வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்? விழியோரம் ஒருதுளி நீர் கசிந்து காற்றில் கரைந்தது...
மலர்விழியை சுற்றிலும் தலைவிரிக்கோலமாக அழுது கொண்டிருந்தனர் பெண்கள்.
மனத்திரையில் மலர்விழியை முதன்முதலாய் சந்தித்த நாட்கள் மலரத்தொடங்கியது..
பெண்களுக்கு பூக்கள் பிடிக்கும் என்பது இயற்கை. குறிப்பாக மல்லிகைப்பூக்களை அதிகம் விரும்புவர்.
கோவையில் கல்லூரியில் படிக்கும் மலர்விழிக்கு மல்லிகைப்பூக்கள் மீது காதல் என்றே சொல்லலாம்.
கல்லூரியில் சேர்ந்த புதிதில் "உங்களது பொழுதுபோக்கு என்ன?" என்கிற கேள்விக்கு
புத்தகம் வாசிப்பது,டிவி பார்ப்பது,அரட்டை அடிப்பது,உறங்குவது என்று ஏதேதோ எல்லோரும் சொன்னபோது
"மல்லிகைப்பூக்களுடன் பேசுவது" என்றொரு மென்மையான குரலில் மலர்விழி சொன்னது கேட்டு எல்லோரும் சிரித்தார்கள் என்னைத் தவிர.
ஏனெனில் பூக்களுடன் பொழுதுகள் கழிப்பது என் பொழுதுபோக்கு. நான் தங்கியிருக்கும் விடுதியின் ஜன்னலோரம் ஒரு செவ்வந்தி செடி உண்டு. இளமஞ்சள் வண்ணத்தில் சிறுசிறு மடல்கள் உள்மடங்கி
பூத்துச் சிரிக்கும் செவ்வந்தி பூக்களில் மனம் லயித்திருக்கிறேன். என்னைப் போன்றே மலர்விழிக்கும் பூக்கள் பிடிக்கும் என்பது தெரிந்தவுடன் ஆச்சரியத்துடன் அவளை பார்த்தேன்.
அழகி என்று யாராவது அவளைச் சொன்னால் அது பாவம். அவள் பேரழகி.
பெயருக்கு ஏற்ப அவளது கண்கள் "மலர்விழி"தான்!
முதலாமாண்டு சுற்றுலா செல்லும் போதுதான் மலர்விழியுடன் அதிகம் பேச நேரம்கிடைத்தது. ஊட்டிக்கு சென்று பொட்டானிக்கல் கார்டனில் பூக்கள்நிறைந்த பகுதியில் ஒவ்வொரு பூக்களாக ரசித்தோம். மலர் என் தோழியானது அப்போதுதான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு உணவருந்த அழைத்தாள் மலர். கவுண்டம்பாளையத்தில் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அவள் வீடு. வாசல் திறந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டேன். வீட்டைச் சுற்றிலும் மல்லிகைக்கொடி படர்ந்து பச்சைபசேலென்று வளர்ந்திருந்தது. அதில் பூத்திருந்த மல்லிகைப்பூக்களின் வாசம் உயிர்தொட்டது. இதென்ன ,மல்லிகைத்தோட்டத்திற்கு நடுவே ஒரு வீடா?
என்று மலைத்துபோனேன்.
தோட்டம் அவ்வளவு பெரிதாக இருந்தாலும் வீடு மிகச்சிறியதென்றே சொல்லமுடியும். காரணம் வறுமை. மலர்விழியின் அப்பா கோவை ரயில் நிலையத்தில் கூலியாக இருக்கிறார்.
மலர்விழியின் புத்தகங்களில் கூட ஏதாவதொரு பக்கத்தில் ஒன்றிரெண்டு மல்லிகைப்பூக்கள் உறங்கிகொண்டிருக்கும்.
------------------------------------------------------------------------------------------
சங்கின் ஒலிகேட்டு நிகழ்காலத்திற்கு வந்தேன்...
ரோஜாமாலைகளுக்கு நடுவே ஐந்தடி மல்லிகை பூவென கண்மூடி
படுத்திருக்கும் மலர்விழியை நான்கைந்துபேர் தூக்கிச் சென்று
பல்லக்கில் வைத்தார்கள்.
இந்த நிலையில் என் தோழியை பார்க்க மனமில்லாமல் அருகில் இருந்த பெட்டிக் கடைக்கு சென்று ஒரு சிகரெட் பற்றவைத்தேன். மனதை போலவே எரிய ஆரம்பித்தது என் சுயகொள்ளி.
வறுமைக்கு இரக்கமில்லையா? வறுமைக்கு மலர்விழி ஏன் உணவாகினாள்?
இடைப்பட்ட இந்த மூன்று வருடத்தில என்ன நடந்தது?
கல்லூரியின் கடைசி நாளில் என் கரம் பற்றி மெல்லிய குரலில் மலர்விழி பேசியது நினைவில் பூத்தது.
"என்னமோ தெரியலடா இந்த வாழ்க்கையே எனக்கு பிடிக்கல...எங்க வீட்ல செழிப்பா இருக்கறது அந்த மல்லிகைச்செடி மட்டும்தான். வறுமையோட வளர்ந்துட்டாலும் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி இருக்க போறேன்னு தெரியல...வசதியான வாழ்க்கை வாழ எனக்கு கொடுப்பினை இல்லையா?" பேசும்போதே அழுதுவிட்டாள். அந்த முகம் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.
வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதால்தான் இன்று மலர்விழிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாய்டா எப்படி இருக்கே...வந்து ரொம்ப நேரமாச்சா? சாரிடா ஷாட் முடிய நேரமாகிடுச்சு....
என்னருகில் வந்து கேட்ட மலர்விழியிடம் எதுவும் பேசத்தோன்றாமல் திரும்பிநடந்தேன்.
வழியெங்கும் சுவரொட்டியில் "ஆசைமல்லி" என்கிற அடைமொழியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள் நடிகை மலர்விழி.
Wednesday, April 16, 2008
| [+/-] |
மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்... (குட்டிக் கதை) |
Friday, March 21, 2008
| [+/-] |
ஊர்க்காசு (ஒரு பக்க கதை) |
"என்னங்க எனக்கொரு சந்தேகம்" தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும்
தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்.
முகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி "என்ன?" என்றார் ராதாகிருஷ்ணன்.
"நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல"
"ஆமா அதுக்கென்ன?"
"மூத்த பையன் வேலையில சேர்ந்து இரண்டு மாசமாச்சு அவனுக்கு 500 ரூபா கொடுத்தீங்க, ஆனா
வேலை தேடிகிட்டு இருக்கற நம்ம சின்னவனுக்கு 100 ரூபாதான் கொடுத்தீங்க, எனக்கு புரியலங்க ஏன் அப்படி செஞ்சீங்க?" தன் சந்தேகத்தை கேட்டாள் செண்பகம்.
"செண்பகம், மூத்தவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சுல்ல அவனுக்கு பணத்தோட அருமை புரிஞ்சிருக்கும். 500 ரூபா கொடுத்தாலும் அளவாதான் செலவு செய்வான்.ஆனா இளையவனுக்கு இது முக்கியமான பருவம். வேலை தேடும்போது அதிகமா பணம் கொடுத்தா,அப்பாதான் பணம் தர இருக்காரேங்கற எண்ணம் வந்துடும். அதுக்குதான் அவனுக்கு கம்மியா கொடுத்தேன்" தீர்க்கமான குரலில் சொல்லும் தன் கணவனை கண்டு வியந்தாள் செண்பகம்.
Tuesday, March 18, 2008
| [+/-] |
பைத்தியங்கள் (ஒரு பக்க கதை) |
இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது.
இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.
காலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.
கிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும்
இல்லை.
தாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.
கிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.
இறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.
குழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார்
ஒருவர்.
ஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.
அப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.
வானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.
கந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.
சத்தமிட்டு சிரிக்கத்துவங்கினான் கந்தபழனி.
பைத்தியம் பேச்சைக்கேட்டு பைத்தியமானோமே என்று
நொந்தவாறு வீடு திரும்பினர் மற்ற பைத்தியங்கள்.
Friday, February 29, 2008
| [+/-] |
ஒரு நாள் பின்னிரவில்... |
முன்பாடல் சுருக்கம்:
காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்
சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ
என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையானாய் நீ
உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை
சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை
வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?
வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...
கனவில் கூட நீ என்னை பிரிவதேன்?
கவிதையில் கண்ணீராய நான் கரைவதேன்?
ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..