொன்னார்.
''அருண் ப்ரியாவோட அம்மா அப்பா உயிரோட இல்லப்பா. அவ குழந்தையா
இருக்கும்போதே இறந்துட்டாங்க. நாங்க அவளை தத்தெடுத்து வளர்க்கிறோம்."
பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் விழியோரம் கண்ணீர் துளிர்த்து
நின்றது. நான் எதுவும் பேசாமல் மெளனமாய் நின்றிருந்தேன். சிறிது இடைவெளி
விட்டு தொடர்ந்தார் "ப்ரியாவுக்கு கேன்சர். உன்கிட்ட சொன்னா
கஷ்டப்படுவேன்னுதான் சொல்லல. இன்னும் கொஞ்ச நாள்ல அவ நம்ம எல்லோரையும்
விட்டுட்டு.." அதற்கு மேல் பேசமுடியாமல் கேவி கேவி அழுதார்கள். தலையில்
இடி இறங்கியது போலிருந்தது எனக்கு. என் ப்ரியாக்குட்டிக்கு கேன்சரா?
சினிமாவில் மட்டுமே நடக்கின்ற விசயங்கள் என்று நான்
நினைத்திருந்தவையெல்லாம் என் வாழ்விலும் நடக்க வேண்டுமா? அதற்கு மேல்
அங்கு நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வந்தேன். என்னுடல் லேசான நடுக்கத்திலிருந்தது.
மருத்துவமனைக்கு எதிரே பிள்ளையார்கோவில் ஒன்றிருந்தது. இரண்டு மூன்று
பேர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று மண்டபத்தில்
அமர்ந்தேன். இருபதடி தூரத்தில் பிள்ளையார் சிலையாகி இருந்தார். ஏனோ
கடவுளை திட்டவேண்டும் போலிருந்தது. அழுகையும் கோபமும் கலந்து
வெடித்துச்சிதற ஆரம்பிக்கும் தருவாயில் செல்போன் அடித்தது. ப்ரியாக்குட்டி
என்னை பார்க்கவேண்டும் என்கிறாளாம். எழுந்து வேகமாய் ஓடினேன்.
மருத்துவமனையின் வரவேற்பரையில் அமர்ந்திருந்தவர்கள் வினோதமாய்
பார்த்தார்கள். அவளிருந்த அறைக்கதவை வேகமாய் திறந்துகொண்டு உள்ளே
வந்தேன். ப்ரியாவை சுற்றி அவளது அம்மா,அப்பா,பாட்டி,பக்கத்துவீட்டு உமா
அக்கா, பள்ளி ஆசிரியை பிருந்தா எல்லோரும் நின்றிருந்தார்கள். என்னைப்
பார்த்து சிரிக்கமுயன்று கொண்டிருந்தாள் ப்ரியா.
அருகில் சென்று கரம் பற்றினேன். ஏதோ சொல்ல வாயெடுத்தவள் முடியாமல் குழறி
"அருங்னா" என்றபோது அவளது உடல் குளிர்ந்திருப்பதை உணர்ந்தேன். சட்டென்று உடல் அதிர்ந்து மூச்சுவாங்க ஆரம்பித்தது. எல்லோரும் டாக்டரை அழைத்துவர
ஓடினார்கள். ப்ரியாகுட்டியின் கண்கள் என்னை ஒரு முறை தீர்க்கமாய்
பார்த்தன. டாக்டர் அனைவரையும் வெளியே போக சொன்னார். வெளியில் வந்து
அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்தேன். ப்ரியா முதன் முதலாய் என் மீது
தண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிற்குள் சென்று பழிப்பு காட்டி சிரித்தது
ஞாபகம் வந்தபோது சன்னல் வழியே பெயர்தெரியாத பறவையொன்று சிறகடித்து பறக்கும் சப்தம் கேட்டது.
Sunday, February 15, 2009
| [+/-] |
ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு - சிறுகதை |
Thursday, December 25, 2008
| [+/-] |
காதல்கதைகள்: கதை 2 |
கருவிழி மீன்கள்:
லக்ஷ்மியின் கண்களை பற்றி சூர்யா பேசாத நாட்களே இல்லை எனலாம்.
என்னுடம் பணிபுரியும் சூர்யாவிற்கு லக்ஷ்மியை மூன்று வருடங்களாக தெரியும்.
இணையத்தில் யாஹூ சாட்டில்தான் இருவரும் சந்தித்தார்கள். மெல்ல வளர்ந்தது
நட்பு. மூன்று வருடங்கள் நச்சரித்தபின்,கடந்த மாதம்தான் லக்ஷ்மி அவளது
புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அதை பார்த்த நாளிலிருந்து சூர்யாவுக்குள்
ஏற்பட்ட மாற்றத்திற்கு அளவே இல்லை.
அவளுக்கு எத்தனையோ மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தாலும் முதன் முதலாய்
காதல் கடிதம் எழுத தோன்றியபோது என்னிடம் வந்து புலம்பினான் சூர்யா.
"என்னமோ தெரியலடா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுட்டுது...இத்தனை நாளா
பிரண்டுன்னு சொல்லிட்டு இப்போ விரும்புறேன்னு சொன்னா தப்பா நினைச்சுக்குவாளோன்னு
பயமாவும் இருக்கு...பட் நவ் ஐம் இன் லவ் வித் ஹெர்...ப்ளீஸ் நீதான் கவிதை எல்லாம் எழுதுவ இல்ல
அவளுக்கு புடிக்கிற மாதிரி கவித்துவமா ஒரு லவ் லெட்டர் எழுதி தரணும்..." என்றான்.
"ஆளைவிடுடா காலேஜ்ல படிக்கிறப்போ இப்படித்தான் நண்பர்களுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுத்தே
என் வாழ்க்கை போச்சு...அதுமட்டுமில்லாம உன் காதலிக்கு நீதான் டா எழுதணும்"
எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவன் கேட்கவில்லை. சரி எழுதி தருகிறேன் என்றதும் அவளது
புகைப்படத்தை தந்துவிட்டு சென்று விட்டான்.
கடிதமெழுத அமர்ந்தேன் நான்.
பூக்களின் சினேகிதியே,
மூன்று வருடங்களாய் என் உயிரில் கலந்துவிட்ட தோழி நீ. நான் விழும்போதெல்லாம் வார்த்தைதோள்
தந்த புனிதமானவள் நீ. இலையுதிர்காலத்திலும் நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சியாய் திகழும் உன்
நட்பில் திளைத்தவன் நான். உன்னோடு நான் பேசியதைவிட நம்மோடு நட்பு அதிகம் பேசியிருக்கிறது.
உன் குரல் கேட்காத பொழுதுகள் அனைத்தும் அனலாய் கொதிக்கின்றன. உச்சரிக்கப்படாத என்
வார்த்தைகளெல்லாம் உனக்குள் வீழ்ந்துகிடக்கின்றன. நட்பென்னும் கடற்கரையில் நாம் கட்டிய மணல்வீட்டை
இன்று காதலென்னும் அலைவந்து உடைத்தது நினைத்து புரியாத உணர்வுகளால் நெஞ்சு விம்முகிறது தோழி.
என் தோழன் என்கிற உனது எண்ணத்தில் கல்லெறிகிறது என் மனதில் புதிதாய் பூத்திருக்கும் நேசம். உன்னுடைய
ஒவ்வொரு வார்த்தைகளிலும் எனக்கான நட்பை மட்டுமே பார்த்து ரசித்து பழகிய இதயம் நட்பின் முனையில்
காதலை சுமந்து ஓடிவருகிறது உன் பின்னால். காயங்களால் நிரம்பிய என் பயணத்தில் நீ மட்டுமே வசந்தங்களை
பரிசளித்தாய். வாழ்க்கை முழுவதும் வசந்தமாக உன்னை வேண்டி நிற்கிறது மனசு.
இத்தனை நாட்கள் வராத காதல் இன்றெப்படி வந்தது எனக்குள்? உன் புகைப்படம் காணும் வரையில் தோழி என்று
மட்டுமே எண்ணிய என் இதயம் இப்பொழுது எப்படி காதலுக்குள் விழுந்து தத்தளிக்கிறது? உன் அழகில் மயங்கி நிற்கிறதா
என் உயிர்? இல்லை. உன் கண்களில் வழிகின்ற ப்ரியங்களை வாழ்வு முழுவதும் எனதாக்கி கொள்ளவே
விரும்புகிறது இந்த சுயநல மனம். என்னை மன்னித்துவிடு தோழி. உன்னிடம் எதையும் மறைத்ததில்லை இப்பொழுது
காதலையும்....
வண்ணமீன்களை பார்த்து ரசிப்பது இதயத்திற்கு நல்லது என்கிறது மருத்துவம். உன் கருவிழி மீன்களை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதே என் தவம்.
என் விரல்பற்றி வெகுதூரம் நடக்கவேண்டும் என்பது உன்னுடைய நெடுநாள் விருப்பம். உன் விரல்பற்றி அக்னி சாட்சியாய்
உன்னை என்னில் பாதியாக்கி கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன் லக்ஷ்மி. Yes I am in love with you.
உன் பதில் மடலுக்காக காத்திருக்கும்,
சூர்யா.
எழுதி முடித்தவுடன் சூர்யாவிற்கு அனுப்பினேன். ஒடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றி மச்சான் என்று போனவன்
மூன்று நாட்களாய் அலுவலகம் வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
மூன்று நாள் தாடியுடன் அலுவலகம் வந்த சூர்யா யாரிடமும் பேசவில்லை. அவனை அழைத்துக்கொண்டு
புல்வெளிக்கு சென்றேன். ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தோம். சிறிது நேர மெளனத்திற்கு பின் என்
பார்வை உணர்ந்து அவனாகவே பேச ஆரம்பித்தான்.
"நீ எழுதி கொடுத்த லவ் லெட்டரை அவளுக்கு அனுப்பிட்டு இரண்டு நாளா காத்திருந்தேன் டா... எப்பவும்
மெயில் அனுப்பிச்சா உடனே பதில் வந்திடும் பட் இரண்டு நாளாகியும் வரலைங்கறதால ரொம்ப துடிச்சிட்டேன்.
நேத்து மெயில் அனுப்பியிருந்தா... அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தமாம். அதை சொல்றதுக்காக
மெயில்பாக்ஸை திறந்தப்போதான் என்னோட மெயில் பாத்திருக்கா. இரண்டுநாளா என்னசொல்றதுன்னே
தெரியாம நேத்துதான் இந்த மெயிலை அனுப்பிச்சா" என்றபடி அவள் அனுப்பிய மடலை காண்பித்தான்.
"சூர்யா,
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.போலித்தனமற்ற உன் குறும்புபேச்சில் மனசு எப்பவும்
சிரிச்சுக்கிட்டே இருக்கும்.ஆனா காதலிக்கணும் உன்னையே திருமணம் செய்துக்கணும்ங்கற
எண்ணம் ஏனோ வந்ததே இல்லடா. யூ ஆர் மை பிரண்ட் பார்எவர்.. உன்னோட மெயிலை படிச்சுட்டு
என்னால எதுவுமே பண்ணமுடியலை. ஏன் தெரியுமா எனக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்.
அதை சொல்றதுக்காகத்தான் உனக்கு மெயில் பண்ண வந்தேன்.பட்..... இட்ஸ் ஆல் ரைட் சூர்யா.
யாருக்கு யார்ங்கறது நம்ம கையில இல்ல.
எப்பொழுதும் சூரியன்போல் நீ பிரகாசிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
கண்ணீருடன் உன்
தோழி."
படித்துமுடித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விரக்தியான புன்னகையுடன் உடைந்த
குரலில் சொன்னான் சூர்யா " அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து எழுதி கொடுடா"
மழை தூறல்போட ஆரம்பித்தது.இருவரும் மெல்ல நடக்க
ஆரம்பித்தோம். என் தோளில் சாய்ந்தபடி மெளனமாய் நடந்துவந்தான் சூர்யா. அந்த மெளனத்திற்குள் கவிதையாய் மலர்ந்திருந்தாள்
லக்ஷ்மி.
-நிலாரசிகன்.
Tuesday, December 23, 2008
| [+/-] |
காதல்கதைகள் - கதை 1 |
முன்கதைக்குறிப்பு:
[நான் கண்ட,கேட்ட காதல்கதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை அனைத்தும் நடந்த கதைகள்.
சற்று புனைவுடன் எழுதியிருக்கிறேன்,பெயர்கள் கற்பனையே]
சக்தியும்,ப்ரியம்வதாவும்:
பனி விழும் அதிகாலையில் இப்படித்தான் இந்தக்குட்டிக்கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று
நினைத்தேன். காரணம் ப்ரியம்வதாவை நினைத்து மெழுகுவர்த்திரியை ஏற்றி வைத்துக்கொண்டு
அழுதுகொண்டிருக்கும் சக்தியின் காதல் பனி விழும் அதிகாலை போல மிக அற்புதமானதுதான்.
ஆனால் என்னசெய்வது காதலில் பிரிவுதான் ஞானத்தை தருகிறது என்பதுபோல் சக்தி கொஞ்சநாட்களாக
தத்துவம் பேச ஆரம்பித்திருந்தான். ப்ரியம்வதாவின் பிரிவுதான் காரணம்.
சக்தி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளன். சிறுகதைகளில் அடுத்த ஜெ.கே இவன் தான் என்றார்கள் நண்பர்கள்.
அவனது ரசிகையாக அறிமுகமானாள் ப்ரியம்வதா. இருவரும் முதன்முதலாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான்
சந்தித்தார்கள்.
"எனக்கு உங்க கதைன்னா ரொம்ப இஷ்டம் சக்தி...ஐ ஜஸ்ட் லவ் இட்..எப்படி இவ்ளோ நல்லா எழுதறீங்க?" விழிகள் விரிய
கேட்டவளிடம் எழுத்தாளன் என்கிற சிறு கர்வத்துடன் பதில் சொன்னான் சக்தி.
"ரொம்ப சிம்பிள்ங்க...அதாவது பார்த்தீங்கன்னா..19ம் நூற்றாண்டின் இறுதியில புகழ்பெற்ற..... " ஏதேதோ சொல்லி அரைமணிநேரம்
பேசினான். அதன் பிறகு எஸ்.எம்.எஸும்,செல்லுமாக நட்பு மலர்ந்து காதலில் விழுந்தார்கள் இருவரும்.
ப்ரியம்வதாவும் இவனுக்காக கஷ்டப்பட்டு கவிதைகள் எழுதி அனுப்புவாள்
"நீ இல்லாவிட்டால் வானம் கறுக்கிறது மேகம் சிவக்கிறது வாழ்வின் அந்திவரை நீ வேண்டும் இல்லை மரணத்தை
முத்தமிடும் என் இதழ்கள்" என்று அவள் எழுதும் கவிதைகளை விட அதில் ஒளிந்திருக்கும் காதல் அழகாய் கண்சிமிட்டும்.
திடீரென்று ஒரு நாள் சக்திக்கு அவளிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
"என் தம்பிக்கு நாம பழகறது பிடிக்கலை சக்தி. எனக்கும் மாப்பிள்ளை பார்க்கிறாங்க.
இனிமேல் என்கிட்ட பேசவோ,என்னை சந்திக்கவோ முயற்சிக்காத,குட்பை"
பித்துப்பிடித்தவன்போல் திரிந்தான் சக்தி. ப்ரியங்களால் வதைத்து சென்ற அந்த ப்ரியம்வதாவின் நினைவில்
தினம் தினம் துடித்தான். எழுதுவதை மொத்தமாக நிறுத்திவிட்டான். இப்பொழுதெல்லாம் எங்காவது தடதடக்கும்
ரயிலின் ஓசைகேட்டால் மட்டும் சக்தியின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
எனக்கு சக்தியை பார்க்க பாவமாக இருக்கிறது. காதலால் தன்னிலை இழந்தவர்களில் சக்தியும் ஒருவன்.
ப்ரியம்வதா யாரை வதைத்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.
-நிலாரசிகன்.
Sunday, September 7, 2008
| [+/-] |
விதி - சிறுகதை |
மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள்
ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும். முதல் முறையாக ஒரு
கொலை செய்யப்போகிறேன் என்கிற எண்ணமே உடலுக்குள் ஏதேதோ செய்தது. லேசாய்
உடம்பு சுட்டது. முதல் வகுப்பு ஏசியில் பயணித்தும் வியர்த்துக்கொண்டே
இருந்தது. இவை எதுவும் அறியாமல் என் தோளில் சாய்ந்துகொண்டு "ரீடர்ஸ்
டைஜஸ்ட்" படித்துக்கொண்டிருந்தாள் என் காதலி பூஜா.
எதிர் சீட்டில் இரு பெண்கள் ஒன்று நான் கொல்லப்போகும் ரேவதி. இன்னொருபெண்
பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவள் போலிருந்தாள். எலுமிச்சை நிறம்.
டிசர்ட்டில் தமிழ்ப்படுத்த முடியாத ஒரு ஆங்கில வாசகமிருந்தது. அவளை பற்றி
எதற்கு இப்போது? நான் கொலை செய்ய வேண்டியது ரேவதியை. காதில் ஐபோடை
மாட்டிக்கொண்டு,கண்கள் மூடி,ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பாடலை
ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் முகம் மட்டும் பளிச்சென்று இருந்தது.
அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரியுமே அது மாதிரி.
ரேவதி என்முன் வந்து அமர்ந்துபோது என்னை அடையாளம் கண்டுகொண்டு எவ்வித
பயமோ பதட்டமோ இல்லாமல் வெகு இயல்பாய் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு
பாடல்களில் மூழ்கிப்போனாள். பூஜாவிடம் ரேவதி என்னுடன் கல்லூரியில்
படித்தவள் என்று மட்டும் சொன்னேன். ரேவதியால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட
பூகம்பத்தை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. காரணம்,பூஜா என் காதலி. இந்த
இரண்டு வருடங்களாய் நான் சிரிப்பதற்கு காரணம் பூஜா. அதற்கு முன்பு நான்கு
வருடமாய் நான் அனுபவித்த சித்ரவதைக்கு காரணம் அப்பாவிபோல் என் முன்னால்
அமர்ந்திருக்கும் இந்த ரேவதிதான்.
ரேவதியும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். சென்னையிலிருக்கும்
மிகப்பிரபலமான கல்லூரியில்
முதலாம் ஆண்டு மாணவனாக கனவுகளுடன் சேர்ந்த முதல் வருடம் எவ்வித
பிரச்சினையுமின்றி கடந்துபோனது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளில்தான்
பிரச்சினை ஆரம்பமானது. எங்கள் பக்கத்து கல்லூரியின் சேர்மன் எலக்ஷனில்
ஏற்பட்ட அடிதடிக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள்தான் காரணம் என்று
உசுப்பிவிட்டதில் இருகல்லூரிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அப்போது கல்லூரிக்கு தன்னுடைய காரில் வந்துகொண்டிருந்த ரேவதியை
ஒருகூட்டம் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. கார் கண்ணாடிகள் அடித்து
நொறுக்கப்பட்டது. ரேவதியின் அப்பா ஒரு கோடீஸ்வரர். தன்னுடைய பணபலத்தை
பயன்படுத்தி காரை நொறுக்கியவர்கள் அனைவரையும் போலீஸ் ஸ்டேசனில்
நிறுத்தினார். சண்டையை வேடிக்கை பார்த்த நான் உட்பட.
இந்த அடிதடியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதை எவ்வளவோ
எடுத்துச்சொல்லியும் யாரும் கேட்பதாயில்லை. பிடிபட்ட மாணவர்கள் தங்கள்
பின்புலத்தால் வெளிவந்துவிட்டனர். அநாதையாய் மாட்டிக்கொண்டவன் நான்
மட்டும். 15 நாட்கள் காவலில் வைத்துவிட்டு அனுப்பினார்கள். என்னை
அவமானபடுத்திய ரேவதியை பழிவாங்க நினைத்து அவள் ஜிம்மிலிருந்து கார்
நோக்கி போகும்போது ஆசிட் பாட்டிலை அவள் மீது எறிந்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல் ஓடிவிட்டேன். மறுநாள் போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு
போய் வாயில் நுரைதள்ளும் வரை அடித்தார்கள். ஒவ்வொரு அடிவிழும்போதும்
அவள் முகம் எவ்வளவு கோரமாய் மாறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டே வலியை
பொறுத்துக்கொண்டேன்.
கொலை முயற்சி வழக்கில் என்னை கைது செய்து புழல் சிறையில் நான்கு வருடம்
அடைத்தார்கள். மனம் கல்லாகி இருந்தது. ஆனாலும் ஒரே திருப்தி ரேவதியின்
கோரமுகம் மட்டும்தான். கொஞ்ச நாளில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் சொன்ன
செய்தி கேட்டு மனம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. ரேவதியின் முகத்தை
நோக்கி நான் வீசிய ஆசிட் தவறுதலாக அவள் கையில் பட்டிருக்கிறது. சிறிய
காயத்துடன் தப்பிவிட்டாள். நான்கு வருடமாய் வன்மத்துடன் ஜெயில் கம்பிகளை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
ஜெயிலை விட்டு வெளியே வந்தவுடன் எவ்வளவோ தேடியும் ரேவதியை கண்டு
பிடிக்கமுடியவில்லை. ஏதோ வெளியூருக்கு போய் விட்டதா சொன்னார்கள்.
படிப்பும் இல்லாமல் ஜெயில் சென்று வந்தவன் என்கிற பட்டத்துடன் சென்னையில்
வேலைதேட விரும்பவில்லை. திருட்டு ரயிலேறி மும்பை வந்து ஒரு ஹோட்டலில்
வேலைக்கு சேர்ந்து, வாழ்க்கை திசைமாறி போனது.
ஹோட்டலுக்கு எதிரே இருந்த பெண்கள் கல்லூரியில் தான் பூஜா
படித்துக்கொண்டிருந்தாள். நான்கு மாதம் கஷ்டப்பட்டு அவளை கவர்ந்து என்
காதலியாக்கியது அவள்மீதுள்ள காதல் மட்டுமல்ல.சென்னையில் அவள் அப்பா
வைத்திருக்கும் ஜுவல்லரி மீது கொண்ட காதலும்தான்.
"தூக்கம் வருது நவீன்…தூங்கலாமா?" பூஜாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு
கொண்டுவந்தது. பூஜா அழகிய மஞ்சள் நிற நைட்டிக்கு மாறியிருந்தாள். மற்ற
இரு பெண்களும் நைட்டிக்கு மாறியிருந்தனர்.
நானும் பூஜாவும் லோயர் பெர்த்தில் படுத்துக்கொண்டோம். எனக்கு நேர் மேலே
உள்ள பெர்த்தில் ரேவதியும், பூஜாவுக்கு மேலே உள்ள பெர்த்தில் அந்த
கல்லூரி பெண்ணும் படுத்துக்கொண்டனர்.
மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. இரயிலில் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.
எல்லோரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். எப்படி ரேவதியை ரயிலைவிட்டு
தள்ளுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை மாற்றி எழுதிய இந்த
சண்டாளியை எப்படி கொல்வது? யோசித்தபடியே படுத்திருந்தேன் ஏசியின்
குளிரில் மெல்ல உறங்கிப்போனேன்.
திடுக்கிட்டு விழித்து மணியை பார்த்தேன். அதிகாலை மூன்று மணி. சே கொலை
செய்ய போகும் நேரத்திலும் எனக்கு தூக்கம் வருகிறதே? இப்பவே புரொபஷனல்
கில்லராக மாறிவிட்டேனா? சீக்கிரம் காரியத்தை முடிக்கவேண்டும் என்று
நினைத்துக்கொண்டிருந்தபோது ரேவதி பாத்ரூம் நோக்கி நடந்தாள். இதுதான்
சரியான தருணம். சட்டென்று எழுந்தேன். விளக்கில்லாமல் இருள்
கவிந்திருந்தது. அடிமேல் அடியெடுத்துவைத்து மெல்ல சென்று ரயிலின் கதவை
திறந்து வைத்துக்கொண்டு கதவருகே ரேவதிக்காக காத்திருந்தேன்.
பாத்ரூமிலிருந்து டவலால் முகம் துடைத்துக்கொண்டே வந்தவளை சட்டென்று கதவை நோக்கி வேகமாக தள்ளினேன்.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து ரயிலுக்கு வெளியே விழுந்தவளின்
அலறல்சத்தம் காற்றில் கலந்து மறைந்தது.
இத்தனை வருடமாய் இதற்காகத்தானே காத்திருந்தேன். இனி என் பூஜா என்
ஜுவல்லரி. கதவை மெதுவாய் மூடிவிட்டு சீட்டுக்கு வந்து உட்காரும்போதுதான்
கவனித்தேன்…பூஜாவைக் காணவில்லை! ஓடிச்சென்று பாத்ரூமிலும் தேடினேன்.
எங்குமில்லை என் பூஜா. அப்படியெனில்…நான் தள்ளியது பூஜாவையா? அய்யோ ஏன்
எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. இனி நான் மட்டும் இருந்து என்ன
ஆகிவிடப்போகிறது? பூஜா நானும் உன்னோடு வந்துவிடுகிறேன் ஓடிச்சென்று
கதவைத் திறந்து குதித்துவிட்டேன்.
ஒரு முட்புதரில் பொத்தென்று விழுந்ததில் எலும்புகள் நொறுங்கியிருக்கவேண்டும்..உயிர் போகும் வலியுடன்,எங்கிருக்கிறேன் என்கிற
உணர்வு குறைய ஆரம்பித்தபோது காதிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்திருந்தது.
இரவு பத்து மணிக்கு நான் உறங்கிய பின்னர் குளிர் தாங்க முடியாமல்
பூஜாவிற்கு மேலுள்ள பெர்த்தில் படுத்திருந்த அந்தக் கல்லூரி பெண் பூஜா
இடத்திற்கும் பூஜா அவள் இடத்திற்கும் மாறியதோ, பாத்ரூம் போனது ரேவதி
என்று நினைத்து அந்த கல்லூரி பெண்ணை நான் தள்ளிவிட்டதோ, கீழே விழுந்தவள்
ரயில் பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து கரை நோக்கி
நீந்தியதோ அறியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் ரேவதி. இவை எதைப் பற்றிய
கவலையுமின்றி சென்னை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த நீள ரயில்.
Wednesday, September 3, 2008
| [+/-] |
காட்சிப்பிழை - சிறுகதை |
மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில் இறங்கி செருப்பை அணிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக கார் நிறுத்தும் இடம் நோக்கி சென்றாள். மாலை வெயிலில் அழகாய் மின்னியது அந்த உயர் ரக கார். காரை பார்த்த பிறகுதான் ப்ரியாவிற்கு போன உயிரே திரும்பி வந்தது. இந்த தில்லியில் பூட்டியிருக்கும் காரையே திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். நல்லவேளை என் கார் தப்பித்தது என்றெண்ணியபடியே கதவைத் திறந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவள் அதிர்ந்தாள். அருகே மெளனமாய் அமர்ந்திருந்தான் அருண்.
அருணைக் கண்டதும் அதுவும் இவ்வளவு பக்கத்தில் தன்னுடைய காரில் அமர்ந்திருக்கும் அருணைக் கண்டதும் ப்ரியாவிற்கு குப்பென்று வியர்த்தது.
ஆறு வருடங்கள் கழித்து அவனைக் கண்டவுடன் இனம் புரியாத ஒரு பயம் தொற்றிக்கொண்டது. முதலில் அவன் தானா என்கிற சந்தேகம் கூட ஏற்பட்டது காரணம் அப்போது சட்டை பேண்ட் அணிபவன் இப்போது ஜீன்ஸும், டீ-சர்ட்டும், கூலிங்கிளாஸுமாய் ஆளே மாறியிருந்தான். தன் அருகே அருண் உட்கார்ந்திருப்பதை அவள் கணவன் பார்த்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. காரணம் திருமணத்திற்கு முன் அருணை உயிருக்கு உயிராய் நேசித்தவள் ப்ரியா.
சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதுதான் அருணுக்கும் ப்ரியாவிற்கும் காதல் மலர்ந்தது. பார்வை பரிமாற்றத்தில் கொஞ்ச நாட்கள், பின் மெல்ல மெல்ல ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது நேசம். முதலில் ப்ரியாதான் காதலை சொன்னாள். கொஞ்சம் தயங்கித் தயங்கிதான் பேசுவான் அருண். அவனது ஏழ்மையும் ப்ரியா பணக்கார குடும்பப்பெண் என்பதாலும் முதலில் கொஞ்சம் தயங்கியபடியே பேசுவான் அருண். நாட்கள் ஓடியதில் உடல்வேறு உயிர் ஒன்று என்கிற நிலைக்கு வந்துவிட்டனர் இருவரும். ஒரு நாள் திடீரென்று ப்ரியாவிற்கு அதிகாலையில் போன் செய்தான் அருண்.
"என்னடா இவ்ளோ சீக்கிரம் போன் பண்ற" தூக்க கலக்கத்தில் கேட்டாள் ப்ரியா.
"செல்லம், இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு மெரினாவுக்கு வந்துடு, காரணம் கேட்காத..நீ வா சொல்றேன்"
அன்று மாலை நான்கு மணிக்கு கடற்கரை சென்று காத்திருந்தவள், பின்னாலிருந்து அருணின் குரல் கேட்டு திரும்பினாள். அங்கே பத்து பதினைந்து சிறுவர்களுடன் கையில் ஒரு பெரிய கேக்குடன் நின்றுகொண்டிருந்தான் அருண்.
"ஹேய் இன்னைக்கு என்னோட பர்த்டேகூட இல்லையே ஏன் இந்த அமர்க்களம் அருண்?" விழிகள் மலர கேட்டவளின் அழகிய முகத்தை தன் கைகளில் ஏந்தி பேச ஆரம்பித்தான் அருண் "இன்னைக்கு நாம காதலிக்க ஆரம்பிச்சு சரியா ஒருவருசம் ஆகுது ப்ரியா. என்னோட உயிரை நான் சந்திச்ச நாள். என் வாழ்க்கையில எப்பவுமே மறக்க முடியாத பொன்நாள். ஐ லவ் யூ டா" அவனை இறுக அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் ப்ரியா.
பூகம்பம் சொல்லிக்கொண்டா வருகிறது? ப்ரியாவின் காதலுக்கு அவள் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. "நம்ம சாதியென்ன அவன் சாதி என்ன? அதுமட்டுமில்ல ப்ரியா, நம்ம வீட்டுல கைகட்டி நின்னு வேலை செய்யறானே முத்துச்சாமி அவனை விட குறைவாதான் அருணால சம்பாதிக்க முடியும். தேவதை மாதிரி எம் பொண்ணை வளர்த்துருக்கேன். போயும் போயும் ஒரு பரதேசிக்கா உன்னை கல்யாணம் பண்ணி கொடுப்பேன். இப்பவே அவன மறந்துட்டு நான் சொல்ற மாப்பிள்ளையை கட்டிக்கோ. சினிமாத்தனமா ஏதாவது பண்ண நினைச்சா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை பெத்ததுக்கு உங்க அம்மாவை கொன்னு பொதச்சுருவேன்"
மூன்று நாட்கள் அடம்பிடித்துப் பார்த்து ஓய்ந்துபோனாள் ப்ரியா. விறுவிறுவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தன. தில்லியில் அரசாங்க பதவியில் இருக்கும் நரேனுக்கும் ப்ரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அப்பாவின் மிரட்டலிலும் அம்மாவின் கெஞ்சலிலும் ப்ரியாவின் தீர்க்கம் குறைந்து காதல் காணாமல் போனது.
கல்லூரியில் எல்லோருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டி இருக்கும் இடத்திற்கு சென்றவள் அங்கே அருணைக் கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாய் நின்றாள். வேகமாய் அவள் அருகே வந்தவன் அவள் கழுத்தைப் பிடித்து கண்ணுக்கு நேராக ஊடுருவி ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னான் "எவ்ளோ தைரியம் இருந்தா எவனோ ஒருத்தனை கட்டிக்க சம்மதிப்ப, நீ எங்க போனாலும் உனக்கு நான் தாண்டி எமன்" அவள் பேச ஆரம்பிப்பதற்குள் போய்விட்டான். கொஞ்ச நேரம் அழுதுகொண்டு அப்படியே நின்றாள்.
ஆறு வருடத்திற்கு முன்பு நடந்தவை அனைத்தும் மின்னலாய் மனதில் பளிச்சிட்டு மறைந்தது.இத்தனை வருடம் வராதவன் இப்போது வந்திருக்கிறானே என்ன ஆகுமோ என்று பயந்தபடியே பேச ஆரம்பிப்பதற்குள் அவளது கார் கண்ணாடியை தட்டி வெளியே வருமாறு சைகை செய்தாள் ஒரு பெண். அருகில் ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.
குழப்பத்துடன் இறங்கி
"என்னம்மா என்ன வேணும்?" என்றாள்.
"சாரி மேடம் அங்க உட்கார்ந்திருக்கிறது என்னோட ஹஸ்பெண்ட், உங்க காரும் எங்க காரும் பக்கத்துல நின்னதால தெரியாம உங்க கார்ல ஏறி உட்கார்ந்திருக்கார்" ஓ இவள்தான் அருணின் மனைவியா என்று நினைத்துக்கொண்டு
"உங்க காருக்கும் என் காருக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியாதா?" சற்று சலிப்புடன் கேட்டாள்.
"கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்த ஆக்ஸிடெண்ட்ல அவரோட ரெண்டு கண்ணுலயும் பார்வை போயிடுச்சு அதனாலதான் தெரியாம உங்க கார்ல ஏறி உட்கார்ந்திருக்கார். வெரி சாரி மேடம்" சொல்லிவிட்டு அருகில் நின்ற சிறுமியிடம்
"ப்ரியா போய் அப்பாவ கூட்டிக்கிட்டு வாம்மா" என்றாள். அப்பாவை கூட்டிச்செல்ல ஓடினாள் அச்சிறுமி. வார்த்தைகள் தொலைந்து ஊமையாய் நின்றிருந்தாள் அருணின் முன்னாள் காதலி ப்ரியா.
Thursday, August 7, 2008
| [+/-] |
தூவல்..(சிறுகதை) |
அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று அமர்ந்தேன். அறைத்தோழன் நல்ல உறக்கத்திலிருந்தான். உறங்க மறுத்தன என் கண்கள். நினைவுகள் மெல்ல பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
பேனா கொண்டுவராமல் பள்ளிக்கு சென்றால் "பேனா(ய்) இல்லாமல் ஏன்னா(ய்) வந்தாய் போநா(ய்) வெளியே" என்று அழகாய்த் திட்டுவார் தமிழாசிரியர்.
அப்படி ஒரு நாள் பேனா இல்லாமல் சென்றதால் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்திருந்தார். தொடர்ந்து அழுது கொண்டே நின்ற என்னிடம் வந்தவர் "வெளிய நிக்கிறதுக்காக இப்படி தொடர்ந்து அழுவலாமா? நாளைக்கு மறக்காம பேனா கொண்டுவந்துரனும் சரியா?" என்றவாறே என் தோளில்தட்டி வகுப்பிற்குள் சென்று அமர வைத்தார். வெளியே நின்றதற்காக அழுவதற்கு நான் என்ன மூக்கொழுகி குமாரா? இரண்டு வாரம் என் அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய "ஹீரோ" பேனா திருடுபோனதால் நான் அழுதேன் என்பது யாருக்கும் தெரியாது. உலகில் மிகச்சிறந்த பொருள் "ஹீரோ" பேனா தான் என்பது என்னுடைய எண்ணம்.
பன்னிரெண்டாம் வகுப்பு டியூசன் சென்டரில்தான் முத்துச்செல்வியை சந்தித்தேன்.எண்ணை தேய்த்து தலைசீவி இரட்டை ஜடைபின்னி பச்சைக்கலர் ரிபன்கட்டியிருப்பாள். எப்பொழுதாவது மரிக்கொழுந்தும் கனகாம்பரமும் அவள் கூந்தலை அழகாக்கும். என்னுடன் படித்தவர்கள் எல்லோரையும் விட முத்துச்செல்விக்கு என்னைத்தான் பிடித்திருந்தது. பெஞ்சிலிருந்து முன் பெஞ்சைக் கடந்துசென்று பிரம்பால் அடிவாங்கிவிட்டு திரும்பும்போதெல்லாம் அவள் கண்கள் கலங்கியிருக்கும். காரணம் டியூசன் சென்டரிலேயே நான் தான் அடிமுட்டாள். அடிக்கடி அடிவாங்கும் முட்டாள். எல்லோரும் நான் அடிவாங்குவதை ரசிக்கும்போது இவள் மட்டும் பரிதாபமாய் பார்த்ததால் எனக்கும் அவளை பிடித்துப்போனது. அவளை பிடித்ததற்கு மற்றும் ஒரு காரணம் அவளிடமிருந்த விலையுயர்ந்த "பார்க்கர்" பேனா. முதல் நாள் கணக்கு நோட்டும் இரண்டாம் நாள் பேனாவும் கடன் வாங்கினேன். கணக்கு நோட்டை மட்டும் திருப்பித்தந்துவிட்டு டியூசன் சென்டரை மாற்றிக்கொண்டேன். முத்துச்செல்வி இரண்டுநாள் உம்மென்று இருந்துவிட்டு பின் சகஜமாகிப்போனதாக கேள்விப்பட்டு பேனாவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.
கஷ்டப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் தேறி கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில் கண்ணில் பட்டவள்தான் ரஞ்சனி. அவளைப் பார்த்தவுடனே பிடித்துப்போனது. இவள்தான் என் மனைவி என்று உள்ளுக்குள் மணியடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் பேச முயற்சித்து வெற்றி பெற்றேன் ஒரு மழைநாளில். குடையில்லாமல் நனைந்தபடி நடந்தவளுக்கு ஓடிச்சென்று குடைகொடுத்துதவி வள்ளல் ஆனேன். சில மாதங்களில் என் உற்றத்தோழியாக மாறியவள் என் பிறந்த நாள் பரிசாக ஃபாரீன் பேனா ஒன்றை பரிசளித்தாள். தங்க நிறத்தில் மினுமினுத்தது அந்தப்பேனா. அழகிய வேலைபாடுகளுடன்கூடிய மூடியில் சின்னதாய் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. பேனாவைக் கண்ட பரவசத்தில் ரஞ்சனியின் கைகளில் முத்தமிட்டுவிட்டேன். அன்று கோபித்துக்கொண்டு போனவள் அதன் பிறகு என்பக்கம் திரும்பவேயில்லை. மன்னிப்புக்கேட்டு நான்கு நாட்கள் அவள் பின்னால் அலைந்து சோர்ந்தபோது அவள் விட்டுச் சென்ற தங்கநிற பேனா மட்டுமே உடனிருந்தது.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு வந்த ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் வாழ்க்கை என்பதின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.
இரண்டுமணி நேர மின்சார ரயில் பயணமும்,பெரும் மக்கள்கூட்டத்தினூடாக நடப்பதும் வாடிக்கையானபோது தளர்ந்திருந்த எனக்கு ரயிலில் என்னோடு பயணிக்கும் சேட்டுப்பெண் மீது இனம்புரியாத ஒன்று உருவானது.அவளின் தங்கநிற தேகமும்,பச்சை நிற கண்களும் மனசுக்குள் ஏதேதோ கற்பனைகளை உருவாக்கின. மெல்ல அவளுடன் பழக ஆரம்பித்தபோது அவளுக்கு பிடித்த புத்தகமொன்றை பரிசாக தந்தேன். உடனே முகம் மலர்ந்தவள் ரயில் நிலையமென்றும் பாராமல் என் புறங்கையில் முத்தமிட்டாள். ரஞ்சனியின் ஞாபகம் வந்து போனது. முத்தமிட்டதோடு நில்லாமல் பரிசாக தங்கப்பேனா ஒன்றை தந்துவிட்டு "வில் யூ மேரி மீ" என்றாள். என் ஆங்கில அறிவு அவளுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள். அவளுடன் ஊர்சுற்ற அடிக்கடி விடுப்பு எடுத்ததால் வேலை பறிபோனது.
திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தவள் அவளது நிச்சயதார்த்த செய்தியை சொல்லி இருசொட்டு கண்ணீர்விட்டு பிரிந்துவிட்டாள். கையில் பணமில்லாமல் ரணப்பட்ட நெஞ்சுடன் மும்பை தெருக்களில் சுற்றி அலைந்தபோதுதான் பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டது. பிக்பாக்கெட் அடிப்பதும்,சிறுசிறு பொருட்களை மார்க்கெட்டில் திருடுவதும் அவனது தொழில். வேறு வழியின்றி அதைக்கற்றுக்கொண்டு வயிற்றைக் கழுவினேன். அப்போதுதான் பேனாவில் கத்தியும் உண்டு என்பது தெரிந்தது.மும்பை நகர போலீஸில் ஒரு நாள் சிக்கியதில் அவர்கள் அடித்த அடியில் வலது கால் நரம்பு அறுந்துவிட்டது.
சில நாட்களில் வெளியே வந்துபோது ஒரு கூலிப்படையின் அறிமுகம் கிடைத்தது.
நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது அறைக்கதவு திறக்கும் சப்தம். அந்த அதிகாலையில் இரண்டுபேர் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். கருப்புத்துணியால் என் தலைமூடப்பட்டது. உயிர் பிரிகின்ற பொழுதிலும் பேனாவின் முனை உடைத்த நீதிபதியை திட்டிக்கொண்டேயிருந்தது மனம்.
Tuesday, July 29, 2008
| [+/-] |
அகல்யா – அறிவியல் புனைக்கதை |
சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும். சைக்கிளை முடிந்த அளவிற்கு வேகமா மிதிக்க ஆரம்பித்தேன். சாலையின் இரு பக்கமும் கனத்த இருள் கவிந்திருந்தது. பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், மழை எதிர்நோக்கும் தவளைகளின் சத்தமும் பெரிதாகிக்கொண்டே போனது. சைக்கிள் பஞ்சராகிவிட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. இவை எதைப்பற்றிய கவலையுமின்றி என் தோளை இறுகப்பற்றிக்கொண்டு ஏதோவொரு பாடலை பாடியபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.
அகல்யா என் உயிரில் கலந்துவிட்ட தேவதை. என்னுடன் கல்லூரியில் படித்தவள்.
பாறைமனதிற்குள் வேராக நுழைந்து இன்று விருட்சமாக மாறியவள். இன்று என் காதலி. நாளைய மனைவி. வழக்கமான சாதி பிரச்சினை என்றாலும் அவளது அப்பா ஊரின் மிகப்பெரிய மில்லுக்கு சொந்தக்காரர்.கொழுத்த பணம் படைத்தவர். அவரது கைகளில் சிக்கிவிடாமல் வெளியூர் சென்று வாழ முடிவெடுத்து இப்போது ஊரைவிட்டு சைக்கிளில் தப்பிச் செல்கிறோம். இன்னும் எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் டவுனுக்கு சென்றுவிட்டால் தப்பிவிடலாம்.
அகல்யாவின் அப்பாவிற்கு இந்நேரம் தெரிந்து ஆட்களுடன் கிளம்பி இருப்பார்.
இவை எதைப்பற்றிய கவலையுமின்றி பாடிக்கொண்டிருந்தாள் அகல்யா.
“அகல் கொஞ்சம் பாடாம வாயேன் ப்ளீஸ்மா”
“அதெல்லாம் முடியாது பாடுறது என் இஷ்டம்…நீ சைக்கிளை மிதி” சொல்லிவிட்டு சத்தமாக பாட ஆரம்பித்தாள். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய் அறிவுகெட்டவளே ஒங்கப்பன் இந்நேரம் அரிவாளுடன் கிளம்பி இருப்பான். நானே மிதிக்க முடியாம சைக்கிள மிதிக்கிறேன். இதுல பாட்டு ஒண்ணுதான் முக்கியமா?”
“சரி நான் பாடலை. ஆமா நாம எங்கே போறோம்?”
இதற்குமேல் இவளிடம் பேசி பயனில்லை. எப்போது விளையாடுவது என்று தெரியாது! எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும். நினைத்துக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தேன். என் தோளில் சாய்ந்தவள் மெல்ல என் இடுப்பைக் கிள்ளினாள். விளையாட்டுக்காரி! மறுநிமிடமே என் கோபம் மறைந்தது.
“கிள்ளாத செல்லம் வலிக்குது”
“எப்போ என்னை இறக்கி விடுவ? எனக்கு உட்கார முடியல ரொம்ப வலிக்குது”
“கொஞ்சம் பொறுத்துக்கமா இன்னும் நாலு கிலோமீட்டர்தான்”
மழை நின்றிருந்தது. காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அகல்யாவிற்கும் எனக்கும் நாளை திருமணம் என்பதை நினைத்து மனசெல்லாம் பூக்களாக மலர்ந்திருந்த நேரத்தில் டவுனை அடைந்தேன்.
டவுனிலிருக்கும் என் நண்பனின் தம்பி ஒருவனுடைய வீட்டிற்கு சென்று
கதவை தட்டியபோது நடு இரவு. கதவை திறந்து எங்களை அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் உள்ள குடிசைக்கு அழைத்துச் சென்றான் நண்பனின் தம்பி.
“அண்ணே நீங்களும் அண்ணியும் இன்னைக்கு ஒருநாள் இங்க தங்கிக்கிங்க,நாளைக்கு மத்த விசயத்த பேசலாம்” சொல்லிவிட்டு கொட்டாவிவிட்டபடி போய்விட்டான்.
குடிசைக்குள் கிடந்த கட்டிலில் களைப்புடன் அமர்ந்தேன்.
“அகல்யா உங்க அப்பாவை ஜெயிச்சுட்டேன். இனி என் கண்மணியை என்னைவிட்டு பிரிக்க யாராலும் முடியாது நாளைக்கு நம்ம கல்யாணம்”
அகல்யாவிடமிருந்து எந்த பதிலுமில்லை.
“இராத்திரி பதினோரு மணிக்கு வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலையேன்னு பாக்குறியா தாயி…உங்க அப்பன என்ன கேணையன்னு நினைசுட்டானா அந்த பொடிப்பய? நேத்துதான் மெட்ராஸுல இருந்து உன்னைய மாதிரியே ஒரு ரோபோவ ஆர்டர் செஞ்சு வாங்கிட்டுவந்தேன். நீன்னு நெனச்சு அதை கூட்டிக்கிட்டு போயிட்டான். இந்நேரம் பாட்டரி தீர்ந்து அதுவும் செத்திருக்கும்” சொல்லிவிட்டு சிரித்தார் அகல்யாவின் அப்பா. கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தாள் அகல்யா.
[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் புனைக்கதை போட்டிக்காக எழுதப்பட்டது]
-நிலாரசிகன்.

